என்ன செய்யப் போகிறது புதுவை என்.ஆர். காங்கிரஸ்?

தமிழக அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, புதுவை களம் சற்று மாறுபட்டது. கட்சிக்கு வாக்கு என்பதையும் தாண்டி, தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் செல்வாக்கைப் பொருத்துத்தான்... 
புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி
புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி



தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி அந்தக் கூட்டணியில் இணையுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பதை அறிய கட்சித் தொண்டர்களும், பிற அரசியல் கட்சியினரும் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

புதுவையில் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராகவும், அந்தக் கட்சி ஆட்சியின்போது முதல்வராகவும் இருந்த என்.ரங்கசாமி அதிலிருந்து வெளியேறி 7.2.2011-இல் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே, அந்தக் கட்சி புதுவையில் 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.  2016 தேர்தலில் தனித்துக் களம் கண்ட என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

கடந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துக் களம் கண்டன. காங்கிரஸ் - திமுக கூட்டணி தனியாகவும், இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக ஆகியவை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணியாகவும் போட்டியிட்டன.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 40.5 சதவீத வாக்குகளைப் பெற்று 17 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. 28.1 சதவீத வாக்குகளைப் பெற்ற என்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளை மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது. 16.8 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக 4 தொகுதிகளை வென்றது.  என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக இணைந்து போட்டியிட்டிருந்தால், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் வே.நாராயணசாமிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் போட்டியிட்டபோதிலும், இத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணி உருவானது. இதே கூட்டணி மக்களவைத் தேர்தல், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தொடர்ந்தாலும் வெற்றி பெற முடியவில்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சில நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது அவர்கள் கூறும் காரணம். ஆனால், தொடர் தோல்வியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸýக்கு தற்போதைக்கு பலமான கூட்டணிக் கட்சிகள் தேவை.

தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும் நிலையில், புதுவையில் திமுகவுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. எனவே, கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதுதான் என்.ஆர். காங்கிரஸூக்கு பொருத்தமாக இருக்கும். இதை மனதில் கொண்டுதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டவுடன், அவருக்கு என்.ஆர். காங்கிரஸ் நிறுவனர் தலைவர் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆனால், தமிழகத்துக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா வந்தபோது, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் அறிவித்துவிட்டனர். இந்த அறிவிப்பு புதுவைக்கும் பொருந்தும்.

இந்த அறிவிப்பு காரணமாக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிமுகவுடன் மட்டுமின்றி, பாஜகவுடனும் கூட்டணி வைக்க வேண்டிய  நிர்பந்தம் உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால், சிறுபான்மையினர் வாக்கு வங்கியை என்.ஆர். காங்கிரஸ் இழக்க வேண்டிய சூழல் உருவாகும். தனித்துப் போட்டியிட்டால், அதிமுக - பாஜக கூட்டணி பிரிக்கும் வாக்குகளால் மீண்டும் வெற்றி வாய்ப்பு பறிபோகும்.

தமிழக அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, புதுவை களம் சற்று மாறுபட்டது. கட்சிக்கு வாக்கு என்பதையும் தாண்டி, தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் செல்வாக்கைப் பொருத்துத்தான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி- தோல்வி எப்போதும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கட்சி, சின்னம், கூட்டணி என்பதைவிட வேட்பாளர்களை பார்த்துத்தான் பெரும்பாலான தேர்தல்களில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனால், மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல்களில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் - அதிமுக கட்சிகள் இருந்தபோதும், புதுவையில் பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக கொடி இல்லாமல்தான் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் மோடியின் பெயரை இக்கட்சிகள் பயன்படுத்தின.

புதுவையைப் பொருத்தவரை காங்கிரஸýக்கு நேரடி போட்டி என்.ஆர். காங்கிரஸ்தான். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்ற இடதுசாரிகளும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் சேரவே வாய்ப்பு அதிகம். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், புதுவையிலும் உடனடியாக கூட்டணி குறித்து ரங்கசாமி அறிவிப்பாரா? அல்லது தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடியும் வரை காத்திருந்து, கடைசியில் கூட்டணி குறித்து அறிவிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தொடர் தோல்வியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸýக்கு இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது மிக மிக முக்கியமானது. தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிவிப்பு என  எந்த முடிவாக இருந்தாலும் யாருடைய ஆலோசனையும் இன்றி, அதிரடியாக வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடுபவர் ரங்கசாமி. அதை கட்சித் தொண்டர்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்வது வழக்கம். கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் காத்திருக்கும் இந்த தேர்தலில் ரங்கசாமி, என்ன வியூகம் எடுக்கப் போகிறார் என்பதை அறிய புதுவை அரசியல் களம் காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com