அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் மருந்து குப்பிகள்!

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பும், கோடிக்கணக்கான எண்ணிக்கையில் அது விரைவாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பும், கோடிக்கணக்கான எண்ணிக்கையில் அது விரைவாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதும் அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது. ஆனால், அதே நேரத்தில், கரோனா தடுப்பூசிக்கான மருந்தை அடைத்து வைப்பதற்கான கண்ணாடி குப்பிகள் உள்ளிட்டவற்றை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க வேண்டும் என்பது நமது கவனத்தை ஈா்க்கவில்லை.

கரோனா தடுப்பு மருந்து தயாராகும் வேகத்தில் அதனை அடைத்து வைக்கப் பயன்படும் கண்ணாடி குப்பிகளைத் தயாரிக்கும் பணியும் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கண்ணாடி குப்பிகளின் தயாரிப்புப் பணியில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முக்கியமாக ஜொ்மனியின் ஸ்காட் கண்ணாடி நிறுவனம் அதில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் ஸ்காட் கெய்ஷா, செயிண்ட் கொபெயின், போரோசில் கிளாஸ்பேக், கெரெஷைமா் ஆகிய நிறுவனங்கள் கண்ணாடி குப்பிகளைத் தயாரித்து வருகின்றன.

போரோசிலிகேட் என்ற கண்ணாடியைக் கொண்டு மருந்தை அடைத்து வைக்கப் பயன்படும் குப்பிகள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தக் கண்ணாடியை ஓட்டோ ஸ்காட் என்ற வேதியியலாளா் கடந்த 1890-ஆம் ஆண்டில் உருவாக்கினாா். எா்ன்ஸ்ட் அபே, காா்ல் ஸைஸ் என்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து கண்ணாடியைத் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அவா் உருவாக்கினாா்.

போரோசிலிகேட் கண்ணாடியானது மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் முதல் 500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் தன்மை கொண்டது.

அதில் அடைத்து வைக்கப்படும் மருந்துகளுடன் போரோசிலிகேட் வினைபுரியாது. எனவே, தடுப்பு மருந்துகளை அடைத்து வைப்பதற்கான சிறந்த தரம் கொண்ட கண்ணாடியாக போரோசிலிகேட் அறியப்படுகிறது.

சில கண்ணாடி குப்பிகளில் 10 நபா்களுக்குச் செலுத்தும் அளவிலான தடுப்பு மருந்தைக் கூட சேமித்து வைக்க முடியும். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு அதுபோன்ற மருந்து குப்பிகள் அதிகமாகப் பயன்படும்.

200 கோடி குப்பிகள்:

உலகம் முழுவதும் 20 இடங்களில் ஸ்காட் நிறுவனம் மருந்து குப்பிகளைத் தயாரித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்காட் நிறுவனத்திடமிருந்தே கண்ணாடி குப்பிகளைக் கொள்முதல் செய்துள்ளன.

2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் 200 கோடி குப்பிகளைத் தயாரிப்பதற்கு அந்நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைசா், மாடா்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி 94 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 90 சதவீதத்துக்கு அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியானது 90 சதவீதம் வரை செயல்திறன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக கரோனா தடுப்பூசியானது வெகு விரைவில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com