மார்கோ பொம்மையும் மாறாத உண்மையும்

மனிதர்கள் பொம்மை போன்ற உயிரற்ற பொருள்களை மணந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலர் நாம் சிந்திக்கவே முடியாத பலவற்றை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மார்கோ பொம்மையுடன் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த உடற்கட்டு வீரர் யூரி டோலோச்சோ
மார்கோ பொம்மையுடன் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த உடற்கட்டு வீரர் யூரி டோலோச்சோ

இயற்கையும் உயிரினங்களும் கலந்து வாழும் இந்த உலகில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ்ந்து வருகின்றனர். நாகரிக வளர்ச்சியின் போக்கு ஆண்-பெண் இணைவைத் திருமண பந்தத்துக்குள் முடிச்சிட்டது. 'திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்', 'கல்யாணத்தைப் பண்ணி பார் வீட்டைக் கட்டி பார்', 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்பது போன்ற சொலவடைகளை பலர் கூற நாம் கேட்டிருப்போம். ஆனால் இவையெல்லாம் உண்மையா என்பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம். 

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த யூரி டோலோச்சோ என்ற உடற்கட்டு வீரர் மார்கோ என்ற பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை அந்த நாட்டில் பெண்கள் குறைவாக இருப்பார்களோ என்றால் இல்லை. கஜகஸ்தானில் 920 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்ற அடிப்படையில் அங்கு ஆண்-பெண் விகிதாச்சாரம் உள்ளது. இருப்பினும் பொம்மையை திருமணம் செய்துகொள்வது யூரி டோலோச்சோவின் தனிப்பட்ட விருப்பமாகவே இருந்திருக்க முடியும்.

மனிதர்கள் பொம்மை போன்ற உயிரற்ற பொருள்களை மணந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலர் நாம் சிந்திக்கவே முடியாத பலவற்றை திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த லியூ யே தன்னைத் தானே மணந்து கொண்டார். தன்னைத் தானே மணந்து கொள்ள பல்வேறு காரணங்கள் இருந்தாலும், யதார்த்தத்தின் மீதான திருப்தியின்மைக் காரணமாகவே இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். இதேபோன்று நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெனிபர் ஹோஸ் என்ற பெண் கடந்த 2003-ஆம் ஆண்டு தனது 30-ஆவது பிறந்தநாளில் தன்னைத் தானே மணந்து கொண்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு தைவானைச் சேர்ந்த 30-வயது பெண் சென் வெய் இஃக், சமூக அழுத்தத்தின் காரணமாக திருமணம் செய்ய முடிவெடுத்த பின்னரும், தனக்கான சரியான துணை கிடைக்காததால் தன்னைத் தானே மணந்து கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் கடந்த 2006-ஆம் ஆண்டு பாம்பு ஒன்றை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் பங்கேற்றால் தங்களுக்கு நல்லது நடக்கும் என சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் திருமணத்துக்கு பாம்பு வரவில்லை. பாம்பின் உருவப்படத்தைக் கொண்டு அந்த திருமணம் நடந்தேறியுள்ளது. 15 ஆண்டு கால காதலுக்குப் பின் சின்டி என்ற டால்பினை ஆங்கிலேயே பெண் ஒருவர் இஸ்ரேலில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியின் போது மணந்து கொண்டார். சூடானில் ஆட்டுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த சார்லஸ் டாம்ப் என்பவருக்கு ஆட்டுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆட்டின் உரிமையாளருக்கு வரதட்சனை கொடுக்கவும் சார்லஸ் டாம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நோய் தீர ஜோதிடரின் சொல்படி ஒரு நாயை மணந்து கொண்டுள்ளார்.

இதே போன்று சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த முன்னாள் படை வீராங்கனை ஈபிள் டவரை மணந்து கொண்டார். கடந்த 2008- ஆம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அந்த பெண், தனது பெயரை எரிகா லா டூர் ஈபிள் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு எய்ஜா ரிட்டா பெர்லினர் மார் என்ற பெண் பெர்லின் சுவரை மணந்து கொண்டார். நியூயார்க்கைச் சேர்ந்த ஆமி உல்ஃப் என்ற பெண் ரோலர் கோஸ்டரை மணந்துள்ளார். டேவ்கெட் என்பவர் கடந்த 2000-ஆம் ஒரு பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதே போன்று திபெத்திய எல்லை காவல்படையின் அதிகாரியான சமன் சிங் வேலைப் பளுவால் அவரது திருமணத்துக்கு வரமுடியவில்லை. இதனால் அவரது புகைப்படம் ஒட்டப்பட்ட பானையுடன் கடந்த 2005-ஆண்டு மணப்பெண் சல்விதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. 

திருமண மண்டபங்களே கிடைக்காத அளவுக்கு திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதே அளவு எண்ணிக்கையில் மணமுறிவு கோரும் வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. எனவே இந்த நிலை மாற, உயிரற்ற பொம்மையை பெண்ணாகவும், உயிருள்ள பெண்ணை பொம்மையாகவும் பார்க்கும் நமது மனநிலை மாற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com