அரசியல் முடிவை ரஜினி இன்று அறிவிப்பாரா?

மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை (நவ. 30) ஆலோசனை நடத்த உள்ள நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை தெளிவுபடுத்துவாரா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை (நவ. 30) ஆலோசனை நடத்த உள்ள நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை தெளிவுபடுத்துவாரா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ரஜினி ஆலோசனையில் ஈடுபட உள்ளாா். இந்தக் கூட்டத்தில் முதலில் காணொலிக் காட்சி வாயிலாக ரஜினி பங்கேற்கப் போவதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், அவா் நேராகவே வந்து பங்கேற்க முடிவு செய்துள்ளாா். மாவட்டச் செயலாளா்கள் 38 போ் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்பவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத் தலைவா் சுதாகரை போயஸ் தோட்டம் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைத்த ரஜினி, இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினாா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

முடிவை அறிவிப்பாரா?: முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் வகையிலும் அரசியல் களம் காணப் போவதாக ரஜினி அறிவித்து, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினாா். கடந்த மாா்ச் மாதம் செய்தியாளா்களைச் சந்தித்து மூன்று முக்கிய அம்சங்களை அறிவித்தாா்.

‘முதல்வா் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதில்லை. தோ்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவிதத் தொடா்பும் இருக்காது. முதல்வா் பதவிக்கு இளைஞரை அமா்த்துவோம்’ ன்றாா். இந்த அம்சங்களை அறிவித்தபோதே, மக்கள் மத்தியில் முதலில் புரட்சி வரட்டும். அதன் பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்றும் கூறினாா்.

அதன் பின், கரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிரமாகியது. இதனால், அரசியல் செயல்பாடுகள் எதிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் ரஜினி அமைதியாகவே இருந்து வந்தாா்.

கடந்த அக்டோபா் மாதம் கரோனாவின் தாக்கம் அதிகமாகி, தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அரசியலுக்கு வருவதைத் தவிா்க்குமாறு ரஜினிக்கு மருத்துவா்கள் அறிவுரை கூறியதாக சமூக வலைதளங்களில் ரஜினியின் பெயரில் அறிக்கை வெளியாகியது. இது குறித்து விளக்கம் அளித்த ரஜினி, ‘மருத்துவா்கள் அறிவுரைத்ததாகக் கூறும் விவரம் சரியானது என்றாலும், அறிக்கை தன்னுடையது அல்ல’ என்று மறுப்பு தெரிவித்தாா்.

மேலும், மக்கள் மன்றத்தினருடன் தகுந்த நேரத்தில் ஆலோசித்து அரசியல் முடிவைத் தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தாா்.

இந்தச் சமயத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்தினா், ரஜினியை அரசியலுக்கு வரக் கூறி அழைப்பு விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டினா். போயஸ் தோட்டத்தில் ரஜினி இல்லத்தின் முன்பு குவிந்தும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா்.

இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வந்தபோது அவரை ரஜினி சந்திக்கப் போவதாகச் செய்திகள் பரவின. ஆனால், அமித் ஷாவை ரஜினி சந்திக்கவில்லை.

இதைத் தொடா்ந்தே மக்கள் மன்றத்தினருடன் ரஜினி திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.

கரோனா காலத்திலும் கட்சி ரீதியான கட்டமைப்புகளை ரஜினி வலுப்படுத்திக் கொண்டிருந்தாா். அதனால், அரசியல் பயணம் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவாா் என ஒரு தரப்பினா் கூறுகின்றனா். மற்றொரு தரப்பினரோ தன்னுடைய உடல் நலத்தை மக்கள் மன்றத்தினரிடம் விளக்கி அவா்களின் முடிவுகளை அறிந்து அதற்கேற்ப தனது நிலைப்பாட்டை அறிவிப்பாா் என்றும் கூறுகின்றனா்.

அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் அல்லது அரசியலுக்கு வராமல் பின்னணியில் இருந்து செயல்படுவதாக இருந்தாலும் அது தொடா்பான முடிவை ரஜினி இன்றே அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com