பணப் பிரச்னைகளால் புறக்கணிக்கப்படும் முதியோர்கள்

இசை, பண்பாடு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே சில ஆண்டுகளாக முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கோப்பிலிருந்து
கோப்பிலிருந்து

இசை, பண்பாடு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே சில ஆண்டுகளாக முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கிராமப்புறங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைச் சிதைந்துவிட்டதே இதற்குக் காரணம். பெரிய கூட்டுக் குடும்பங்கள் சிறு, சிறு தனிக் குடும்பங்களாக மாறிவிட்டதால், வாழ்க்கைத் துணையின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், முதியோர் இல்லங்களைத் தேடிச் செல்லும் நிலைக்கு முதியோர்கள் ஆளாகிவிட்டனர்.

மாவட்டத்தில் தற்போது 21 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. இவற்றில் சில இல்லங்களே முழுமையான இலவச சேவையை மேற்கொள்கின்றன. ஆனால், கட்டணம் செலுத்தித் தங்கும் விதமான முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். ஓரிரு இல்லங்களில் மட்டுமே ரூ. 1,000, ரூ. 1,500 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல இல்லங்களில் ரூ. 7,000 முதல் ரூ. 12,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இந்த இல்லங்களில் ஆண்டுதோறும் முதியோர் சேர்க்கை விகிதம் 30 சதவீதமாக இருக்கிறது. ஆனால், பிள்ளைகளுடன் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என்கின்றனர் முதியோர் இல்லப் பொறுப்பாளர்கள். இதனால், முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.

கட்டணம் செலுத்தக்கூடிய முதியோர் இல்லங்களில் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றன. வீட்டில் பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதியோர் இல்லங்களைத் தேடிச் செல்லக்கூடிய நிலைமைக்கு வயதான பெற்றோர்கள் ஆளாகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது சொத்துப் பிரச்னைகளே.

சுய தொழிலை நம்பி வாழ்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் தங்களது பிள்ளைகளின் பொறுப்பின்மை, ஊதாரித்தனம் போன்றவை பிடிக்காமல், மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுவது ஏராளம்.

பிள்ளைகளால் வேதனை

தஞ்சாவூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள நெசவு வேலை செய்த முதியவர் கூறுகிறார்:

"தறி வேலை செய்து வீடு கட்டினேன் நான். எனது தாய், தந்தையை நான்தான் கடைசி வரை வைத்துக் காப்பாற்றினேன். எனக்கு 4 பிள்ளைகள். வயதான பிறகும் பிள்ளைகளுக்காக உழைத்தேன். எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டேன். ஆனால், அதெல்லாம் வீணாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் பிள்ளைகள் கடன் வாங்கி, ஆடம்பரச் செலவுகள் செய்ததால் கடனாளியாகினர்.

"அந்தக் கடன்களையும் நான் முடிந்தவரை திரும்பச் செலுத்தினேன். நான் சொல்லும் எந்த அறிவுரையையும் கேட்பதில்லை. எனக்கும் தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், எனக்குரிய மரியாதையும் குறைந்துவிட்டது. இதனால் விரக்தியாகி வீட்டைவிட்டு வந்து விட்டேன்.

"பிள்ளைகள் வருமானத்துக்கு ஏற்ற செலவுதான் செய்ய வேண்டும். பத்து ரூபாய் வருமானம் வருகிறது என்றால், அதில் இரண்டு ரூபாயாவது சேமிக்க வேண்டும். இப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் ஏற்படும் திடீர் செலவை சமாளிக்க முடியும். இதைத்தான் எங்க அம்மா, அப்பா கற்றுக் கொடுத்தனர். இதை பிள்ளைகளிடம் கூறினால் மதிப்பில்லை" என்கிறார் அவர்.

இதேபோல, 80 வயதுடைய நெசவு தொழிலாளிக்கு 4 பிள்ளைகள். இவர் தனது அண்ணனுடன் இணைந்து பாடுபட்டு வீட்டைக் கட்டியுள்ளார். இந்த ஒரு சொத்துக்காகப் பிள்ளைகள் மூலம் பல பிரச்னைகளை சந்தித்தேன் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வீட்டைப் பதிவு செய்வதற்காக மருமகள் பல்வேறு இடையூறுகள் செய்தார். என் மீது அவதூறாகக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். நான் வளர்த்த பிள்ளையை வைத்து என்னையே அடிக்க வைத்தார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், தொடர்ந்து சண்டை, சச்சரவுகளால் நிம்மதி இழந்துவிட்டேன். இதனால், முதியோர் இல்லத்தை நோக்கி வந்துவிட்டேன் என்றார் கண்ணீருடன்.

மளிகைக் கடை நடத்தி வந்த முதியவருக்கு இரு மகன்கள். இவர், பணப் பிரச்னை காரணமாக இரு மகன்களாலும் புறக்கணிக்கப்பட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்.

அங்கன்வாடியில் வேலை செய்த அம்மாவை சொத்து, பணம் இருந்தவரை பிள்ளைகள் நல்ல அணுகுமுறையுடன் நடத்தினர். அவர் வேலை செய்த காலத்தில் அவருடைய ஊதியத்தை பிள்ளைகளே வாங்கி செலவு செய்து வந்தனர். அவர் ஓய்வு பெற்றவுடன் அவர்களைப் பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், அம்மா மளிகைக் கடை நடத்தி வந்தார். அதுவும் கரோனா பொது முடக்கத்தால் மூடியே கிடந்ததால், வருவாய் இழப்பும் ஏற்பட்டது. பிள்ளைகள் உள்பட யாருடைய ஆதரவும் இல்லாததால், முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.

இதுபோன்ற நிலைமையில்தான் பெரும்பாலான முதியோர்கள் முதியோர் இல்லத்தைத் தேடிச் செல்கின்றனர். இதனால், முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

நிதியுதவியை எதிர்நோக்கும் முதியோர் இல்லங்கள்

இலவச சேவை மேற்கொள்ளும் இல்லங்களுக்குத் தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) மூலமும், தொண்டுள்ளம் கொண்ட தனி நபர்களிடமிருந்தும் நிதியுதவி கிடைத்து வந்தது. இதன் மூலம் இல்லங்களைச் நிதிப் பிரச்னையின்றி நடத்தி வந்தனர்.

அரசுத் தரப்பில் சில இல்லங்களுக்கு மட்டுமே நிதியுதவி கிடைத்து வருகிறது. ஆனால், இதுவும் போதுமான அளவுக்கு இல்லை. பெரும்பாலான இல்லங்கள் தனியார் நிறுவனம், தனி நபர் நிதியுதவியை நம்பியே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பொருளாதார பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்களும் வருவாய் குறைந்ததால், இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதனால், முதியோர் இல்லங்களுக்குக் கிடைத்து வந்த நிதியுதவி குறைந்துவிட்டது.

இதேபோல, தொண்டுள்ளம் கொண்ட பல தனி நபர்களும் பொருளாதார பிரச்னை காரணமாக முதியோர் இல்லங்களுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்திவிட்டனர். இதனால், முதியோர் இல்லங்களுக்குக் கிடைத்து வந்த நிதியுதவியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது என தஞ்சாவூர் சேவாலயா முதியோர் இல்லத்தினர் தெரிவித்தனர்.

இலவச சேவை மேற்கொள்ளும் இல்லங்களில் ஒரு முதியோருக்கு மாதத்துக்கு சுமார் ரூ.12,000 செலவாகிறது. தற்போது நிதியுதவி குறைந்து விட்டதால், முதியோர்களைப் பராமரிப்பதிலும் இல்லப் பொறுப்பாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், மாதந்தோறும் நிதிக்காகப் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

கரோனா பொது முடக்க நிவாரணம்கூட பல முதியோர் இல்லங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இல்லத்தினர் மனம் தளராமல் முதியோரைப் பராமரித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த இல்லங்களை எவ்வித தொய்வுமின்றி நடத்துவதற்கு அரசு அல்லது தனியார் நிறுவன நிதியுதவியை பெரும்பாலான இல்லங்கள் எதிர்நோக்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com