அந்தப் பெண்ணின் சேலை முந்தானையிலேயே இருந்தது 500 ரூபாய்ப் பணம்!

முதியவர்களின் எதிர்பார்ப்பு குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும்தான்... 
சாலையோரம் வசிக்கும் முதியவருக்கு உணவு அளிக்கிறார் ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனர் கே.மனிஷா.
சாலையோரம் வசிக்கும் முதியவருக்கு உணவு அளிக்கிறார் ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனர் கே.மனிஷா.

"முதியவர்களின் எதிர்பார்ப்பு குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் தான். அந்தச் சூழல் இல்லாமல் போகும்போதுதான், வீட்டை விட்டு வெளியேறும் சூழலுக்கு முதியவர்கள் தள்ளப்படுகின்றனர்"

ஆதரவற்றவர்களை மீட்டு இல்லங்களில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரோடு ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனர் கே. மனிஷா,  இச்சேவையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

முதியோர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதற்கான காரணத்தை ஆராயும்போது பெற்றோர்களும் குழந்தைகளும் தராசுத் தட்டில் சம பாதியாகவே உள்ளனர். முதியோர்கள் பலரும் பல்வேறு காரணங்களினால் வீட்டில் இருந்து விரட்டப்பட்டும், வீட்டிலிருந்து தானாகவே வெளியேறியும், மறதியினால் தன்னிலை மறந்து அறியாமையினாலும் ஆதரிக்க யாரும் இல்லாத நிலையிலும் ஆதரவற்ற நபராக சாலையோரம் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இவர்களில் சிலர் மகன், மகள், மருமகள், மருமகன் ஆகியோரின் கவனிப்பாரற்ற செய்கைகளாலோ, சிலர் தானாகத் தனிமையை நாடியோ, சிலர் வயதின் போக்கினால் பிடிவாதம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைத்தையும் தகர்த்து விவாதங்களுடன் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இவ்வாறு ஒருபுறம் யோசித்தால், மறுபுறம் மகன், மகள்கள் தங்கள் துணையின் விருப்பத்திற்கிணங்க வயதானவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் தனிக்குடித்தனம் என்ற பெயரில் பெற்றோர்களை ஒதுக்கிவிடுகின்றனர்.

மேலும் சிலர், என் பெற்றோர்கள், என்னை எந்த காலகட்டத்திலும் பராமரிக்கவில்லை என்று குறைகூறிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளி விடுகின்றனர். சிலர் பராமரிக்கத் தயாராக இருந்தும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள மறுக்கின்றனர். இரண்டு புறமும் என்று வைத்துப் பார்க்கும்போது விவாதங்களையே சந்திக்க நேரும்.

பெற்றோர்கள் தங்களுடைய வயதான காலகட்டத்தில் எதிர்பார்ப்பது எல்லாம் அன்பான, கனிவான பேச்சுக்கான ஒரு நபர் உடன் இருப்பதையும், தங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கும் சிலர், மூன்று வேளை உணவு, உடல் நிலை சரி இல்லாத காலகட்டத்தில் தன்னைப் பராமரிக்க உடன் சிலர், இறப்பின்போது இறுதிச்சடங்கை நிகழ்த்தவாவது அன்பிற்குரிய 4 பேர். ஆதரவற்ற நிலையில் சாலைக்கு வந்த பின்னும் தினமும் அவர்கள் வேண்டிக் கொள்வதெல்லாம் இவற்றையே.

என்னுடைய  பயணத்தில் சந்தித்த பலரும் முதியவர்களில் கூறும் கதைகளைக்  கேட்கும்போது கண்களில் கண்ணீர் வடிக்கும் வண்ணம் இருந்தாலும் உள்ளிருக்கும் காரணத்தைக் கேட்டறியும் போதே தெளிவுற முடிகிறது.

ஆனால் இப்படி ஒரு இன்னல்படும் நிலையிலும் சில முதியவர்கள் அவர்களின் மகன், மகளை விட்டுக் கொடுக்காமல், அவர்களை வெளிநபர்களிடம்தான் ஒரு அநாதை என்று கூறுகின்றனர்.

மேலும் சிலர் தன் தவறினால்தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து இனி இருக்கப் போகும் காலம் எப்படி அமையப் போகிறது  என்ற மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். மகன், மகள்கள் இருந்தும் சாலையில் உள்ள முதியோர்களும் சரி, யாரும் இன்றி தவிக்கும் முதியவர்களும் சரி, அவர்களுக்கென பெரிய மாளிகையையோ, வசதி வாய்ப்புகளையும் எதிர்பார்ப்பது இல்லை. முகம் தெரியாத மூன்றாவது ஒரு நபர் தன்னிடம் அமர்ந்து சில மணித் துளிகள் அன்பாகப் பேசிவிட்டுச் சென்றாலே மனம் இளகி விடுகின்றனர். நாள்தோறும் அவர்களைக் காணும் போது உறவாகி விடுகின்றனர். இது போதுமே நாம் வாழ என்று திருப்தி கொள்கின்றனர்.

இவ்வாறாக நான் ஒரு குடும்பத்தாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுடைய அடுத்த வினா? அப்போது ஏன் பணம் காசு வேண்டும் என்று கேட்கிறார்கள்? என்பதே. இதில் நாம் ஒரு சக மனிதனாக இருந்து யோசிக்க வேண்டியது என்னவென்றால், பாடுபட்டு உழைத்து, வேலைக்குச் சென்று, கையில் ஊதியம் வாங்கிப் பழக்கப்பட்ட நபரின் கையில் ஒருவேளை பணமே இல்லை என்றால். அந்த மனிதனால் அத்தகைய ஒரு நிலையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று.

இதை நான் உணர்ந்த தருணம், ஒரு முறை ஒரு வயதான 80 வயது மதிக்கத்தக்க கண்ணம்மா என்ற பாட்டியை மிகவும் கவலைக்கிடமான நிலையில் சாலையில் இருந்து மீட்டு இல்லத்தில் சேர்த்து, மீண்டும் பார்க்க செல்லும்போது அழுதுகொண்டே இருந்தார். குறை என்னவென்று கேட்ட போது, எந்தக் குறையும் இல்லை என்று கூறி, மேற்கொண்டு அழுகைக்கான காரணம் தன் கையில் சில்லறைக் காசு கூட இல்லையே? இங்கு யார் என்னை மதிப்பார்கள்? என்றார்.   நான் உடனே கையில் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு இனி எப்போதும் சிரித்த முகத்தோடு இருங்கள் என்றேன். அதன் பிறகு நான் செல்லும் போதெல்லாம் புன்னகை மலர்ந்த முகத்துடன் இருந்தார். அவர் இறக்கும்வேளையில்கூட அந்தப் பணம் அவரின் சேலை முந்தானையிலேயே இருந்தது.

பணத்திற்கான தேவை இல்லை என்றபோதிலும், பழக்கப்பட்ட அவர்களிடம் பணம் கையில் இருந்தால் அது மன ஆறுதல் அளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். இவற்றையெல்லாம் பொதுமக்களாகிய நாமே புரிந்துகொள்ள வேண்டும். வயதானாலும், சாலையோரம் வசித்தாலும் அவர்களுக்கும் சுய மரியாதை, மதிப்பு, தனிமனித பாதுகாப்பு, ஒழுக்கம், கற்பு என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன், நம் பார்வை அவர்கள் மீது இருக்க வேண்டும்.

ஒருமுறை நான் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு முதியவரை மீட்கச் சென்றபோது, அவர் மிகவும் மோசமான நிலையில் உடல் மேல் ஆடை இன்றி, காலில் சீழ் வடிந்து புழுக்கள் வைத்த புண்களுடன், சிதறிக் கிடக்கும் உணவு மற்றும் தண்ணீருடன் பேருந்து நிறுத்தத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அவரைச் சுற்றிலும் கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மனிதர்கள் நடமாட்டம் நிறைந்த அந்த பகுதியில் ஒருவர் மனதிலும் உதிக்கவில்லை சக மனிதன்தானே இந்த வயதான கிழவரும் என்று. மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. “ஐயோ, என்னை காப்பாற்றுங்கள்” என்றது அந்த முதியவரின் குரல்.

முதுமை அடையா உயிர்கள் இல்லை, மூன்றாம் மழலைப் பருவமே முதுமை. நடையிழந்து, களையிழந்து, ஒளியிழந்து, வலுவிழந்து ஓடென உழைத்த நம் பெற்றோர்களை,  அன்பைக் கடலென அளித்து, மழலையை வளர்த்து, ஆசை கனவுகளை இழந்து, தன் குழந்தைக்கென வாழ்ந்த நம் பெற்றோர்களை, படைசூழ் துன்பங்களிலும் நம்மைக் காத்து, பக்குவம், யதார்த்தங்களை நமக்குள் வளர்த்து, சமுதாயத்தில் இளைஞன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்திய நம் பெற்றோர்களை, அன்பொன்றே போதும் என்றென்றும் முதுமைப் பருவத்தில், மூன்றாம் மழலைப் பருவத்தில், பிறர் உதவி நாடும் பருவத்தில், பாசத்திற்கென ஏங்கும் பருவத்தில் நாம் கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம். ஒவ்வொரு வினைக்கும் அதற்காக எதிர்வினை உண்டு. மறந்தும் தவறிழைத்து விடாதீர்கள், ஏனென்றால், இன்று அவர்கள், நாளை நாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com