மகன்களால் புறக்கணிக்கப்பட்ட தாய், தந்தை, மாட்டுத் தொழுவத்தில்!

சொந்த நிலத்தைப் பிரித்துக் கொடுத்து, கடனும் வாங்கிக் கொடுத்த பெற்றோர், யாரோ ஒருவர் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் வசிக்க, மாதம் ஆயிரம் ரூபாய்கூட தர மறுத்து வாழ்கிறார்கள் இரு மகன்கள்.
மொரப்பூர் அருகேயுள்ள ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் மகன்களால் புறக்கணிக்கப்பட்ட விவசாயி சின்னதுரை, அமுதா தம்பதியர்.
மொரப்பூர் அருகேயுள்ள ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் மகன்களால் புறக்கணிக்கப்பட்ட விவசாயி சின்னதுரை, அமுதா தம்பதியர்.

சொந்த நிலத்தைப் பிரித்துக் கொடுத்து, கடனும் வாங்கிக் கொடுத்த பெற்றோர், யாரோ ஒருவர் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் வசிக்க, மாதம் ஆயிரம் ரூபாய்கூட தர மறுத்து வாழ்கிறார்கள் இரு மகன்கள்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே மகன்களால் புறக்கணிக்கப்பட்ட தாய், தந்தையர் வாழ்வாதரத்துக்கு வழியின்றித் தவித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், ஆர்.எஸ். தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சு.சின்னதுரை (67). இவரது மனைவி அமுதா (62). இந்த தம்பதியருக்கு இரு மகன்கள்.

இவர்களில் ஒருவர் சொந்தமாக லாரி வைத்து சுய தொழில் செய்துவருகிறார். இன்னொரு மகன் திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகன்கள் இருவருக்கும் வங்கியில் கடன் பெறுவதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்கு ஏதுவாகவும் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தினை பாகப் பிரிவினை செய்து சின்னதுரை - அமுதா தம்பதியர் பெயரில் இருந்த நிலங்களை, தமது மகன்கள் இருவருக்கும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

அதேபோல, மொரப்பூரில் தனியார் ஒருவரிடம் ரூ. 20 லட்சம் கடன் பெற்று, மகன்கள் இருவருக்கும் தலா ரூ. 10 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், மகன்கள் இருவரும் கடன் தொகையினை உரியவருக்கு திருப்பிச் செலுத்தவில்லையாம். அதேநேரத்தில் தாய், தந்தை இருவருக்கும் தங்க இடம் தராமலும், உணவு கொடுக்காமலும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சின்னதுரை, அமுதா கூறியது:

"எங்கள் மகன்கள் இருவரும் எங்களைப் புறக்கணித்துவிட்டதால், நண்பர் ஒருவரின் மாட்டுத் தொழுவத்தில் அடைக்கலம் கேட்டு வசித்து வருகிறோம். வயதான நிலையில், வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் உள்ளோம். எங்களின் இரு மகன்களுக்கும் விவசாய நிலம், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை உருவாக்கினோம். ஆனால், மகன்கள் இருவரும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். எங்கள் மகன்களுக்கு நாங்கள் வழங்கிய நிலங்களைத் திரும்பவும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, அரூர் சார் ஆட்சியர் மு. பிரதாப் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம்.

"எங்கள் கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், வருவாய்த் துறை சார்பில், மகன்கள் இருவரும் எங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1000 வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், எங்கள் மகன்கள் இருவரும் எங்களுக்கு அதையும்கூட வழங்காமல் புறக்கணித்துவிட்டனர்" என்கிறார்கள் சின்னதுரை, அமுதா தம்பதியர் கண்ணீருடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com