சுறு சுறு சுந்தரியம்மாள்!

'டீச்சர் எல்லாத்தையும் சுத்தமா கூட்டிட்டேன், பாத்திரங்களைக் கழுவி வெச்சிடவா?...' என அந்த முதியோர் இல்லத்தில் எப்போதும் சுறுசுறுவென இருப்பவர்தான் சுந்தரியம்மாள்.
சுந்தரியம்மாள்
சுந்தரியம்மாள்

'டீச்சர் எல்லாத்தையும் சுத்தமா கூட்டிட்டேன், பாத்திரங்களைக் கழுவி வெச்சிடவா?...' என அந்த முதியோர் இல்லத்தில் எப்போதும் சுறுசுறுவென இருப்பவர்தான் சுந்தரியம்மாள். வயது 65.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரிலுள்ள செல்லம் நகரில் உள்ளது 'கிராம சுயராஜ்' தொண்டு நிறுவனத்தின் மூத்த குடிமக்கள் இல்லம். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்த இல்லத்துடன் குளத்தூர் அழகுநகரில் ஓர் இல்லமும், குளித்தலை அய்யர்மலையில் ஓர் இல்லமும் நடத்தி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையிலிருந்து இவரது தம்பி, அழைத்து வந்து இல்லத்தில் சேர்த்திருக்கிறார். வழக்கமாக வாங்கி வைக்கப்படும் செல்லிடப்பேசி எண் ஓராண்டுக்குப் பிறகு செயல்படவில்லை. பிறகொரு நாள் சுந்தரியம்மாளைப் பார்க்க வந்த உறவுக்காரப் பெண் ஒருவர்தான் சொல்லியிருக்கிறார், சுந்தரியம்மாளின் தம்பியும் இறந்துவிட்டார் என்று.

சுந்தரியம்மாளுக்குத் திருமணமும் ஆகவில்லை. அதனால், இப்போதைய நிலையில், எந்த ஆதரவும் இல்லாதவர்.

மெலிந்த உடல், வெளுத்த தேகம். மெல்ல அருகில் போய் உட்கார்ந்து புகைப்படம் எடுக்க முயற்சிக்கும்போதே, கன்னத்தில் கை வைத்துப் பார்க்கிறார். போஸ் கொடுக்கிறார் எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை.

'சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க?' எனக் கேட்டால், உப்புமா சாப்பிட்டதாகக் கூறுகிறார். இவரைப் போன்ற ஆதரவற்ற முதியோரைச் சந்திக்கும்போது 'என்ன சாப்பிட்டீங்க?' எனக் கேட்பது ஓர் மந்திர வரிகள். ஏனென்றால் அவர்களை இப்படிக் கேட்பதற்கு யாருமில்லை.

'உங்களுக்கு எந்த ஊர்?, படிச்சிருக்கீங்களா?' என்றோம். 'கரூர் வாங்கல். ஒம்பதாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். அதுக்குமேல படிக்க முடியல. இப்போ வயது 40க்கும் மேல இருக்கும். அப்புறம் அப்படியே போயிட வேண்டியது தான்' என்கிறார் சுந்தரியம்மாள்.

எந்தத் தடங்கலும் இல்லாத பேச்சு. தம்பி இறந்த தகவலைச் சொன்னாலும் நம்பமாட்டார் என்கிறார் இல்லத்தின் சமூகப் பணியாளர் எம். புவனேஸ்வரி. சுந்தரியம்மாளிடம் அதன் பிறகு எதனையும் கேட்டுப்பெற முடியவில்லை. நினைவுகள் இழந்திருக்கிறார்.

அவரைப் பற்றி புவனேஸ்வரி விவரிக்கிறார்:

'எந்த நேரமும் சுறுசுறுப்பாகவே இருப்பார் சார். இல்ல வளாகத்திலுள்ள எலுமிச்சை மரத்தில் பழங்களை அவராகவே பறித்துத் தன்னிடமுள்ள சிறிய டப்பாக்களில் அறுத்துப் போட்டு உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து வைத்துக் கொள்வார். வளாகத்திலுள்ள பூக்களைப் பறித்து நூலால் கட்டித் தானும் வைத்துக் கொள்வார். உடனிருப்போருக்கும் தருவார்.

எல்லா பாத்திரங்களையும் கழுவி வைப்பார். பரபரவெனக் கூட்டுவார். கூட்டும்போது கிடைக்கும் பொருட்கள் நல்லவை என அவர் கருதினால், உடனே தனது படுக்கைக்கு அருகே கொண்டு போய் வைத்துக் கொள்வார்.

ஒன்றே ஒன்றுதான். பௌர்ணமி வந்தால் மனநிலை கொஞ்சம் கோபமாக இருக்கும். 'வாங்க டீச்சர்' என்ற அந்த வரிகள், 'என்னடீ...' என்றுதான் தொடங்கும். பழகிப் போனது. நாங்கள் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டோம். விலகி வந்துவிடுவோம். அன்று முழுவதும் யாராவது அருகில் சென்றால் ஏகவசனம்தான்' என்கிறார் புவனேஸ்வரி.

வேறு எந்த முதியவரிடமும் இல்லாத அளவுக்கு சுந்தரியம்மாளின் படுக்கையைச் சுற்றி ஏராளமான பொருள்கள் குவிந்துகிடக்கின்றன. நமக்கு அவை தேவையற்ற குப்பைகள். சுந்தரியம்மாளுக்கு அப்படியல்ல. அவைதான் சுந்தரியம்மாளின் உறவுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com