முதியோர் கிடைத்த வரம்: காலம் சொல்லும்வரை காத்திருக்கக் கூடாது

உலகத்தில் எந்த உயிர் ஜீவராசியும் தாய் இல்லாமல் பிறந்ததே இல்லை. பிறக்கப் போவதும் இல்லை
தனித்து வசித்து வரும் மூதாட்டி அம்சவள்ளி
தனித்து வசித்து வரும் மூதாட்டி அம்சவள்ளி

உலகத்தில் எந்த உயிர் ஜீவராசியும் தாய் இல்லாமல் பிறந்ததே இல்லை. பிறக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட உலகத்தில், காலங்கள் மாறுவதால், கோலங்களும் மாறிப் பெற்றெடுத்தவர்களை, வயது முதிர்ந்த பெரியவர்களை  சமுதாயம் அலட்சியப்படுத்தி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது மிகவும் ஆபத்தானது.

அந்தக் காலத்தில் வீட்டில் முதியவர்கள் இருந்தால், 100 மருத்துவருக்குச் சமம். 50 விஞ்ஞானிக்குச் சமம். 10 அரசனுக்குச் சமம். மொத்தத்தில்  அந்த சந்ததியினரின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோதீஸ்வரூபத்திற்குச் சமம்.

பிள்ளைப்பேறு முதல், குழந்தை வளர்ப்பு, ருது அடைதல், திருமணம் வைபவம் மற்றும் கருத்தரிக்க வழங்கப்படும் மருத்துவம் மற்றும் உயிர்க் காக்கும் வரை அனைத்தையுமே, வீட்டின் முதுகுத் தூண்களான முதியவர்கள் ஆர்ப்பரிப்பு இல்லாமல், அமைதியாக, அடக்கத்தோடு கவனித்தார்கள், வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால், தற்போது, சுயநலமிக்க இந்தக் காலத்தில் பெரும்பாலான இடங்களில் முதியவர்களே இருப்பதில்லை. வீட்டில் இருக்கும் முதியவர்களை மதிக்காமலும், அவர்கள் சொல் கேட்காமல் அலட்சியப்படுத்தியும் வருகிறார்கள். தன்னைப் பெற்றெடுத்து, கண் கொட்டாமல் கண் விழித்துப் பாதுகாத்து வளர்த்தவர்கள் என்பதையே மறந்து செயல்படுகிறார்கள்.

அப்படித்தான், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், சித்தாம்பூர் ஊராட்சி, கோரையாறு, காளியம்மன் கோயில் அருகே சிறிய ஒட்டுக் குடிசையில் 70 வயதிலும் தனித்து வாழ்ந்து வருகிறார் ஒரு மூதாட்டி. அம்சவள்ளி என்ற இந்தப் பாட்டியின் கணவர், மரம் ஏறியும் அலுமினியப் பாத்திரம் விற்றும் குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். 3 மகள்கள். மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

அம்சவள்ளியின் கணவர் உடல் நிலை சரியில்லாமல், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்சவள்ளி மட்டும் இங்கொரு குடிசைக்கு மாதம் ரூ. 300 வாடகை கொடுத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார். கோயிலில் தேங்காய் பழம் அர்ச்சனைத் தட்டு விற்கிறார். மற்ற நேரங்களில் சாலைகளில் உள்ள மதுப்புட்டிகளை சேகரித்து வந்து, எடைக்கு கொடுத்து  வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன், அம்சவள்ளி மூதாட்டிக்கு கரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று, நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இதில் வேதனை என்னவென்றால் இந்த நேரத்தில்கூட பெற்ற மகள்கள் வந்து பார்க்கவில்லை என்பதுதான். கோரையாற்றுப் பாலம் அருகேயுள்ள அக்கம் பக்கத்தினர்கள்தான், 70 வயது அம்சவள்ளிக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

நமது வீட்டில் முதியோர்கள் இருப்பது நாம் செய்த பாக்கியம். நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். முதியோர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் வேதவாக்கை அலட்சியப்படுத்தாதீர்கள் எனக் காலம் சொல்லும் வரை காத்திருப்பது நல்லதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com