கைவிட்ட குடும்பம்: கை கொடுக்கும் கோயில்கள்

வயது முதிர்ந்த  பருவத்தில் தான் மனிதனுக்கு துணை எவ்வளவு அவசியம் என்பதையும், இல்வாழ்க்கையின் தேவையினையும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உணர்த்திடும்.
ஆண்டியப்பன்
ஆண்டியப்பன்

மனித வாழ்வின் இன்னொரு குழந்தைப் பருவமே வயது முதிர்ந்த பருவம். இப்பருவத்தில்தான் மனிதனுக்கு துணை எவ்வளவு அவசியம் என்பதையும், இல்வாழ்க்கையின் தேவையினையும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உணர்த்திடும்.

பலருக்கு மனைவி, பிள்ளைகள் உறவுகளுடன் முதியோர் பருவம் மெல்லக் கழிந்துவிடும். ஒரு சிலருக்கோ உறவுகளால் அலைக்கழிக்கப்பட்டு அசாதாரணமான சூழலில் நாள்கள் (வாழ்வு) கழிந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு ஆதரவற்ற, உறவுகளால் கைவிடப்பட்ட அனேக முதியவர்களுக்கு, திக்கற்றவற்றவர்களுக்குத் தமிழகத்தில் தெய்வத் திருத்தலங்களே துணையாக இருக்கின்றன.  

திருச்செந்தூரில் திருச்செந்திலாண்டவரே துணை என முருகப் பெருமானை நம்பித் தர்மம் எடுத்து வாழ்ந்து வருகின்றனர் எண்ணற்ற முதியோர்.

குடும்பத்தை விட்டுக் கோயிலை நம்பி வாழும் விவசாயி

திருச்செந்தூர் சன்னதித் தெருவில் தள்ளாடும் வயதில் தர்மம் எடுத்து பசியாற்றிக்கொண்டிருப்பவர்களில் விவசாயி ஆண்டியப்பனும் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தைச் சேர்ந்த செவ்வல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (85).

வானம் பார்த்த வறண்ட பூமியான செவ்வல்பட்டியில் பிறந்த அவர், 5 ஆம் வகுப்பு வரை அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு தங்களது விவசாய தோட்டத்தில் வற்றல், மல்லி பயிரிட்டு தனது இரு மகன்களைப் படிக்க வைத்துள்ளார். அந்த இரு மகன்களும் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ள நிலையில், மனைவி, மருமகள்கள் மற்றும் பேத்தி, பேரன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

மனைவி மற்றும் குடும்பத்துடன் வயது முதிர்ந்த காலத்தில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தாலும், உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் வீட்டை விட்டு வெளியேறியவர் ஊர்க்காரர்களிடம் ரூ. 100 கடன் வாங்கிவிட்டு, பேருந்து ஏறி திருச்செந்தூர் வந்துள்ளார்.

இது நாள் வரையில் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகன்களுக்கும் தெரியாமல் திருச்செந்தூர் கோயில் செல்லும் வழியில் காத்திருந்து தர்மம் எடுத்து வாழ்ந்து வருகின்றார்.

உறவுகள் இருந்தும் இங்கு வந்து ஏன் சிரமப்படுகின்றீர்கள் என்று கேட்டதற்கு, “என்னை அவர்கள் கைவிட்டு விட்டார்கள்…அதனால் ஏற்பட்ட வெறுப்பினால் இங்கு வந்து வாழ்கிறேன். எங்களைப் போன்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களின் நிலை நாட்டுக்கு தெரிய வேண்டும்” என்கிறார் ஆண்டியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com