'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு'

எனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என தனது அனுபவ வார்த்தைகளில் எச்சரிக்கை செய்கிறார் முதியவர் அர்ஜுனன்.
அர்ஜுனன்
அர்ஜுனன்

எனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என தனது அனுபவ வார்த்தைகளில் எச்சரிக்கை செய்கிறார் முதியவர் அர்ஜுனன்.

திருப்பூர் பெரியாயிபாளையத்தில் உள்ள சிவசர்மிளா ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான இல்லத்தில் தங்கியுள்ள திருநெல்வேலி மாவட்டம் ஜெயமாதாபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (70) என்பவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர் ஜெயமாதாபுரம் என்றாலும் 45 ஆண்டுகளுக்கும்  மேலாக மதுரையில் வசித்து வந்தேன். மேலும், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, சென்னை, திருச்சி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்துள்ளேன். எனது மனைவி இசக்கியம்மாள் (55). புற்றுநோய் காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இரு மகன்களும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். எனது மனைவி இறந்தவுடன் எனது மூத்த மகன் என்னை சரிவர கவனித்துக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். இதன் பிறகு பிழைப்புத் தேடி பல இடங்களில் அலைந்த நிலையில் சுருளிமலையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தேன்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்து தவறி விழுந்ததில் வலது கால் எலும்பு முறிந்துவிட்டது. இதன் பிறகு என்னுடைய சேமிப்புப் பணம் ரூ. 10 ஆயிரம் பெரிய மகனிடம் இருந்ததால் அவர் மதுரை மேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அதன் பிறகு ஓரளவு மட்டுமே கால் குணமடைந்ததால் வள்ளியூரில் உள்ள கோயிலுக்கு பெரிய மகன் கார் வைத்து அழைத்துச் சென்றார். பின்னர் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றவர் பிறகு வரவேயில்லை.

இதன் பிறகு ஒரு வழியாக எனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்று சில மாதங்கள் இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிழைப்புத் தேடி திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தேன். ஆனால் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்ததில் மீண்டும் எனது வலது காலில் அடிபட்டது. அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் என்னை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு ஏறக்குறைய 9 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தபோது சமூக நலத்துறையில் பணியாற்றி வந்த யோகலட்சுமி என்பவர் அங்கு வரும்போது அறிமுகமானார். இதன் பிறகு கால் ஓரளவு குணமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். இங்கு என்னை நன்கு கவனித்துக் கொள்கின்றனர். நாள்தோறும் மூன்று வேளையும் உணவு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருந்து, மாத்திரைகளும் வாங்கிக் கொடுக்கின்றனர். நான் 3 பிள்ளைகளைப் பெற்ற போதிலும் சம்பாதித்த பணத்தை அவர்களுக்கே செலவழித்ததால் தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

எனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. ஆகவே, பிள்ளைகளை நம்பாமல் வேலை செய்யும்போதே சிறிய தொகைகளை கடைசி காலத்துக்கு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அர்ஜுனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com