கடந்த இரு மாதங்களுக்கு முன் வேலூர், பாகாயத்தில் கைவிடப்பட்ட இரு மூதாட்டிகளை மீட்கும் சமூக நலத்துறையினர்
கடந்த இரு மாதங்களுக்கு முன் வேலூர், பாகாயத்தில் கைவிடப்பட்ட இரு மூதாட்டிகளை மீட்கும் சமூக நலத்துறையினர்

'இதோ வந்துவிடுகிறேன் அம்மா'

பெற்று வளர்த்து வாழ்வளித்த தாய், தந்தையரை வயது முதிர்ந்த காலத்தில் பேருந்து, ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் கைவிட்டுச் செல்லப்படுவது சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


பெற்று வளர்த்து வாழ்வளித்த தாய், தந்தையரை வயது முதிர்ந்த காலத்தில் பேருந்து, ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் கைவிட்டுச் செல்லப்படுவது சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு கைவிடப்பட்டு தற்போது யாருமற்ற அநாதைகளாகக் காப்பகங்களில் தங்கள் இறுதி நாள்களை எண்ணி வரும் அந்த பெரும்பாலான முதியோர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டுள்ள வரி,  "இதோ வந்துவிடுகிறேன் அம்மா...'

ஒருபக்கம் முதியோர் நாளைக் கொண்டாடுவதாகக் கூறிக் கொண்டாலும் இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இவையெல்லாம் வெறும் சம்பிரதாயமாக  மாறிவருவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதும்கூட.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் முதியோர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதும், பேருந்து, ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் கைவிடப்படுவதும் அல்லது அவர்களாகவே வீடுகளைவிட்டு வெளியேற நேரிடுவதும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது மட்டுமின்றி மறைமுகமாக கருணைக் கொலைகள் செய்யப்படுவதும் பெருகி வருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு அல்லது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் சாலையோரங்களில் அலையும் முதியவர்களை மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் மீட்டுக் காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருகின்றனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் மட்டுமே 113 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 70 நாள்கள் அவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, தங்குமிடம் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்பிய முதியவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், வீடுகளுக்கு செல்ல விரும்பாத முதியோர்கள் இந்த மாவட்டங்களில் உள்ள மூன்று காப்பகங்களில் சேர்க்கப்பட்டுப்  பராமரிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி.

மேலும் அவர், 'பல்வேறு காரணங்களால் முதியவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுவதும், அவர்களாகவே வெளியேறி விடுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலூர் அருகே பாகாயத்தில் 80 வயதைக் கடந்த இரு மூதாட்டிகள் காரில் அழைத்து வரப்பட்டு சாலையோரத்தில் கைவிட்டுச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்து அதிகாரிகள் விரைந்து சென்று அந்த மூதாட்டிகளை மீட்டு அரியூரிலுள்ள தஞ்சம் முதியோர் காப்பகத்தில் சேர்த்துப் பராமரித்து வருகிறோம். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த முதியவர்களால் தற்போது வரை தங்களது ஊர், விவரங்களைத் தெரிவிக்க இயலவில்லை. இதேபோல், குடியாத்தம் அருகே இரு மூதாட்டிகள் கடந்த மாதம் மீட்கப்பட்டு வாணியம்பாடியில் உள்ள சரணாயலம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுப்  பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு முதியவர்கள் பெரும்பாலும் அவர்களது சொந்த மகன், மகள்களாலேயே கைவிடப்படுவதுதான் வேதனைக்குரியதுதாகும். இதற்கு ஒரு வகையில் வேலைவாய்ப்பு பிரச்னையும், வறுமையும் காரணம் என்றால் அதைவிட முக்கிய காரணம் முதியோர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையே புரிதல்களில் ஏற்படும் விரிசல்கள் அதிகரிப்பதாகும்.

பொதுவாக முதுமை அடைந்தவர்களுக்கு தனிமை உணர்வு அதிகரிப்பது இயல்பானது. இதன் மூலம், தங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, தேவைகளைக் கேட்பதில்லை, பூர்த்தி செய்வதில்லை என்கிற எண்ணம் வந்துவிடும்.

இத்தகைய எண்ணங்கள் முதியவர்களுக்குத் தோன்றாமல் இருக்க அவர்களிடம் அனுசரணையாக பேச வேண்டியது இளையவர்களின் பொறுப்பாகும். இதுதொடர்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களின்போது வீட்டில் உள்ள முதியவர்களிடம் அன்பு, அனுசரணையாக பேச வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், தற்கால சூழ்நிலையில் இளையவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரம், கலாசார ரீதியான நெருக்கடிகளையும், மாறுபாடுகளையும் புரிந்துகொண்டு முதியவர்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகும் என்றார்.

கைவிடப்பட்ட நிலையில் சாலையோரங்களில் உள்ள முதியவர்களை மீட்டு விசாரிக்கையில், பெரும்பாலானோர், 'இதோ வருகிறேன் அம்மா..' எனக் கடைசியாகத் தனது மகன் அல்லது மகள் சொல்லிச் சென்ற வார்த்தைகளைத்தான் கூறுகின்றனர்.

தங்களை அழைத்துச் செல்ல மணிக்கணக்கில் பெற்ற பிள்ளைகளே திரும்பி வரவில்லை என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இதுவே அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்து தீரா ஏக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. இதனால், காப்பகத்தில் தேவையான பராமரிப்பு வசதிகள் கிடைத்தாலும் அவர்கள் நினைவுகளற்ற ஜீவன்களாகத்தான் வாழ்வதாகக் கூறுகிறார் ஒன்  ஸ்டாப் சென்டர் அமைப்பின் நிர்வாகி பிரியங்கா.

வறுமையால் கைவிடப்படுவோர் ஒருபுறம் என்றால் கார்களில் வந்தும் கழற்றி விடப்படுகிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம், என்ன பாடுபடும் அந்த முதியவர்களின் மனசு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com