உலக நாடுகளில் முதியவர்களின் வாழ்நிலை

முதியவர்களின் வாழ்நிலை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகள், அரசுகளின் சலுகைகள் போன்றவற்றால் முதியவர்களின் வாழ்நிலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
உலக நாடுகளில் முதியவர்களின் வாழ்நிலை

முதியவர்களின் வாழ்நிலை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகள், அரசுகளின் சலுகைகள் போன்றவற்றால் முதியவர்களின் வாழ்நிலையில் மாறுபாடு ஏற்படுகிறது.

முதுமை என்பதைவிடவும் முதுமையில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளும் பொருளாதார சிக்கல்களுமே பெரும் சவால்களாக மாறுகின்றன. இவற்றை எதிர்கொள்ள ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு உதவுமேயானால், அங்கு முதியவர்களின் இறுதிக் காலம் நிச்சயம் ஓய்வுக்காலமாகவே அமைந்து விடுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால், இறுதி நாள்கள் துயரமாக மாறிவிடுகிறது.

முதியோர் வாழ்க்கை நிலை பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பேவ் ஆராய்ச்சி மையத்தின் அறிதல்கள் மிகவும் குறிப்பிடத் தக்கவை.

உலக நாடுகளில் முதலில் பிரிட்டனை எடுத்துக்கொண்டால், இங்கு முதியவர்களின் வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் சிறப்பாகவே அமைந்துள்ளது. அதற்கு ஒரே ஒரு உதாரணம் 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் பென்ஷன் உதவித் தொகையைப் பெற 40 லட்சம் பேர் தகுதி பெற்றிருந்தும், மூன்றில் ஒரு பங்கினர் இதுவரை அந்த பென்ஷனுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது ஒன்றே.

அது மட்டுமா? பிரிட்டனில் 60 வயதான முதியவர்கள் எந்த உடல்நலக் குறைவுக்கும் இலவசமாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்த இலவச சேவையைப் பெற ஒன்று மட்டுமே தேவை, அதுதான் 60 வயதாகிவிட்டது என்பதற்கான சான்று. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசே இலவசமாக அழைத்து இரைப்பை புற்றுநோய்க்கான பரிசோதனையை செய்துவிடும். இலவச போக்குவரத்து வசதியும் வழங்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கவனித்துக் கொள்ள ஆள் தேவைப்பட்டால், அதற்கான உதவித்தொகை, ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போடுவது போன்றவற்றையும் அரசே செய்து விடுகிறது.

ஆஸ்திரேலியாவிலும் முதியவர்களின் நிலை சிறப்பாகவே உள்ளது. மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 லட்சம் பேர் முதியவர்கள். முதியவர்களுக்கு என்று அரசின் சார்பில் முதியவர்களுக்கான இல்லங்கள் நடத்தப்படுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களது வீட்டில் இருக்க முடியாதவர்கள், கவனிப்பு தேவைப்படுவோர் இந்த இல்லங்களில் குடிபுகலாம். அந்நாட்டில் இருக்கும் முதியவர்களில் 76% பேர் சொந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். அங்கிருக்கும் முதியவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அரசு வழங்கும் முதியவர்களுக்கான எந்த சேவைகளையும் பெறுவதில்லை என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவலாகும்.

அமெரிக்காவில்.. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும், மெடிகேர் என்ற மருத்துவக் காப்பீட்டில் தானாகவே இணைக்கப்பட்டுவிடுவார்கள். இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் உள்ள 96 சதவீத முதியவர்கள் மெடிகேர் என்ற மருத்துவக் காப்பீட்டில் இணைக்கப்பட்டுவிட்டனர். உலக நாடுகளிலேயே முதியவர்களில் அதிகமானோர்  தங்களது துணையுடன் அல்லது துணையில்லாமல் தனியாக வசிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக மூதாட்டிகளில் ஐந்தில் நான்கு பேர் தனியாகவே வசிக்கிறார்கள். ஆண்களைவிடவும் பெண்கள் அதிக வயதுடன் வாழ்வதும் இயல்பான ஒன்றாக உள்ளது அமெரிக்காவில்.
 

இந்தியாவில் முதியவர்களின் ஒட்டுமொத்த பராமரிப்பும் குடும்ப உறுப்பினர்களையே சேரும். கூட்டுக் குடும்பங்களுக்கு உதாரணமாக விளங்கிய நாட்டில், தற்போது குடும்பங்கள் உடைந்துபோனதால், ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளும், மறுபக்கம் முதியோர் இல்லங்களும் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாட்டில் பெற்றோர் மற்றும் முதியவர்களைப்  பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிகள் நல பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மிக வறுமையில் வாழும் முதியவர்களுக்கு இந்த உதவித் தொகை பேருதவியாக உள்ளது.

ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் முதியவர்களைவிட, வாழ்வாதாரம் இல்லாத முதியவர்களின் நிலை மிகவும் சிரமத்துக்குரியதாகவே மாறிவருகிறது. எனினும் உலகளவில் குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் உள்ளது சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது.

உலகளவில், மொத்த மக்கள்தொகையில் அதிக முதியவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சீனா, 2-வது இடத்தில் இந்தியா, 3-வது இடத்தில் அமெரிக்கா.

கூட்டுக்குடும்ப முறையில் இந்தியாவுக்கே முதலிடம்

வயதுக்கும் உடலுக்கும்தான் முதுமையே அன்றி, மனதும் அனுபவமும் என்றும் நரை காண்பதில்லை. உங்களால் எதுவும் முடியாது என்று ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் அல்லர் முதியோர், அவர்களது அனுபவப் பாடங்களை கேட்டறிந்து கொள்ள, ஒரு கப்பலின் கேப்டனைப் போல மதிக்கத்தக்கவர்கள்.
 
அப்படியான கேப்டன்களின் வாழ்வியல் முறை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல காத தூர வித்தியாசம் காணப்படுகிறது.

பொதுவாக வயதான முதியவர்கள் பலரும், தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்வது உலகம் முழுக்க இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால், அமெரிக்காவில் பெரும்பாலான முதியவர்கள் தனியாக அல்லது தனது இணையுடன் மட்டுமே வசிப்பவர்களாக உள்ளனர்.

குடும்பத்துடன் வசிக்கும் முதியவர்களின் விகிதம் ஆசிய - பசிபிக் நாடுகளில் 50 சதவீதமாக இருக்கும்நிலையில் இது அமெரிக்காவில் வெறும் 6 சதவீதமாக உள்ளது. அதேசமயம், தம்பதியராக வசிப்போர் விகிதம் அமெரிக்காவில் 46 சதவீதமாகவும், தனியாக வசிக்கும் முதியவர்களின் விகிதம் 27 சதவீதமாகவும் உள்ளது. பிற எந்த நாடுகளை விடவும், அவ்வளவு ஏன்? உலகில் உள்ள வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் தனித்து வாழும் முதியவர்கள் அதிகமாக உள்ளனர்.

பொதுவாக பொருளாதார அளவில் வளர்ந்த நாடுகளில் சிறிய குடும்பங்கள் அதிகமாக இருக்கும். தம்பதியருக்கு ஒரு சில குழந்தைகளே இருப்பார்கள், அவர்களும் பெற்றோரை சாராமல் வாழவே விரும்புவார்கள். வளர்ந்த நாடுகளில் முதியவர்களின் வாழ்க்கைக்கும் மருத்துவத்துக்கும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும். அதனால், முதியவர்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளிலேயே தனியாக வாழ அனைத்து வழிகளும் உருவாகும். ஆனால், அதுபோன்ற ஐரோப்பிய நாடுகளை விடவும், அமெரிக்காவில் தனியாக வாழும் முதியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

பொதுவாக ஏழை நாடுகளில் அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், கூட்டுக் குடும்ப முறை அதிகமாக காணப்படும். இதுபோல நிறைய நபர்கள் ஒரே குடும்பத்தில் இருக்கும் போது பெரிய செலவுகள் குறையும் என்பதால், ஏழை நாடுகளில் பெரிய குடும்பங்கள் என்பது வாழ்க்கை முறையாக உள்ளது. முதியவர்களுக்கு சில உதவிகளை மட்டுமே செய்யும் அரசைக் கொண்டிருக்கும் நாடுகளில், முதியவர்களைப் பராமரிக்கும் பெரும் கடமை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமே விடப்படுகிறது.

அந்த வகையில் பொருளாதார கட்டமைப்பு என்பது குடும்பங்களின் வகைப்பாடுகளை வகுக்கும் கலாசார, மத ரீதியான காரணிகளில் முக்கியக் காரணியாக உள்ளது தெரிய வந்துள்ளது. மத ரீதியாக என்று எடுத்துக் கொண்டால், இந்துக்கள் பெரும்பாலும் பெரிய குடும்பங்களாகவே வாழ்கிறார்கள். அதாவது இந்துக்களை அதிகம் கொண்ட நமது நாட்டில் உலகிலேயே கூட்டுக் குடும்பமாக வாழும் மக்கள் அதிகம். அதாவது உலகிலேயே இந்தியாவில்தான் 10 பேரில் 7 பேர் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்.

இந்தியாவைத் தவிர்த்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் மூலமாக அதிக இந்துக்கள் வாழும் கனடாவில், அண்டை நாடுகளைக் காட்டிலும் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக உள்ளது. இங்கு 47 சதவீத இந்துக்களின் குடும்பங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட்டுக் குடும்பத்திலேயே வசிக்கிறார்கள். கனடாவின் ஒட்டுமொத்த முதியவர்களின் விகிதமான 10 சதவீதத்தைக் காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகமாகும்.

எனவே, இந்தியாவில் பெரும்பாலான முதியவர்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதும், உலகிலேயே வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் முதியவர்கள் தனித்து வசிப்பதும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இன்னமும் இவ்வளவு முதியோர் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறார்களே என்பதற்காகப் பெருமை கொள்வதா, இவ்வளவு முதியோர் இத்தனை வேகமாகக் கைவிடப்படுகிறார்களே என்பதற்காக சிறுமை கொள்வதா தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com