இந்த ஆண்டு மருத்துவ நோபல் பரிசு எதற்காக?

ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹக்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 
மருத்துவத்துக்கான நோபல் பரிசு
மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஹெபடைடிஸ் சி வைரஸை(Hepatitis C virus) கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், (Harvey J. Alter, ) மைக்கேல் ஹக்டன் (Michael Houghton) மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் (Charles M. Rice) ஆகிய மூவருக்கும், கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள நோபல் அசெம்பிளி 2020 மருத்துவத்துக்கான நோபல் பரிசினைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இவர்கள் மூவரும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலான உடல்நலப் பிரச்னையான சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியான இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸுக்கு எதிரானப் போராட்டத்தில் தீர்க்கமான பங்களிப்பைச் செய்தவர்கள். இந்த  மூன்று விஞ்ஞானிகளுக்கும் 2020க்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹக்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் ஹெபடைடிஸ் சி வைரஸ் என்ற நாவல் வைரஸை அடையாளம் கண்டனர். ஆனால், அதற்கு முன்னர் ஹெபடைடிஸ் ஏ(Hepatitis A) மற்றும் பி ((Hepatitis B) வைரஸ்களின் கண்டுபிடிப்பு முக்கியமான படிகளாக இருந்தன. ஆனால் இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸ் சம்பந்தமான பெரும்பாலானவை விவரிக்கப்படாமல் இருந்தன.

ஹெபடைடிஸ் சி வைரஸின் கண்டுபிடிப்பு நாள்பட்ட ஹெபடைடிஸ் நோயின்  மீதமுள்ள நிகழ்வுகளுக்கான காரணத்தை வெளிப்படுத்தியது மற்றும் இரத்த பரிசோதனைகள் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய புதிய மருந்துகளை சாத்தியமாக்கியது.

ஹெபடைடிஸ் - மனித ஆரோக்கியத்திற்கு உலகளாவிய அச்சுறுத்தல்

கல்லீரல் அழற்சி அல்லது ஹெபடைடிஸ் என்பது முக்கியமாக வைரஸ் தொற்றுநோய்களால் ஏற்படுகிறது. இருப்பினும், மது/சாராயம் அருந்துதல், சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் 'ஆட்டோ இம்யூன்' நோய் ஆகியவை ஹெபடைடிஸின் முக்கியமான காரணிகளாகும். 1940களில், தொற்று ஏற்படுத்தும் ஹெபடைடிஸில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன என்பது தெரிந்தது.

பின்னர் 'ஹெபடைடிஸ் ஏ' என பெயரிடப்பட்ட வைரஸ், மாசுபட்ட நீர் அல்லது உணவு மூலம் பரவுகிறது; இது பொதுவாக நோயாளிக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தாது. இரண்டாவது வகை 'ஹெபடைடிஸ் பி' என்பது இரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது; இது மிகவும் கடுமையான விளைவுகளை /பாதிப்பை உண்டாக்குகிறது. ஏனெனில் இது நாள்பட்ட நிலைக்கு செல்வதனால், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். 

ஆனால், இந்த ஹெபடைடிஸின் தன்மை ஆபத்தும் சிக்கலுமானது. இது மிகவும் ஆரோக்கியமானவர்களிடம்கூட நோய்த்தொற்றும் பாதிப்பும் ஏற்பட்டாலும் எதுவும் தெரியாமல், பல ஆண்டுகள் இருந்து மிகவும் சிக்கலான நிலையில்தான் தெரியும். இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸ் குறிப்பிடத்தக்க நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் தொடர்புடையது. மேலும், உலகளவில் ஆண்டுதோறும் இது 10 லட்சம் மனித உயிர்களைப் பலி வாங்குகிறது.  இதனால் இது எச்.ஐ.வி-தொற்று மற்றும் காசநோயுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உலகளாவிய சுகாதார பிரச்சினையாகிறது. 

அறியப்படாத தொற்றின் காரணி /முகவர் 

தொற்று நோய்களுக்கு எதிரான வெற்றிகரமான தலையீட்டின் திறவுகோல் என்பது அதன் காரணியை அடையாளம் காண்பதுதான்.  1960களில், பருச் ப்ளம்பெர்க் (Baruch Blumberg), இது ஒரு வகை இரத்தத்தால் பரவும் ஹெபடைடிஸ். ஹெபடைடிஸ் பி வைரஸ் என அறியப்பட்ட ஒரு வைரஸால் ஏற்பட்டது என்று தீர்மானித்தார். மேலும், இந்த கண்டுபிடிப்பு மூலம் நடைபெற்ற சோதனைகளால்  ஒரு பயனுள்ள தடுப்பூசி உருவாக்க வழிவகுத்தது. இந்த கண்டுபிடிப்புக்காக ப்ளம்பெர்க்கிற்கு 1976 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அதே காலகட்டத்தில் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தில் உள்ள ஹார்வி ஜே. ஆல்டர் என்பவர், இரத்த மாற்றம் பெற்ற நோயாளிகளுக்கு ஹெபடைடிஸ் ஏற்படுவதைப் பற்றி ஆய்வு செய்தார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஹெபடைடிஸ் பி (Hepatitis B) வைரஸிற்கான இரத்த பரிசோதனைகள் இரத்த மாற்றம் தொடர்பான ஹெபடைடிஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்திருந்தாலும், ஆல்டர் மற்றும் குழுவினர், இன்னும் ஏராளமானோர் இருக்கின்றனர் என்பதை கவலையுடன் பரிசீலித்தனர்.

ஹெபடைடிஸ் ஏ வைரஸ்(Hepatitis A) தொற்றுக்கான சோதனைகளும் இந்த நேரத்தில் உருவாக்கப்பட்டன. மேலும், ஹெபடைடிஸ் ஏ இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு காரணம் அல்ல என்பதும் தெளிவாகியது.

இரத்த மாற்றம் பெறுபவர்களில் நிறைய பேர் இன்னவென்று அறியப்படாத தொற்று முகவர்/காரணி மூலம்  நாள்பட்ட ஹெபடைடிஸை உருவாக்கியதும் கவலைக்குள்ளாக்கியது. இந்த ஹெபடைடிஸ் நோயாளிகளிடமிருந்து வரும் இரத்தம், சிம்பன்ஸிகளுக்கு இந்த நோயை பரப்பக்கூடும் என்பதை ஆல்டரும் அவரது சகாக்களும் ஆய்வு மூலம் நிரூபித்துக் காட்டினர். இது மனிதர்களைத் தவிர ஒரே பாதிப்புக்குள்ளாகும் உயிர் சிம்பான்சிதான். அடுத்தடுத்த ஆய்வுகள் அறியப்படாத தொற்று முகவர் ஒரு வைரஸின் பண்புகளைக் கொண்டிருப்பதை நிரூபித்தது. ஆல்டரின் முறையான சோதனைகள் மற்றும் தேடல்கள் இந்த வழியில் ஒரு புதிய, தனித்துவமான நாள்பட்ட வைரஸ் ஹெபடைடிஸை வரையறுத்துள்ளன. இது ஒன்றும் மர்மமான நோய்அல்ல. இது "ஏ இல்லாத, பி அல்லாத" ஹெபடைடிஸ் ("non-A, non-B" hepatitis.)என அறியப்பட்டது.

ஹெபடைடிஸ் சி வைரஸின் அடையாளம்

நாவல் வைரஸை அடையாளம் காண இப்போது அதிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது.  வைரஸ் வேட்டைக்கான அனைத்து பாரம்பரிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், வைரஸ் பிரித்து எடுக்க ஒரு பத்தாண்டுகளுக்கு மேலானது.  சிரோன் என்ற மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மைக்கேல் ஹக்டன், வைரஸின் மரபணு வரிசையை தனிமைப்படுத்த தேவையான கடினமான பணிகளை மேற்கொண்டார். ஹக்டனும், அவரது நண்பர்கள் குழுவும் பாதிக்கப்பட்ட சிம்பன்சியின் இரத்தத்தில் காணப்படும் நியூக்ளிக் அமிலங்களிலிருந்து டி.என்.ஏ துண்டுகளின் தொகுப்பை உருவாக்கினர். இந்த துண்டுகளில் பெரும்பாலானவை சிம்பன்சியின் மரபணுவிலிருந்து வந்தவை. ஆனால் சில அறியப்படாத வைரஸிலிருந்து பெறப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர்.

ஹெபடைடிஸ் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தில் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், வைரஸ் புரதங்களை குறியாக்கம் செய்யும் குளோன் செய்யப்பட்ட வைரஸ் டி.என்.ஏ துண்டுகளை அடையாளம் காண ஆய்வாளர்கள் நோயாளியின் சீரத்தைப் பயன்படுத்தினர். ஒரு விரிவான தேடலைத் தொடர்ந்து, ஒரு நேர்மறையான குளோன் கண்டறியப்பட்டது. இந்த குளோன் ஃபிளவிவைரஸ் (Flavivirus) குடும்பத்தைச் சேர்ந்த  நாவல் ஆர்.என்.ஏ. வைரஸில்(a novel RNA virus) இருந்து பெறப்பட்டது. இதற்கு  ஹெபடைடிஸ் சி வைரஸ் (Hepatitis C virus) என்று பெயரிடப்பட்டது. 

நாள்பட்ட ஹெபடைடிஸ் நோயாளிகளின் உடலில்  இதற்கான ஆன்டிபாடிகள் இருப்பது என்பதனைக் கொண்டு,  இந்த வைரஸை காணாமல் போன முகவராக (missing agent) வலுவாகக் குறிக்கிறது

ஹெபடைடிஸ் சி வைரஸின் கண்டுபிடிப்பு தீர்க்கமானது; ஆனால் இந்த புதிரின் ஒரு முக்கியமான துணுக்கு மட்டும் காணவில்லை. வைரஸ் மட்டும் ஹெபடைடிஸை ஏற்படுத்துமா? இந்த கேள்விக்கு பதிலளிக்க விஞ்ஞானிகள் குளோன் செய்யப்பட்ட வைரஸ் நகலெடுத்து நோயை உண்டாக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தனர்.

செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சார்லஸ் எம். ரைஸ்(Charles M. Rice), ஆர்.என்.ஏ வைரஸ்களுடன் பணிபுரியும் பிற குழுக்களுடன் சேர்ந்து, ஹெபடைடிஸ் சி வைரஸ் மரபணுவின் முடிவில் முன்னர் பெயரிடப்படாத ஒரு பகுதியை வைரஸ் நகலெடுப்பிற்கு முக்கியமானதாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் மாதிரிகளில் மரபணு மாறுபாடுகளையும் சார்லஸ் எம். ரைஸ் கவனித்தார், அவற்றில் சில வைரஸ் நகலெடுப்பிற்கு இடையூறாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். மரபணு பொறியியல் மூலம், சார்லஸ் எம். ரைஸ் ஹெபடைடிஸ் சி வைரஸின் ஆர்.என்.ஏ. மாறுபாட்டை உருவாக்கியது. இது வைரஸ் மரபணுவின் புதிதாக வரையறுக்கப்பட்ட பகுதியை உள்ளடக்கியது மற்றும் செயலற்ற மரபணு மாறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆர்.என்.ஏ சிம்பன்ஸிகளின் கல்லீரலில் செலுத்தப்பட்டபோது, இரத்தத்தில் வைரஸ் கண்டறியப்பட்டது மற்றும் நாள்பட்ட நோயால் மனிதர்களில் காணப்படுவதைப் போன்ற நோயியல் மாற்றங்கள் காணப்பட்டன. ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே பரிமாற்றமுடைய ஹெபடைடிஸின் (transfusion-mediated hepatitis) விவரிக்கப்படாத நிகழ்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான இறுதி சான்று இதுவாகும்.

நோபல் பரிசு பெற்ற இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் 

ஹெபடைடிஸ் சி வைரஸை நோபல் பரிசு பெற்றவர்கள் கண்டுபிடித்தது என்பது  வைரஸ் நோய்களுக்கு எதிரான போரில் ஒரு முக்கிய சாதனையாகும். அவர்களின் கண்டுபிடிப்புக்கு மனித சமுதாயம்  நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.  வைரஸிற்கான அதிக உணர்திறன் வாய்ந்த இரத்த பரிசோதனைகள் இப்போது கிடைக்கின்றன. இவை உலகின் பல பகுதிகளிலும் இரத்த மாற்றத்துக்குப் பின்பும் ஹெபடைடிஸை நீக்கி, உலக ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்த உதவுகின்றன. ஹெபடைடிஸ் சி-யில் இயக்கப்பட்ட ஆன்டிவைரல் மருந்துகளின் (antiviral drugs) விரைவான வளர்ச்சியையும் அவர்களின் கண்டுபிடிப்பு அனுமதித்தது.

வரலாற்றில் முதல்முறையாக, இந்த நோயை இப்போது குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. இது உலக மக்களிடமிருந்து ஹெபடைடிஸ் சி வைரஸை ஒழித்து அழிக்க முடியும்  நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. இந்த இலக்கை அடைய, இரத்த பரிசோதனையை எளிதாக்குவதற்கும், உலகெங்கிலும் உள்ள வைரஸ் தடுப்பு மருந்துகளை கிடைக்கச் செய்வதற்கும் சர்வதேச முயற்சிகள் தேவைப்படுகின்றன.

1. ஹார்வி ஜே. ஆல்டர் (Harvey J. Alter) 1935 இல் நியூயார்க்கில் பிறந்தார். ரோசெஸ்டர் மருத்துவப்பள்ளியில் மருத்துவப் பட்டம் பெற்றார். மேலும் ஸ்ட்ராங் மெமோரியல் மருத்துவமனை(Strong Memorial Hospital) மற்றும் சியாட்டல் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் உள் மருத்துவத்தில் பயிற்சி பெற்றார். 1961 ஆம் ஆண்டில், அவர் தேசிய சுகாதார நிறுவனத்தில் (என்ஐஎச்) ஒரு மருத்துவக் கூட்டாளராக சேர்ந்தார். 1969 ஆம் ஆண்டில் என்ஐஎச் திரும்புவதற்கு முன்பு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கழித்தார். மருத்துவ மையத்தின் மாற்று மருத்துவத்துறையில் மூத்த புலனாய்வாளராக சேர்ந்தார். 

2. மைக்கேல் ஹக்டன் (Michael Houghton) ஐரோப்பாவில் (UK) வில் பிறந்தார். 1977 ஆம் ஆண்டில் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் பிஎச்டி பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் எமெரிவில்லே, சிரோன் கார்ப்பரேஷனுக்குச் செல்வதற்கு முன்பு ஜி.டி.சியர்ல் & கம்பெனியில் சேர்ந்தார். அவர் 2010 இல் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்திற்கு இடம் பெயர்ந்தார். தற்போது வைராலஜியில் கனடா சிறப்பு ஆராய்ச்சித் தலைவராகவும், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் வைராலஜி(Virology) பேராசிரியராகவும் உள்ள அவர், லி கா ஷிங் அப்ளைடு வைராலஜி நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். 

3. சார்லஸ் எம். ரைஸ் (Charles M. Rice)1952 இல் சாக்ரமென்டோவில் பிறந்தார். அவர் 1981 ஆம் ஆண்டில் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து பிஎச்டி பட்டம் பெற்றார், அங்கு 1981-1985 க்கு இடையில் ஒரு போஸ்ட்டாக்டோரல் சக ஊழியராகவும் பயிற்சி பெற்றார். 1986 ஆம் ஆண்டில் செயின்ட் லூயிஸின் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் தனது ஆராய்ச்சி குழுவை நிறுவி 1995 இல் பேராசிரியரானார். 2001 முதல் நியூயார்க்கின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2001-2018 காலப்பகுதியில் அவர் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் ஹெபடைடிஸ் சி ஆய்வுக்கான அறிவியல் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com