அறிவியல் ஆயிரம்: நியாண்டர்தாலின் மரபணுவிலிருந்து கரோனா?

SARS-CoV-2 பற்றிய புதிய கண்டுபிடிப்பில் அதன் மரபணு நியாண்டர்தாலிலிருந்து வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 
நியாண்டர்தால் (கோப்புப்படம்)
நியாண்டர்தால் (கோப்புப்படம்)

கரோனா (SARS-CoV-2)  என்ற நாவல் வைரஸ், 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதன்முதலில் தோன்றியதிலிருந்து, மனிதர்களின் மேல் பலவிதமான தொற்றுநோய்த் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சிலர் கரோனா வைரஸால் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், மரணங்களும் நேரிடுகின்றன . மற்றவர்கள் லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் அல்லது அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்.

இவற்றுக்கு ஒருவரின் வயது மற்றும் பிற மருத்துவ நிலைமைகளின் இருப்பு போன்ற கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதற்கான பல காரணிகள் உள்ளன. ஆனால், இதில் ஒருவரின் மரபியலும்கூட ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது எனக் கடந்த சில மாதங்களாக, கரோனா வைரஸ் ஹோஸ்ட் மரபியல் முனைப்பு ஆராய்ச்சியில் (COVID-19 Host Genetics Initiative), நமது 3-வது குரோமோசோமின் ஒரு பகுதியில் உள்ள மரபணு மாறுபாடுகள் ஒரு பெரிய ஆபத்தைச் சுமத்துகின்றன மற்றும் அவற்றின் கேரியர்கள் கடுமையான நோய்த் தன்மையை  உருவாக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது, இதுதொடர்பான  ஒரு புதிய ஆய்வு 'நேச்சர்' என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்த மரபணு பகுதி என்பது கிட்டத்தட்ட தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழமையான நியாண்டர்தாலுடன் ஒத்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. மேலும் இது தொடர்பான பகுப்பாய்வு மூலம்,  இனப்பெருக்கம் (interbreeding) மூலம், ஏற்படும் மாறுபாடுகள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்களின் மூதாதையர்களுக்கு வந்தன எனத் தெரியவந்துள்ளது.

தற்போதைய தொற்றுநோய்களின் தன்மையும்கூட நியாண்டர்தால்களின் மரபணு பாரம்பரியத்திலிருந்து வந்தவைதான். இவை இத்தகைய துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது வியக்கத்தக்கது என்று ஒகினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (OIST) மனித பரிணாம மரபியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஸ்வாண்டே பெபோ (Svante Pääbo) தெரிவிக்கிறார். 

கரோனா மூலம் நமக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுவது நம் மரபணுக்களில் எழுதப்பட்டதா?

குரோமோசோம்கள் என்பவை உயிரணுக்களின் கருவில் (Nucleus) உள்ள சிறிய கட்டமைப்புகள் மற்றும் ஓர் உயிரினத்தின் மரபணுப் பொருளைக் கொண்டுள்ளன. அவை ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒரு குரோமோசோமுடன் ஜோடிகளாக வருகின்றன. மனிதர்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. எனவே, 46 குரோமோசோம்கள் நமது டி.என்.ஏ. (DNA) முழுவதையும் எடுத்துச் செல்கின்றன. மில்லியன் கணக்கான அடிப்படை ஜோடிகளில் பெரும்பான்மையான மக்களிடையே ஒரே மாதிரியாக இருந்தாலும், டி.என்.ஏ. நிலையில் பிறழ்வுகள் நிகழ்கின்றன, மாறுபாடுகள் நீடிக்கின்றன.

கரோனா குறித்த மரபியல் துவக்க நிலை ஆராய்ச்சியில்  கடுமையான கரோனா பாதிப்புடன்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்படாதவர்கள் என 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குரோமோசோம் 3 இல் உள்ள ஒரு பகுதியை இது அடையாளம் கண்டுள்ளது. இந்த பகுதியானதுதான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை நிர்ணயிக்கிறது.

அடையாளம் காணப்பட்ட மரபணு பகுதி மிக நீளமானது. 49.4 ஆயிரம் அடிப்படை ஜோடிகளைக் கொண்டுள்ளது. மேலும் கடுமையான கரோனாவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் மாறுபாடுகள் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதுபோன்ற மாறுபாடுகள் முன்னர் நியாண்டர்தால் அல்லது டெனிசோவன்ஸிலிருந்து வந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பேராசிரியர் பெபோ மற்றும் முதல் ஆய்வாளரும் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் எவல்யூஷனரி ஆந்த்ரோபாலஜி மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளருமான ஹ்யூகோ செபெர்க் இணைந்து இது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் இனப்பெருக்கம் செய்வதிலிருந்து மாறுபாடுகள் வந்திருந்தால், இது 50,000 ஆண்டுகளுக்கு முன்பு போலவே நிகழ்ந்திருக்கும். அதேசமயம், மாறுபாடுகள் கடைசி பொதுவான மூதாதையரிடமிருந்து வந்திருந்தால், அவை நவீன மனிதர்களில் சுமார் 55,000 ஆண்டுகளாக இருந்திருக்கும். ஆனால், சீரற்ற மரபணு மாற்றங்கள் மற்றும் குரோமோசோம்களுக்கு இடையிலான மறுசீரமைப்பு ஆகியவை இந்த நேரத்தில் நிகழ்ந்திருக்கும். மேலும், தெற்கு ஐரோப்பாவிலிருந்து வந்த நியாண்டர்தாலுக்கும், இன்றைய மக்களுக்கும் இடையிலான மாறுபாடுகள் டி.என்.ஏ.வின் நீண்ட நீளத்தைவிட மிகவும் ஒத்திருப்பதால், அவை இனப்பெருக்கத்திலிருந்து வந்திருக்கலாம் என முடிவு செய்தனர்.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் இரு குழுக்களும் சந்தித்தபோது, தெற்கு ஐரோப்பாவிலிருந்து வந்த நியாண்டர்தால்கள் இந்த டி.என்.ஏ. பிராந்தியத்தை இன்றைய மக்களுக்குப் பங்களித்ததாக பேராசிரியர் பெபோ மற்றும் பேராசிரியர் செபெர்க் முடிவு செய்தனர்.

இந்த நியாண்டர்தால் மாறுபாடுகளைச் சுமப்பவர்களுக்கு இயந்திர காற்றோட்டம் தேவைப்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகம் என்று பேராசிரியர் செபெர்க் விளக்கினார்.

"வெளிப்படையாக, உங்கள் வயது மற்றும் பிற நோய்கள் போன்ற காரணிகளும் நீங்கள் வைரஸால் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்படுகிறீர்கள் என்பதையும் பொருத்து இது ஏற்படலாம். ஆனால் மரபணு காரணிகளில், இது மிகவும் வலிமையானது" என்றார். 

உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த மாறுபாடுகள் எவ்வளவு பொதுவானவை என்பதில் பெரிய வேறுபாடுகள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தெற்காசியாவில் சுமார் 50% மக்கள் அவற்றைச் சுமக்கின்றனர். இருப்பினும், கிழக்கு ஆசியாவில் கிட்டத்தட்ட  அவர்கள் இல்லை. நியாண்டர்தால் மரபணு பகுதி ஏன் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்துடன் தொடர்புடையது என்பது இன்னும் தெரியவில்லை. நாங்கள் இதுதொடர்பாக இன்னும் ஆழமாக ஆய்வு செய்து வருகிறோம்  என்று பேராசிரியர் பெபோ கூறி உள்ளார். 

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com