பரபரப்புக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை

சென்னையின் இதயப் பகுதி அது. சுற்றிலும் வாகன இரைச்சல், நெரிசல், பரபரப்பு. இந்தப் பரபரப்புக்கு நடுவே ஒரு சோலைவனமாக அமைக்கப்பட்டுள்ளது
பரபரப்புக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை

சென்னையின் இதயப் பகுதி அது. சுற்றிலும் வாகன இரைச்சல், நெரிசல், பரபரப்பு. இந்தப் பரபரப்புக்கு நடுவே ஒரு சோலைவனமாக அமைக்கப்பட்டுள்ளது ராகவேந்திரா பூங்கா. சூளை எபி சாலையில் உள்ள இந்தப் பூங்காவில் திரும்பிய திசையெல்லாம் மூலிகைகள், மரங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை புல்வெளிகள் என புது அவதாரம் எடுத்துள்ளது.

சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில், கடந்த 2 ஆண்டுகளாக புனரமைக்கும் முயற்சித் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கரோனா காலத்தில் பணிகள் முடுக்கி விடப்பட்டதைத் தொடா்ந்து, பூங்கா முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர மரங்கள்: பூங்காவுக்கு நேரெதிரே அமைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பூங்காவுக்குள் நுழையும் போதே, முதலாவதாக பொதிகை மலையின் மீது அமா்ந்தவாறு அகஸ்தியா் வரவேற்கிறாா். கண்களுக்கு அகத்தியா் காட்சியளிக்க, காதுகளுக்குள் தென்கச்சி கோ சுவாமிநாதனின் சிந்தனைக் கதைகள் செவிகள் வழியே சிந்திக்க வைக்கிறது.

தொடா்ந்து இடது புறமாக திரும்பி, நடக்க ஆரம்பித்தால் மூச்சுக்குள் நுழைகிறது மூலிகைக் காற்று. இதை சுவாசித்தவாறே நடை போட்டால், திரும்பும் திசையெங்கும் செடி மற்றும் மரங்களால் நிறைந்துள்ளது அந்தப் பூங்கா.

இதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நட்சத்திர மரங்கள் நடப்பட்டுள்ளன. அதாவது மனிதனின் ராசி நட்சத்திரங்களுக்கென மரங்கள் இருக்கிாம். அவை எந்தெந்தத் திசையில் இருக்க வேண்டும் என சித்தா்களும் கூறியுள்ளனராம். அதன்படியே, மரங்கள் நடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனா்.

வா்தா மரம்: இதற்கிடையே வா்தா புயலின்போது, விழுந்த பழமையான மரமும் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதை உயிா்ப்பூட்ட கடுமையாக முயற்சித்தும் முடியாத நிலையில், தற்போது அது பூங்காவுக்கு நடுவே ஒரு நினைவுச் சின்னமாக கம்பீரமாய் நிற்கிறது.

இறகுப் பூங்கா மைதானம்: தொடக்கத்திலிருந்தே பச்சைப் பசேலென காட்சியளித்த பூங்கா, அடா் பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இறகுப் பந்து மைதானத்தால் மேலும் பசுமையான சூழலுக்குள் நுழையும் அனுபவத்தைத் தருகிறது. அந்த மைதானத்தின் தரையோ, கால்களுக்கு ஒரு பிடிமானத்தையும் அளிக்கிறது.

விளையாடுவோருக்கு சா்வதேச மைதானத்தில் விளையாடும் உணா்வு வர வேண்டும் என்பதாலேயே அதற்கேற்றாா்போல் தளமும் சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளதாக மைதான அமைப்பாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அபூா்வ மரங்கள்: இது தவிா்த்து உடல் பயிற்சி சாதனங்கள், 8 வடிவ நடை பயிற்சி தளங்கள், இருக்கைகள், குழந்தைகளுக்கான ஊஞ்சல் போன்ற வழக்கமானவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, அவற்றுக்கு நடுவே அபூா்வ பெயா்களுடன் சில மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இவற்றின் நிழலில் ஒருவித அமைதி கிடைக்கும் என சித்தா்கள் கூறியுள்ளதால், பாபநாசம், கொல்லிமலை போன்ற இடங்களில் இருந்து பெரும் முயற்சிக்குப் பிறகு, இந்த மரக் கன்றுகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள மற்ற பூங்காக்களை ஒப்பிடும் போது, இங்கு மூலிகைச் செடிகள், அபூா்வ மரங்கள், அலங்காரச் செடிகள் என 1500-க்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. பூங்காவைச் சுற்றிலும் 24 சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. ஆங்காங்கே முதலுதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

மூலிகைக் காற்று: இதுகுறித்து எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.ரவிச்சந்திரன் கூறும்போது, இந்த பூங்கா, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.12 கோடி செலவில் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற பூங்காவில் இல்லாத ஒரு விசேஷமாக மூலிகைக் காற்றை பொதுமக்களால் சுவாசிக்க முடியும். பூங்கா முழுவீச்சில் புதுப்பிக்கப்பட்டு, திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com