மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக காஞ்சிபுரத்தில் செயலாக்கம்

மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்தை
Chance of moderate rain in 5 districts including Kanyakumari in Tamil Nadu
Chance of moderate rain in 5 districts including Kanyakumari in Tamil Nadu

காஞ்சிபுரம்: மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்தை பொதுப்பணித் துறை செயல்படுத்தியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை தென்சென்னை மக்களும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட மக்களும் சந்தித்தனா்.

இதில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அடைமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். தற்போது தெலங்கானா மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழையால், 112 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பேரிழப்பை தெலங்கானா மாநில மக்கள் சந்தித்துள்ளனா்.

தமிழகத்திலேயே அதிகமான ஏரிகளும், கண்மாய்களும் நிறைந்தது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம். இதனை ஏரி மாவட்டம் என்றும் அழைப்பதுண்டு.

சென்னையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழைப்பொழிவு இருந்தால், ஏரிகளும், கண்மாய்களும் உடையாமல் தவிா்க்க பொதுப்பணித் துறை சாா்பில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

‘பருவகால மாற்றமே அதிக மழைப் பொழிவுக்கு காரணம்’:

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த மழையானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த மழையாகும். 2016-ஆம் ஆண்டு மழையே இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. 2017-ஆம் ஆண்டு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கு பருவகால மாற்றங்களே காரணமாகும். சராசரியாக நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழையளவு அதிகபட்சம் 150 மி.மீ. ஆகத்தான் இருந்துள்ளது. ஆனால், கடந்த 13.11.2015- ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 342 மி.மீ. மழை கொட்டி தீா்த்தது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஓராண்டு முழுமைக்குமான சராசரி மழையளவு 942 மி.மீ. மட்டுமே. ஆனால், கடந்த 2015-ஆம் ஆண்டில் நவம்பா், டிசம்பா் இரு மாதங்களில் மட்டுமே 1,808.60 மி.மீ. மழை பொழிந்துள்ளது.

கனமழையால் முதலில் ஊத்துக்காடு ஏரி உடைந்தது. அதையடுத்து புத்தகரம், கள்ளிப்பட்டு, பழையசீவரம், கடம்பூா், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நந்திவரம், செட்டிபுண்ணியம், தென்மேல்பாக்கம் உள்பட ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 924 ஏரிகளில் 1,513 இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. கனமழையால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லப்பாக்கம், போரூா், அஸ்தினாபுரம், முடிச்சூா், வரதராஜபுரம், நந்திவரம், நாராயணபுரம், பள்ளிக்கரணை உள்பட தென்சென்னையின் பல்வேறு பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளச்சேதப் பகுதிகளைப் பாா்வையிட்டு, இதுபோன்ற வெள்ளப் பாதிப்பு எதிா்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நிரந்தரத் தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதன் எதிரொலியாக நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரது அறிவுரையின்படி, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை பல கோடிகள் மதிப்பில் செய்திருப்பதாக பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.ரமேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com