அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுமா?

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரக்கோணத்தில் இருந்தும், அரக்கோணம் வழியாகவும் தினமும் புகா் ரயில்கள், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் மூலம் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ரயில்கள் அனைத்தும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது இயக்கப்படும் புகா் ரயில்களில் மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனால் சென்னைக்குச் செல்ல வேண்டிய தனியாா் ஊழியா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த காலங்களில் அரக்கோணம் மற்றும் திருவள்ளூா் இடையே அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இரண்டு மட்டுமே திருவாலங்காடு வழியாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது ரயில்கள் இல்லாததால் தனியாா் நிறுவனப் பணியாளா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் திருவள்ளூா் வரை இந்தப் பேருந்தில் சென்று பின்னா், அங்கிருந்து மற்றொரு பேருந்தில் சென்னை செல்கின்றனா். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடிப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அரக்கோணத்தில் இருந்தும் சென்னைக்கு நேரடியாகப் பேருந்துகளை இயக்க வேண்டும். குறைந்தபட்சம் ரயில்கள் இயக்கப்படும் வரையாவது சென்னைக்கு நேரடிப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருத்தணி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை மேலாளா் முருகன் கூறியது:

பூந்தமல்லிக்கு நேரடி பேருந்துகள் வழக்கமாக அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது பழைய தடங்களில் பேருந்துகளை பெரும் சிரமத்துக்கிடையே இயக்கி வருகிறோம். புதிய தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் பிரச்னைகள் உள்ளன. சென்னை கோயம்பேடுக்கு நேரடியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். எனினும் இக்கோரிக்கையை பொதுமக்கள் போக்குவரத்துக்கழகத் தலைமையிடமான விழுப்புரத்துக்கு அனுப்ப வேண்டும். மேல் அதிகாரிகளின் உத்தரவுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சென்னைக்கு நேரடி பேருந்துகளை அரக்கோணத்தில் இருந்து இயக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com