கரோனாவில் கிடைத்த நன்மை: இயற்கை மருத்துவத்துக்குத் திரும்பும் மக்கள்!

சிறு தலைவலிக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்ற மக்கள் இப்போது இயற்கை மருந்துகளை பயன்படுத்த முன்வந்துள்ளனர். 
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனா வைரஸ் தொற்றால் நிலை குலைந்து போயுள்ளது. கோடீஸ்வரர்கள் முதல் சாமானியர்கள் வரை பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் கரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. 

கடந்த 7, 8 மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக இன்னும் எத்தனை மாதங்களில் தீர்வு காண முடியும் என்று தெரியவில்லை. இதன் பாதிப்பு பெருமளவு இருந்தாலும், மக்களிடையே ஒரு சில நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்று கூறலாம். 

"கரோனாவுக்கு முன், கரோனாவுக்கு பின்" என ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சிறிதளவு மாற்றத்தையேனும் கரோனா ஏற்படுத்தியுள்ளது. 

கல்வி, மருத்துவம், சுகாதாரம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது அனைத்து நாடுகளும் உணர்ந்திருக்கும். உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது மக்களுக்கு சுகாதாரம், உடல் நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், தற்போது சாதாரண மக்கள்கூட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். 

'பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்' என்று பல இடங்களில் சுவர் வாசகங்கள் எழுத நாம் பார்த்திருப்போம். அதன் முக்கியத்துவம் என்ன என்பது இப்போது தெரிந்திருக்கிறோம். இதுபோல இன்னும் பல விஷயங்களை உதாரணமாகக் கூறலாம். 

இவ்வாறான மாற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.. மக்கள் மீண்டும் பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை நோக்கி படையெடுத்திருப்பதுதான். சிறு தலைவலிக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் மருத்துவமனைக்குச் சென்ற மக்கள் இப்போது இயற்கை மருந்துகளை பயன்படுத்த முன்வந்துள்ளனர். 

கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் இந்தியாவும், இந்திய மக்களும் உடலளவிலும், மனதளவிலும் சற்று வலிமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும், நமது சுற்றுச்சூழலும் முக்கியக் காரணம். நம் முன்னோர்கள் வழிப்படி நோய் எதிர்ப்பு சக்தி மிக்க பொருள்களை சாதாரணமாகவே நம் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். 'உணவே மருந்து' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த நாம் மிகவும் சமீப காலமாகவே இயற்கை மருந்துகளை மறந்து ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம். 

இருமல், காய்ச்சல் தொடங்கி புற்றுநோய் வரை ஆங்கில மருத்துவம் எனும் அல்லோபதி மருத்துவ சிகிச்சை முறையே மேலோங்கி இருக்கும் நிலையில், இப்போது மருத்துவமனைக்குச் செல்லவே பயப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் வைரஸ் தொற்று பரவும் என்பதால் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் முதலில் கரோனா பரிசோதனை, அதன்பிறகே மருத்துவர் பரிசோதிக்கும் நிலை. தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு ரூ. 5,000 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை கட்டணம் கொடுத்து பரிசோதனை செய்தாலும் மருத்துவமனைக்குச் சென்றாலே கரோனா பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கரோனா அறிகுறிகள், தீவிர பிரச்னைகள் உள்ளவர்கள், ஏற்கெனவே அல்லோபதி சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமே வேறு வழியின்றி மருத்துவமனை செல்கிறார்கள். 

கரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்கவும், வைரஸ் தொற்று வந்தபின்னர் அதனை குணப்படுத்தவும் ஆங்கில மருத்துவமும் இயற்கை உணவுகளை, சித்த மருந்துகளை பயன்படுத்த பரிந்துரைப்பது சற்று வியப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில், காலையில் லெமன்/ இஞ்சி டீ, இட்லி சாம்பார்.. பிற்பகல் ஒரு கப் அரிசி சாதம், முட்டை, காய்கறிகள், கீரை.. இரவு நேரத்தில் சப்பாத்தி, பருப்பு.. இதனிடையே எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, கொண்டக்கடலை, சுண்டல், வேர்க்கடலை என நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளும், கபசுரக்குடிநீர், நிலவேம்பு கஷாயம், அதிமதுரம் என சித்த மருந்துகளுமே தரப்படுகிறது. கரோனாவுக்கு  தடுப்பூசி, மருந்துகள் கண்டறியப்படும் வரை இந்த நிலையே தொடரும் என்பதில் மாற்றமில்லை. 

நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கத்தை சிறிதளவேனும் கடைப்பிடிப்பதால் மட்டுமே மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் பாதிப்பு குறைவாக உள்ளது. இல்லையெனில், பாதிப்பில் இந்தியா, அமெரிக்காவையே மிஞ்சியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கரோனா பரவலால் ஹோமியோபதி, சித்தா மருந்துகள் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்திக்காக உணவில் சேர்க்கப்படும் பல பொருள்கள் இப்போதுதான் நவீன தலைமுறையினரின் கண்களுக்கு தென்படத் தொடங்கியுள்ளன. கரோனாவுக்குப் பின் உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, சுக்கு, மஞ்சள் தூள் என அனைத்தையும் தவறாது சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் மிளகில் அதிக கலப்படம், விளைச்சலுக்கு முன்பே சந்தை வரும் இஞ்சி, எலுமிச்சை, நெல்லி விலை உயர்வு என பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. 

சாதாரண இருமல், சளி, தலைவலி என்றால் மக்கள் இப்போது வீட்டிலேயே இஞ்சி டீ, சுக்கு காபி என இயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர். இதனால் சாதாரண உடல்நலத் தொந்தரவுகள் குணமாவதோடு, பணமும் மிச்சமாகிறது. வேலையிழப்பு,  வருமானம் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்னைகளால் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் பலரும் மருத்துவமனை செல்வதை தவிர்க்கின்றனர்.

மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ளும் வகையில் பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை பட்டியலிட்டு உண்கின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒட்டுமொத்த நாட்டின் சுகாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றும் என  வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

அல்லோபதி போல ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா என மற்ற மருத்துவ முறைகளையும் கரோனா எழுச்சி காண வைத்துள்ளது மாற்றம் தானே! இது போன்ற மக்கள் நலம் சார்ந்த மாற்றங்கள் தொடரட்டும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com