கூடாது தற்கொலை: வாழ நிறைய வழிமுறைகள் இருக்கின்றன

தேர்வுகள் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பெண்கள் அல்ல, போட்டித் தேர்வுகள் மட்டுமே வாழ்வதற்கான தகுதியை கட்டமைப்பதில்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். 
தேர்வுகள் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பெண்கள் அல்ல
தேர்வுகள் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பெண்கள் அல்ல

வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்... என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை இக்கால இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும். குறிப்பாக தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு.  

தேர்வுகள் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பெண்கள் அல்ல, போட்டித் தேர்வுகள் மட்டுமே வாழ்வதற்கான தகுதியை கட்டமைப்பதில்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். 

போட்டித்தேர்வுகள் மாணவர்களின் தகுதியை தீர்மானிக்கும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அவர்களை தற்கொலைக்கு தூண்டும் கருவியாக இருக்கக் கூடாது. 

ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வு மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதை விட அக்கனவை சுமந்துள்ள மாணவர்களை மனநோயாளியாக்கி தற்கொலைக்கு தூண்டுவதையே செய்து வருகிறது. 

இந்தியாவில் சமநிலையற்ற கல்வி முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்துவிதமான மாணவர்களுக்கும் ஒரே மாதிரி நுழைவுத்தேர்வான 'நீட்' எவ்வாறு நியாயமான ஒன்றாக இருக்க முடியும்.

இத்தகைய நியாயமற்ற நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று காலை மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரது மகள் ஜோதி துர்கா (19) நீட் தேர்வு அழுத்தத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உலக தற்கொலைத் தடுப்பு தினம் 2 நாள்களுக்கு (செப்டம்பர் -10) முன்பு அனுசரிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகள் மறுபுறம் அரங்கேறிக்கொண்டுதான் உள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களில் தினக்கூலிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதேபோன்று தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களை கணக்கிட்டால் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலே அதிகமாக உள்ளது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும்போதெல்லாம், மாணவர்களின் உயிர்களை அதற்கு பலிகடாவாக்க வேண்டியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு அரியலூர் அனிதா துவங்கி தற்போது மதுரை ஜோதி துர்கா வரை ஏராளமான மாணவர்களின் உயிரை நீட் தேர்வு பறித்துள்ளது.

2018-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு நீட் தேர்வுக்காக மகனை அழைத்துச் சென்ற தந்தை, புதுச்சேரி மாணவி சிவசங்கரி, 2019-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா, திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தை சேர்ந்த மோனிஷா போன்றோரின் உயிர் 'நீட்'டில் பறிபோனது.

கோவையை சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ, அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ், மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா ஆகியோர் நடப்பாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில், மன அழுத்தத்தால் தேர்வெழுதும் முன்பே தற்கொலை செய்துகொண்டனர்.

10, 12- வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் வெளியிடும் முறைகளால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன என்பதால், ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு தற்கொலைகள் தடுக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் தற்கொலைகள் நீட் தேர்வினால் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரியதாகவே உள்ளது.

தேர்வுகளும், மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையின் பரிபூரணம் அல்ல. கல்வி என்பது சமூகத்துடன் மேன்மையான முறையில் வாழ பழகிக்கொள்ள உதவும் கருவிதானே தவிர அதுவே வெற்றி அல்ல. 

மதிப்பெண்கள் மூலம் அடையும் வெற்றியை மட்டுமே சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் வெளிவரவேண்டும். இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் போதிய அளவு உதவ வேண்டும். 

குறைந்த மதிப்பெண்களால் மாணவர்கள் மன சோர்வினையோ, மன அழுத்தத்தையோ அடையாமல் இருப்பதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. அத்தகையை சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும். குறிப்பாக போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இத்தகைய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியம். 

தகுதித்தேர்வு, ஆன்லைன் கல்வி போன்றவற்றால் மாணவர்கள் இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனை உணரவேண்டியது மிகமுக்கியமாக உள்ளது.

அதேவேளையில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே சிறந்த மாணவர்கள், அவர்களே பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளைகள் என்ற பிம்பத்திலிருந்து மாணவர்களும் வெளியே வரவேண்டும்.

தகுதித்தேர்வுகள் என்பது நாம் தீர்மானித்து வைத்த இலக்கை அடைய பயன்படும் ஒரு வழி மட்டுமே. அந்த வழி கடினமாக உள்ளது என்பதற்காக பயணத்தை முடித்துக்கொள்வது பெரும் முட்டாள்தனம். 

இலக்கை அடையவில்லை என்பதற்காக வாழ்க்கை சூனியமாகிவிடாது. உண்மையில் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இலக்கையே நிர்ணயிக்கிறோம். இதில் வாழ்க்கை மட்டுமே முதன்மையானது. அதற்கான நிர்ணயிக்கப்படும் இலக்கு என்றுமே இரண்டாம்பட்சம் தான்.

வாழ்க்கை தேர்வுகளுக்கு மட்டுமல்ல இலக்குகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர வேண்டும். எத்தனையோ இன்னல்களில் கரைந்துபோனாலும், இயல்பான மரணத்தை எதிர்கொள்ளத் தயாராவதுதான் மனித இயல்பு. 

தேர்வு முறைகளுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வது கவலைகளுக்கு முடிவல்ல, அது குடும்பத்தின் கவலைகளுக்கு துவக்கம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வீடு, கல்வி நிலையம், தேர்வு, மதிப்பெண், அதனால் பெறும் பணி இவற்றை எல்லாம் சேர்த்து வைத்து பார்த்தால், கல்வி என்பது சமுதாயத்துடன் ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழவும், வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியை கண்டுகொள்ளவும் மட்டும் தான் என்பது புரியும். இதனை மாணவர்கள் உணர்ந்தால் தற்கொலை என்ற எண்ணம் தோன்றாது. 

தேர்வுகளைத் தாண்டி வாழ்ந்து பார்ப்பதற்கு நிறைய நெறிமுறைகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அத்தகைய மாணவர்களை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com