அண்ணாவும் மொழிப்போரும்!

தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக மத்திய அரசுடன் நடந்து கொண்டிருக்கும் மொழிப்போரில் 30 ஆண்டுக் காலம் தலைமை வகித்து வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. 
அண்ணாவும் மொழிப்போரும்!


தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்திக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. 

தமிழகத்தைப் பொறுத்தவரை சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு அதிக உயிர் தியாகங்கள் ஏற்பட்டது தமிழ் மொழியின் அங்கீகாரத்திற்கும், ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மாணவர்கள், அரசியல் கட்சியினர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்தி கொண்டிருக்கும் மொழிப்போர் தான்.

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் 1947-ல் முடிவடைந்தது, ஆனால் தமிழ் மொழிக்கு எதிராக நடத்தப்படும் மொழிப்போரின் தீவிரம் 1937-ல் தொடங்கி பல பரிணாமங்களைக் கடந்து இன்று புதிய கல்விக் கொள்கை-2020 என்ற புதிய வடிவத்தில் உருவாகி உள்ளது.

இந்த மொழிப்போர் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல, ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானது அல்ல, தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க வேண்டும் என்ற நோக்கில் பல காலகட்டங்களில் மத்திய அரசு அமல்படுத்திய சட்டத்திற்கும், திட்டங்களுக்கும் எதிராக தமிழர்கள் தொடுத்த எதிர்வினையே இது.

இந்தியாவில் 1,500-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணைப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இத்தனை மொழிகள் உள்ளபோதும் ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, ஹிந்தி பேசாத மற்ற மக்களிடம் அதைத் திணிக்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

“எதிரிகள் தாக்கித் தாக்கி
வலுவை இழக்கட்டும்,
நீங்கள் தாங்கித் தாங்கி
வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்”
                                                       

                                              -பேரறிஞர் அண்ணா


மொழிப்போர் ஆரம்ப காலம்:

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியை எதிர்க்க காஷ்மீர் முதல் குமரி வரை பல மொழிகள், கலாசாரங்கள், வெவ்வேறு உணர்வுகள் என இந்திய மக்கள் வேறுபட்டிருந்த நிலையில் அனைவரையும் ஒன்றிணைக்க காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் எடுத்த ஆயுதம்தான் நாடு முழுவதும் ஹிந்தி மொழி கற்பிப்பு. இதுதான், ஹிந்தி திணிப்பின் தொடக்கம்.

1893-ம் ஆண்டு பிரச்சாரனி என்ற அமைப்பும், 1910-ம் ஆண்டு ஹிந்தி சாகித்ய சம்மேளன் என்ற அமைப்பும் ஹிந்தி கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில், இந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்தை தொடங்கிய காந்திக்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் 1915-ல் தமிழ்நாட்டில் ஹிந்தி பிரசாரத்திற்கு வந்த காந்திக்கு அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. இதன் அதிருப்தியை அந்த மேடையிலேயே பதிவு செய்தார் காந்தி. 

இந்நிலையில் 1924-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் பங்குபெற்ற சத்தியமூர்த்தி அய்யர் பேசுகையில், ஹிந்தி மொழியை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் 2வது கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற அவரின் கருத்து ஹிந்தி திணிப்பிற்கு முதல் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

அதே ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் இந்திய அரசுப்பணி தேர்வாணயத்தின் தலைவராக இருந்த சர்.டி. விஜயராகவாச்சாரி பேசுகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும், ஹிந்தியில் தோல்வி அடைபவர்கள் படித்தவராகவே கருதமுடியாது என பேசினார்.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ராஜாஜி மற்றும் சத்யமூர்த்தி ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பெரியாரின் குடி அரசு இதழில், ‘பழையன கழிந்து, புதியன புகுவதாக இருந்தால் நமக்கு கவலை இல்லை. ஆனால் புதியனவைகள் வந்து பலாத்காரமாய் புகுந்து கொண்டு பழையனவை வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளுவதை சகித்துக் கொண்டு அதற்கு வக்காளத்து பேசுவது பாஷைத் துரோகம்; சமூகத் துரோகம் என்று எழுதப்பட்டது.

1937-ம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி 1938-39 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை மாகாணத்தில் உள்ள 125 உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாய மொழியாக அறிவித்தார். இந்த அறிவிப்பை 1938-ம் ஆண்டு உத்தரவாகவும் பிறப்பித்தார் ராஜாஜி. 

இந்த உத்தரவிற்கு எதிராக மறியல், கருப்புக் கொடி காட்டுதல், உண்ணாவிரதம் என பல போராட்டங்கள் நடைபெற்றன. ஜூன் 1938-ல் சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் பங்குபெற்று சி.என். அண்ணாதுரை பேசினார். அவர் பேசி 3 மாதங்கள் கழித்து வழக்குப் பதிவு செய்து, அவரை 4 மாதம் சிறையில் அடைத்தது ராஜாஜியின் அரசு. மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜூலை 1938-ல் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பல பெண்களும் ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தனர். போராட்டம் வலுப்பெற்றது.

இதையடுத்து, போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் பெரியார், அண்ணா உள்பட பல தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதமும், அண்ணாவிற்கு 9 மாதமும் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது 2ம் உலக போர் ஆரம்பித்த நிலையில் இங்கிலாந்துடன் இணைந்து பிரிட்டிஷ் இந்தியாவையும் கலந்து கொள்ள சொன்னார்கள். இதை எதிர்த்து அனைத்து மாகாண முதல்வர்களும் பதவி விலகினார்கள்.

இந்த நிகழ்விற்குப் பின், சிறையிலிருந்த அனைத்துப் போராட்டக்காரர்களும் விடுவிக்கப்பட்டு, ஹிந்தி கட்டாயம் என்ற ராஜாஜி அரசின் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது.

அண்ணாவின் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம்

சுதந்திரத்திற்கு பின் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1948ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் பிராந்திய மொழி முதல் மொழியாகவும், ஹிந்தி, அரபு, தெலுங்கு ஆகிய பிற மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டாம் மொழியாகவும் கட்டாயம் படிக்க வேண்டும் என நூதன உத்தரவை வெளியிட்டார்.

இதை எதிர்த்து திராவிட கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பு மாநாடு நடத்தி அண்ணாவை ‘சர்வாதிகாரியாக’ நியமித்து பல கட்ட போராட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில், அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு சென்னையில் வைத்து கருப்புக்கொடி காட்டினார்கள்.

இதற்கிடையே, மத்தியில் ஆட்சி மொழி குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில்,  14 செப்டமபர் 1949ல் ஹிந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திராவிட கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அண்ணா தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து 17 செப்டம்பர் 1949ல் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இருப்பினும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தி.க.வும் தி.மு.க.வும் ஒன்றிணைந்தே செயல்பட்டன.

கட்டாய ஹிந்தியை அமல்படுத்திய மாகாண கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் திடீரென்று பதவி விலகியதையடுத்து கட்டாய ஹிந்தி உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. பின் வந்த அமைச்சர் மாதவ மேனன் ஹிந்தியை விருப்பப் பாடமாக அறிவித்து போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மத்திய அரசு 1950-களுக்குப் பிறகு தென் இந்திய மாநிலங்களில் ஹிந்தி பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக 1952ம் ஆண்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஹிந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 

இதற்கு எதிராக திமுக மற்றும் திக சார்பில் 1 ஆகஸ்ட் 1952-ம் தேதி பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்பட பல தலைவர்களின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் பெயர் பலகையை தார் பூசி அழித்தனர். இந்தச் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய காங்கிரஸ் கட்சியினர், தார் பூசிய பெயர் பலகையில் மண்ணெண்ணெய் ஊற்றி அழித்தனர்.

இதையடுத்து, 1955-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்திய அரசில் உள்ள துறைசார்ந்த பணிகள், ஹிந்தி மொழியை பெருவாரியாக பயன்படுத்துதல், நீதிமன்றங்களின் சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் பயன்படுத்த வேண்டிய மொழிகள் குறித்து ஆய்வு செய்ய  21 பேர் கொண்ட ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை அமைத்தார்.

இதற்கிடையில், சென்னை மாகாணத்தில் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என 27 டிசம்பர் 1956-ல் புதிய மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம். பின் அனைத்து கட்சியின் ஆதரவோடு மாகாண ஆட்சி மொழியாக நிறைவேறியது.

ஆட்சி மொழி ஆணையம் தனது அறிக்கையை  12 ஆகஸ்ட் 1957-ம் தேதி சமர்பித்தது. அந்த அறிக்கையை விவாதம் செய்து திருத்தங்களைக் கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள். ஆனால் திருத்தங்களைச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய உள்துறை அமைச்சர்.

ஹிந்தி பேசாத மாநில உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு தொடங்கியதை அடுத்து பிரதமர் நேரு முக்கிய வாக்குறுதி ஒன்றை கொடுத்தார். அவர் கூறுகையில், “முதலில் ஹிந்தி திணிப்பு இருக்கவே கூடாது, இரண்டாவது அரசுப் பணிகளில் ஆங்கிலத்தை மாற்று மொழியாக காலம் குறிப்பிடாமல் இருக்க செய்கிறேன். அதனைப் பற்றிய முடிவுகளை ஹிந்தி பேசாத மக்களே எடுத்துக் கொள்ளலாம்” என கூறினார்.

இந்நிலையில், 1960-ல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1965ம் ஆண்டு முதல் ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற ஆணையை வெளியிட்டார்.  ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இருக்கும் என்ற நேருவின் வாக்குறுதிக்கு எதிராக இது அமைந்தது.

இந்த ஆணையை எதிர்த்து அண்ணா தலைமையிலான திமுக போராட்டத்திற்கு தயாரானது. 30 ஆகஸ்ட் 1960-க்குள் ஆணையை திரும்பப் பெறவில்லை என்றால் தென்னகத்தை விடுவிக்கக் கோரி சுதந்திரப் போராட்டம் தொடரும் என அண்ணா அறிக்கை வெளியிட்டார். இந்த முறை போராட்டத்தை எதிர்க்கத் தயாரானார் புதிய முதல்வர் காமராஜர்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கொடுத்த அனுமதி அனைத்தும் அரசால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் 1 ஆகஸ்ட் 1960-ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அண்ணா,  "போராட்டத்தில் கருப்புக் கொடி மட்டுமே காட்டவேண்டும், ஹிந்தி ஒழிக! கட்டளையைத் திரும்ப பெறுக! என முழக்கமிடவேண்டும். இதற்கு மாறாக குடியரசுத் தலைவர் திரும்ப செல்க என கூறக் கூடாது, அவர் காரின் மீது எதுவும் வீசக் கூடாது என கூறியதோடு, அப்படி செய்பவர்கள் என் தம்பிகளே அல்ல" என கூறினார்.

போராட்ட நாள் நெருங்குவதற்கு முன்பே, போராட்ட குழுத் தலைவருக்கு நேரு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டுவது தமக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதேசமயத்தில், ஹைதராபாதில் பேசிய குடியரசுத் தலைவர் இனிவரும் காலங்களில் பிற மாநில சகோதரர்களின் உணர்விற்கு மதிப்பளித்து ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என கூறினார்.

பின்னர், அமைச்சரவையில் மத்திய அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 1963-ம் ஆண்டு ஆட்சிமொழி ஆணையம் கொடுத்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், 26 ஜனவரி 1965 முதல் ஹிந்தி ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் துணை மொழியாகவும் இருக்கும் என கூறப்பட்டது. அதில் முக்கியமாக ஆங்கிலம் துணை மொழியாக இருப்பது ஆட்சியாளர்களின் விருப்பம் என்ற விதத்தில் வார்த்தைகள் கையாளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாவின் மறைமுக தாக்கத்தை எதிர்த்து ஹிந்தி எதிர்ப்பு மாநில உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், மக்களவையில் ஹிந்தி ஆதரவு உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் அதிகமானோர் ஹிந்தி பேசுவதால் அதுதான் ஆட்சிமொழியாக அமைய வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து அண்ணா பேசுகையில், "நாட்டில் காக்கை தான் அதிகம் உள்ளது, பின் ஏன் அழகிய மயிலை தேசிய பறவையாக வைத்துள்ளோம்" என கேள்வி எழுப்பினார்.

ஹிந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் 17வது பிரிவை நீக்கவேண்டும் என வலியுறுத்தி 17 நவம்பர் 1963 ல் தொடங்கி 26 ஜனவரி 1965 வரை ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவித்தார் அண்ணா.

இந்த போராட்டம் புதிய உத்வேகம் எடுத்து அரசியல் கட்சி அல்லாத இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பிலிருந்து கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர்.

பேரணி, ஊர்வலம், கருப்பு கொடி காட்டுவது, மறியல், கருப்பு கொடி ஏற்றுவது என மாநிலம் முழுவதும் போராட்டம் வேகமெடுத்தது. இதில், முக்கியமாக திருச்சியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஹிந்தி எதிர்ப்பிற்கு தன் பங்கை தர வேண்டும் என்பதற்காக 25 ஜனவரி 1964ல் திருச்சி ரயில் நிலையத்தில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என கூறியபடி எரிந்து சாம்பலானார். இதுதான் ஹிந்தி எதிர்ப்பிற்கான முதல் தற்கொலை.

இதையடுத்து, போராட்டம் இன்னும் வேகமெடுத்தது, நேருவின் மறைவால் சாஸ்திரி பிரதமரானார். இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவு செய்தார் அண்ணா. இதற்கிடையில்  மாற்று கட்சியினரும், மாற்று சிந்தனையாளர்களும் ஹிந்தியை எதிர்க்க ஆரம்பித்தனர். உதாரணமாக முதலில் ஹிந்திக்கு ஆதரவளித்த ராஜாஜியே தற்போது ஹிந்தியை எதிர்க்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினர் அனைவரும் ஜனவரி 25 ம் தேதி கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை அனைத்து கல்லூரி மாணவர்களும் கையில் எடுத்தனர். ஜனவரி 26 அன்று சட்ட மசோதாவை எரிக்கும் போராட்டம் ஒரு பக்கம், மொழிப்பற்றை வெளிப்படுத்த தற்கொலைகள் மறுபக்கம் என நடந்து கொண்டிருந்தன. இதை அறிந்த அண்ணா யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டாம் என அறிக்கை வெளியிட்டார்.

மாணவர்களின் போரட்டத்தின் விளைவாக கல்லூரிகள் மூடப்பட்டு, விடுதிகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இதனைப் பயன்படுத்திய மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களைச் சந்தித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.  

நிலைமை மோசமடைவதை கண்ட அரசு, மாணவர்கள் மீதான அடக்கு முறையைத் தொடங்கியது. தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்துங்கள் என்று உத்தரவிட்டதாக தகவல் அண்ணாவை வந்தடைந்தது. அடக்குமுறையை உணர்ந்த அண்ணா பின்விளைவுகள் வரக் கூடாது என்பதற்காக மாணவர்களின் போராட்டத்தை பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள் என கூறினார்.

இதற்கிடையில், தமிழகத்தில் 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதல்வராகப் பதவியேற்றார். மத்தியில் சாஸ்திரி இறப்பிற்கு பின் இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.

27 நவம்பர் 1967-ல் ஆட்சி மொழி சட்டத்தில் ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக திருத்தி மசோத தாக்கல் செய்யப்பட்டது. இது சரியான முடிவல்ல அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அமல்படுத்த வேண்டும் என திமுக கூறியது. ஹிந்திக்கு அளிக்கப்படும் இடத்தை தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில், சிறிய திருத்தங்களுடன் 8 ஜனவரி 1968-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்தது. அந்த திருத்தத்தில் முக்கியமானவையாக, அனைத்து மொழிகளிலும் கல்வி, பண்பாடு போன்ற வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், இரண்டாவதாக மத்திய அரசுப் பணிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் ஹிந்தி அறிவு தேவையில்லை,  மூன்றாவதாக மும்மொழித்திட்டம்.

மும்மொழித் திட்டத்திற்கு எதிராகவும், அரசு வேலைக்கு ஆரம்ப நிலையில் ஹிந்தி தேவையில்லை எனில் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஹிந்தி கட்டாயம் என்ற மறைமுக நோக்கத்தை அறிந்த இளைஞர்கள் போராட்டத்தை  தொடங்கினார்கள்.

தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது. அமைச்சர்கள் மாணவர்களைச் சந்தித்து திமுக அரசில் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினர். இதற்கிடையில், ஒரு தரப்பினர் சென்னை ரயில் நிலையத்தை கொளுத்த கிளம்பினர், இதையறிந்த அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி நேரில் சென்று மாணவர்களை சமாதானம் செய்தார்.

இப்படியான போராட்டங்களுக்கு மத்தியில் உடல்நலக் குறைவால் அண்ணா 3 பிப்ரவரி 1969ம் தேதி காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் 1.50 கோடி மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் தலைமையை ஏற்ற கருணாநிதி மற்ற கட்சியினருடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்தார். இதற்கிடையில் மத்தியில் பல ஆட்சி மாற்றங்கள் அரங்கேறின. ஒவ்வொரு ஆட்சியாளர்களும் பொறுப்பேற்றவுடன் ஹிந்தி திணிப்பை புதிய புதிய வடிவில் அமல்படுத்தினர். தமிழர்களும் அதை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து, தற்போது வரை போராடிக் கொண்டு தான் வருகின்றனர்.

ஹிந்தி திணிப்பானது 20-ம் நூற்றாண்டைக் கடந்து 21-ம் நூற்றாண்டில் புதிய கல்விக் கொள்கை என்ற வடிவில் பரிணமித்து அமலாகவுள்ளது. மும்மொழிக் கொள்கை என்ற வடிவில் முதல் மொழி பிராந்திய மொழி, இரண்டாம் மொழி வெளிநாட்டு மொழிகளில் ஒன்று, மூன்றாவது மற்றொரு இந்திய மொழி கட்டாயமாக பயில வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

இதில், தமிழக குழந்தைகள் முதல் மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தையும் தேர்வு செய்தால் மூன்றாவது மொழியாக எந்த மொழியைத் தேர்வு செய்வது என்ற சிக்கல் ஏற்படும். 

உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாணவரும் விருப்ப மொழியாக ஒன்றைத் தேர்வு செய்தால் அத்தனை விருப்ப மொழிகளுக்குமான ஆசிரியரும் பள்ளிகளில் இருப்பதற்காக சாத்தியக் கூறுகள் இல்லை. அப்படி இருக்கையில், கட்டாயமாக ஹிந்தி மொழியைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு மாணவர்கள் மறைமுகமாக தள்ளப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

எனவே, கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற வார்த்தை இடம்பெற்றவுடனே, அதற்கான எதிர்ப்பைத் தொடங்கிவிட்டது தமிழகம். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக வைக்கப்படும் வாசகங்கள், கூற்றுகள் அனைத்தும் அண்ணாவினுடையது.

மொழிப்போரில் 30 ஆண்டுக் காலம் தலைமை வகித்து வழிநடத்திய பேரறிஞர் அண்ணா, மறைந்த பிறகு இன்றைய இளைஞர்களுக்கும் தலைமை வகித்து வழிநடத்தி வருகிறார்.

ஆதிக்கம் ஒலிக்கும் இடத்தில் அண்ணாவின் குரல் ஒலிக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com