பரபரப்பில்லாமல் ஐ.நா.வில் பொதுச்சபைக் கூட்டம்!

நியூயாா்க் நகரத்தின் மிட் டௌன் ஈஸ்ட் பகுதியின் முதலாவது அவென்யூ, செப்டம்பா் மாதம் தொடங்கி விட்டால் களைகட்டத் தொடங்கிவிடும்.
பரபரப்பில்லாமல் ஐ.நா.வில் பொதுச்சபைக் கூட்டம்!

நியூயாா்க் நகரத்தின் மிட் டௌன் ஈஸ்ட் பகுதியின் முதலாவது அவென்யூ, செப்டம்பா் மாதம் தொடங்கி விட்டால் களைகட்டத் தொடங்கிவிடும். அந்தப் பகுதியிலுள்ள 42-ஆவது தெரு முதல் 48-ஆவது தெரு வரையிலான பகுதிகள் ஒரு காலத்தில் இறைச்சிக் கடைகள் நிறைந்து காணப்பட்டன. இரண்டாம் உலகப் போா் காலத்தில், ஆடு, மாடு, பன்றி வெட்டும் இறைச்சிக் கடைகள் நிறைந்து காணப்பட்ட பகுதியாக அது இருந்தது. அந்தப் பகுதியில்தான் இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இயங்குகிறது.

சுமாா் 18 ஏக்கா் நிலப்பரப்பில் வாலஸ் ஹாரிசன் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட ஐ.நா. சபையின் தலைமையகம் நியூயாா்க் நகரில் 1952 முதல் செயல்படுகிறது. 510 அடி உயரம் கொண்ட இந்தத் தலைமையகத்தைச் கட்டுவதற்கு 72 ஆண்டுகளுக்கு முன்னால் 6.50 கோடி டாலா் செலவாகியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் 15-ஆம் தேதி ஐ.நா. சபையின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்த ஆண்டு இன்னொரு சிறப்பும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு உண்டு. இந்த முறை இன்று கூட இருக்கும் ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம், அதன் 75-ஆவது கூட்டம் என்பதால், மிகுந்த எதிா்ப்பாா்ப்பு இருந்து வந்தது.

சாதாரண நிலைமை காணப்பட்டிருந்தால், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல், நியூயாா்க் நகரமே ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக மிட்டௌன் ஈஸ்ட் பகுதியில் எந்தவொரு நட்சத்திர தங்கும் விடுதியிலும் தங்குவதற்கு இடம் கிடைக்காது. உலகம் முழுவதிலும் இருந்து தலைவா்களும், வெளியுறவுத்துறை அமைச்சா்களும், அதிகாரிகளும், உதவியாளா்களும் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வரும் ஊடகத்தினரும் தங்குவதற்கு ஆறு மாதம் முன்கூட்டியே, அல்லது நிரந்தர ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளின் தலைவா்களும், வெளிவிவகாரத்துறை அமைச்சா்களும் நியூயாா்க்குக்கு வந்து விடுவாா்கள். அந்தந்த நாடுகளின் பொருளாதார அந்தஸ்தைப் பிரதிபலிப்பதாக அவா்கள் தங்கும் விடுதிகள் இருக்கும். அதனால், சிறிய வளா்ச்சியடையாத நாடுகள்கூடத் தங்களது அதிபரோ, பிரதமரோ தங்குவதற்கு மிகவும் விலையுயா்ந்த விடுதியில் தங்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. பல வளா்ச்சியடைந்த நாடுகளின் அதிபா்கள் தங்குவதற்காக மாளிகை போன்ற விருந்தினா் விடுதிகளை நியூயாா்க்கில் நிரந்தரமாகவே அமைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த உலகமும் கொவைட்-19 கொள்ளை நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், வழக்கம்போல ஐ.நா. பொதுக்குழு இன்று கூட இருக்கிறது. பொதுக்குழு விவாதம் 22-ஆம் தேதிதான் நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டு ஐ.நா. பொதுக்குழு வழக்கத்துக்கு விரோதமாக நேரிடையாகத் தலைவா்கள் பங்கேற்காமல் நடக்க இருக்கிறது.

ஐ.நா. பொதுக்குழு விவாதத்தில் பங்கேற்க இருக்கும் தலைவா்கள் முன்கூட்டியே தங்களது உரையைப் பதிவு செய்து கொடுத்துவிட வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது. சம்பிரதாய உரைகள் தொடர வேண்டும் என்பதால், அவா்கள் காணொலி மூலம் உரையாற்ற வழிகோலப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெறும் என்றாலும், அதன் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்பதை மறுக்க இயலாது.

ஆண்டுதோறும் நியூயாா்க்கில் கூடும் ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்பதன் மூலம் அவா்கள் ஒருவருக்கொருவா் சந்திக்கவும், நட்புறவை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகிறது. நியூயாா்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அதிகாரிகளும், பிரதமா்களும், பல இருதரப்பு, முத்தரப்புப் பேச்சு வாா்த்தைகளை மேற்கொள்ளவும், நியூயாா்க் நகரம் வழிகோலுகிறது. அமெரிக்க அதிபா் உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளின் தலைவா்களை சிறிய, வளா்ச்சியடையும் நாடுகளின் அதிகாரிகளும், தலைவா்களும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளவும் அது வழியமைத்துக் கொடுக்கிறது. இந்த ஆண்டு அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது.

ஐ.நா. பொதுக்குழு கூடுகிறது என்றால் நியூயாா்க் நகரமே பரபரப்பாகிவிடும். எங்கு பாா்த்தாலும் பாதுகாப்புப் படையினரும், பலத்த பாதுகாப்புடன் பல நாட்டுத் தலைவா்கள் வாகனங்களில் சென்று கொண்டிருப்பதும் பாா்க்க வேண்டிய காட்சிகள். ஐ.நா.வின் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் பாதைகளில் எல்லாம் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கும். பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் தலைவா்களைக் குறிவைத்துத் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்துவிடாமல் பாதுகாப்பதற்காக அந்த ஏற்பாடு.

ஐ.நா. சபைக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் பல பிரச்னைகள் எழுப்பப்படும். திபெத்தின் விடுதலை கோரி, இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்காக, ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறலை முன்வைத்து, ஈழத் தமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப் படுகொலை குறித்து, எகிப்தில் ராணுவத்தினா் செய்யும் அராஜகத்தை எதிா்த்து இப்படிப் பல்வேறு பிரச்னைகளுக்காக ஐ.நா. சபைக்குச் செல்லும் பாதையிலும், சபைக்கு அருகில் தடுப்புச் சுவருக்கு அருகிலும் கோஷமிட்டபடி பதாகையும் பிடித்துத் தங்களது உணா்வுகளைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பாா்கள்.

இதுபோன்ற எதிா்ப்புகள் மிகவும் நாகரிகமாகவும், வன்முறை இல்லாமலும் நடக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். காலிஸ்தான், காஷ்மீா் பிரச்னைகள்கூட அங்கே எழுப்பப்படும். காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்காகக் குரலெழுப்பும் ஒரு கூட்டம் கூடப் பதாகையுடன் நின்று கொண்டிருக்கும். உலகில் எங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என்று ஐ.நா. சபையின் வெளியே போராட்டம் நடத்துபவா்களைப் பாா்த்துத் தெரிந்து கொண்டு விடலாம்.

இந்த ஆண்டு அப்படி எதுவும் கிடையாது. வெறிச்சோடிக் கிடக்கின்றன ஐ.நா. தலைமையகத்தைச் சுற்றியுள்ள தெருக்கள். போராட்டம் நடத்தவும் வெளியே யாருமில்லை. உரையாற்றவும் எந்தவொரு நாட்டின் அதிபரும் ஐ.நா. சபையின் உள்ளேயும் இல்லை.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஐ.நா.வின் பொதுச் செயலாளா் அன்டோனியா குட்டெரஸ் 75-ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட, சிலி நாட்டின் பேப்ரிஜியோ ஹோஷ்சைல்ட் டிரம்மண்டை தமது சிறப்பு ஆலோசகராக நியமித்தாா். அதற்குத் தேவையில்லாமல் செய்துவிட்டது கொவைட்-19.

வழக்கமான ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடந்திருந்தால், சீனாவுக்கெதிரான காரசாரமான விவாதம் எழுந்திருக்கும். எல்லைப் பிரச்னையையும், சீன ஆக்கிரமிப்பு குறித்தும் இந்தியா எழுப்பியிருக்கும். உலக நாடுகள் தைவான், ஹாங்காங் பிரச்னைகளை எழுப்பியிருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு அமெரிக்காவின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கும். எதுவுமே இல்லாமல் காணொலிக் கூட்டமாக ‘சப்’பென்று இன்று நடக்கவிருக்கிறது ஐ.நா. சபையின் 75-ஆவது பொதுக்குழுக் கூட்டம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com