'புற்றுநோய்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும்தான் மருந்து'

தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் புற்றுநோயை வெற்றி கொள்ளலாம் எனத் தெரிவிக்கிறார் வெற்றிகொண்டவர்களில் ஒருவரான  விவசாயி கோ. கணேசன்.
கோ. கணேசன்
கோ. கணேசன்

தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் புற்றுநோயை வெற்றி கொள்ளலாம் எனத் தெரிவிக்கிறார் வெற்றிகொண்டவர்களில் ஒருவரான  விவசாயி கோ. கணேசன்.

புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்து 5 ஆண்டுகள்  ஆன நிலையில் இன்றும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள இராயபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோ. கணேசன்.

தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் கூறுகிறார் கணேசன்:

"நான் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சென்ற 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திருந்து எனக்கு, மலம் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்தது. வயதாகும் காலத்தில் ஏற்படும் பிரச்னை என அதைத் தொடக்கத்தில் நினைத்தேன். ஏப்ரல் மாதம் பிரச்னை அதிகமானதும் மன்னார்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் சென்று உடலில் ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து தெரிவித்தேன்.

அந்த மருத்துவமனையில், பரிசோதனை செய்து பார்த்ததில், என்னுடைய மலக்குடலில் சிறுகட்டி இருப்பது தெரியவந்ததும், அதை அறுவைச் சிகிச்சை மூலம்தான் அகற்ற வேண்டும் எனக் கூறி, அரசு மருத்துவக் கல்லூரி அல்லது தனியார் மருத்துவமனையில் மேலும் பரிசோதனை செய்துகொள்ள  மருத்துவர் அறிவுறுத்தினார்.

என் நண்பர் ஒருவர் தெரிவித்ததன்படி, மே மாதம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெகதீஸ் சந்திர போஸிடம் ஆலோசனை பெற்றேன்.

அங்கு, அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று, அவற்றின் முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர், எனக்கு மலக்குடலில் புற்றுநோய்க் கட்டி இருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும், அதே மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மருத்துவர் சுப்ரமணியத்திடம் ஆலோசனை பெறுமாறு தெரிவித்தார்.

அவரின் ஆலோசனையின்படி மேலும் கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இனி அறுவைச் சிகிச்சை அவசியம் இல்லை என்று கூறியதுடன், மீண்டும் புற்று வருவதற்கு வாய்ப்பில்லை என உறுதி கூற முடியாது. இதற்கு நிரந்தர தீர்வு அறுவைச் சிகிச்சை. இதனை செய்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பயம் இல்லை என்றார்.

புற்றுநோய் உயிர்கொல்லி நோய் இல்லை. அது மற்ற நோய்களைப் போன்றுதான். இதனை மருத்துவத்தால் 20 சதவீதம்தான் குணப்படுத்த முடியும். மீதம் 80 சதவீதம் நோயாளியிடமிருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும்தான். இதனை உணர்ந்துகொண்டால் புற்றுநோயிலிருந்து எளிதில் வெற்றிகொள்ளலாம் என்றார். மருத்துவரின் இந்த வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தையும் உந்துசக்தியையும் அளித்தன.

இதனையடுத்து, மீண்டும் மருத்துவர் ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆலோசனை பெற்று அவரது அறிவுரையின் பேரில், அறுவைச் சிகிச்சைக்காக தயாரானேன். இந்த காலக்கட்டத்தில் மகனின் திருமணம் தேதி உறுதிப்படுத்தப்பட்டதால், ஒரு மாத காலத்திற்குள் திருமண நிகழ்வுனை முடித்துகொண்டு அறுவைச் சிகிச்சைக்காக 2016 ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் திருநாளை கொண்டாடிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.

அங்கு 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. மலக்குடலில் இருந்து புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 7 நாள், 20 நாள் சாதாரண வார்டு. பின்னர், 7 நாள் மருத்துவமனையில் தங்கி பரிசோதனைகள் செய்துகொண்டு ஒரு மாதம் முடிந்த நிலையில், ராயபுரம் வீட்டுக்கு முழு குணம் அடைந்து வந்துவிட்டேன்.

ஊருக்கு திரும்பும்போது, மருத்துவர்கள் சொன்ன அறிவுரையான 3 மாதம் கட்டாயம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, உங்கள் வேலையை பிறர் உதவியின்றி செய்ய வேண்டும். உடல் எடை கூடவும் கூடாது. குறையவும் கூடாது. தினசரி காலையில் கட்டாயம் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்பதாகும்.

இதனை, நான் முழுமையாக இன்று வரை கட்டுப்பாடுடன் பின்பற்றி வருகிறேன். 3 மாதத்திற்கு ஒரு முறை, பின்னர், 6 மாதம் மருத்துவப்  பரிசோதனை செய்து வந்த நான், நிகழாண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனைக்கு வந்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.

எனக்கு, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு முன் நான் எந்த அளவுக்கு விவசாயப் பணி மற்றும் திராவிடர் கழகத்தில் மாவட்டச் செயலராக இருப்பதால் இயக்கப் பணியாக இருந்தாலும் சரி, ஊரில் நடைபெறும் பொது நிகழ்வுகளானாலும் சரி, அதனை எவ்விதமான சுணக்கம் காட்டாமல், சலிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் செயல்படுவதற்கு காரணம், மருத்துவர்கள் சொன்ன தைரியமும் தன்னம்பிக்கையும்தான். இவை இருந்தால் நோயை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இவற்றையல்லாம்விட மருத்துவரின் நம்பிக்கை அளிக்கும் வார்த்தையே மனித உயிரைக் காக்கிறது என்பதை என் அனுபவத்தின் மூலம் அறிந்தேன். 5 ஆண்டு காலம் ஓடிவிட்டது. இன்று வரை தைரியம், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன் என்று தெரிவித்தார் கணேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com