'அரசு மருத்துவக் கல்லூரி எங்கள் குடும்பக் கோவில்'

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிதான் எங்க குடும்பக் கோவில், மருத்துவர்கள் கடவுள் என்கிறார் பாப்பாரப்பட்டி சேர்ந்த கிராமத்துப் பெண் பழனியம்மாள்.
குடும்பத்தினருடன் பழனியம்மாள்.
குடும்பத்தினருடன் பழனியம்மாள்.

கிருஷ்ணகிரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எங்க குடும்பக் கோவில், மருத்துவர்கள் எங்கள் கடவுள் என்கிறார் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த கிராமத்துப் பெண் பழனியம்மாள்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (50). இல்லத்தரசி. இவரது கணவர் சண்முகம்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து உற்சாகமாகக் கூறுகிறார் பழனியம்மாள்:

"நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, உறவுக்காரர் ஒருத்தியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போனேன். அப்போ, பணியிலிருந்த ஒரு நர்சு, கேன்சர் பத்தியும் பரிசோதனையின் அவசியம் குறித்தும் சொன்னாங்க.

"அப்போ, என்னுடைய மார்பகத்தில் இருந்த கட்டியும் வலியும் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, கேன்சர்  பரிசோதனையை செஞ்சுக்கிட்டேன். சோதனையில் எனக்கு கேன்சர் இருக்கறதா சொன்னாங்க. இது எனக்கும் என் குடும்பத்துக்கும் அதிர்ச்சியாகவும், இடியாகவும் இருந்தது.

"உடனே குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாம் ஒன்று கூடிப் பேசி கேன்சருக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது என்று முடிவு பண்ணினோம்.

"தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் கேன்சருக்கான சிகிச்சையை எடுத்துக்கிட்டேன். 15 நாளில் ஆபரேஷன் செஞ்சு கட்டிய நீக்கிட்டாங்க. இப்போ ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.

"மருத்துவர்கள் சொல்ற ஆலோசனையை தொடர்ந்து கடைப்பிடித்து வரேன். திருப்பூரில டெய்லர்  வேலை செஞ்சு வந்த கணவர், வேலையை விட்டுவிட்டு வந்து என்னை கவனிக்கிறார். குடும்பத்தில அன்பும், ஆதரவும் இருக்கிறதால நான் சீக்கிரமா குணம் ஆயிட்டேன்.

"ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமா கேன்சர் பரிசோதனை செஞ்சுக்கணும். கிராமத்துல போதிய விழிப்புணர்வு இல்லை. வெட்கம் காரணமா என் பொண்ணு கூட கேன்சர் பரிசோதனை செய்ய மாட்டேங்கிறாங்க. நம்ம உடம்ப பாத்துக்கிறதுல பயமோ வெட்கமோ வேண்டாம்.

"இந்தக் கரோனா காலத்துல மருந்து கிடைக்க சிரமமாயிருந்தது. அரசு மருத்துவர்கள் அந்த மருந்த எனக்கு கிடைக்க வழி செஞ்சாங்க. அஞ்சு வருஷமா தொடர்ந்து மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. தொடர்ந்து நாலு வருஷமா விடாம சாப்பிட்டு வரேன். ஆரம்பக் கட்டத்துல இந்த நோய் குறித்து பரிசோதனை செய்து கண்டுபிடிச்சதால நான் இப்போ நல்லா இருக்கேன். இதற்கு காரணம் அரசு மருத்துவர்களும் மருத்துவமனையும்.

"எங்க குடும்பத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி கோவில், மருத்துவர் கடவுள். ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டுபிடிச்சிட்டா, எந்த கஷ்டமும் இல்லாம சீக்கிரமா குணம் ஆயிடலாம்" என்றார் அவர்.

புற்றுநோய் பற்றி சொல்ல விரும்புவதைக் கேட்டால், "பெண்களுக்கு  அச்சமோ வெட்கமோ கூடாது, தேவையின்றி எதையும் தள்ளிப் போடவும் வேண்டாம்" என்கிறார் பழனியம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com