'மும்முறை ஆட்கொண்ட புற்றுநோயை மனோதிடத்தால் வென்றேன்!'

மூன்று முறை தாக்கிய புற்றுநோயை எதிர்கொண்டு சிகிச்சையாலும் மனோதிடத்தாலும் வென்று வாழ்ந்துகொண்டிருக்கும் கோபாலன் மணி, தன்னம்பிக்கை முக்கியம் என்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புற்றுநோய் வந்துவிட்டால் அவ்வளவுதான் குணப்படுத்த முடியாது. இறந்துவிடுவோம் என்று கருதும் நிலையெல்லாம் மாறி இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் குணப்படுத்தி விடலாம் எனும் விழிப்புணர்வு மக்களிடையே மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வருபவர்களே  புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.

கும்பகோணம் அருகே திருக்கருகாவூர் பகுதியைப் பூர்விகமாகவும், மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் லூயிஸ்வாடியில் வசித்து வருபவருமான கோபாலன் மணி (64), மூன்று முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனோதிடத்தாலும் சிகிச்சையாலும் மீண்டு தற்போது உற்சாகத்துடன் வாழ்ந்து வருகிறார்.

தொலைபேசிவழி கோபாலன் மணி கூறியதாவது:

"கடந்த 2008-இல் முதல்முறையாக கழுத்துப் பகுதியில் வலி, 4 நாள்களுக்குத் தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையால் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டேன். சோதனை முடிவில், மீடியாஸ்டினல் (நெஞ்சுப்பகுதி) புற்றுநோய் இருப்பது உறுதியானது. இந்த வகையான புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சையோ, ரேடியேஷன் மருத்துவமோ கிடையாது என்பதால், அருகில் உள்ள மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு 21 நாள்களுக்கும் ஒருமுறை 5 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து 6 முறை கீமோதெரபி சிகிச்சை செய்தேன். எவ்வித தீய பழக்கமும் இன்றி சரியான உணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பின்பற்றிய எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியாகவும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது.

இந்த வகையான புற்றுநோய் கருவழித் தொடரில் வந்துள்ளது. இது தவிர்க்க முடியாது. இருப்பினும் உரிய சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர் விளக்கமளித்து, ஊக்கமளித்தார்.

கீமோதெரபி மேற்கொள்ளும்போது பல்வேறு விதமான உடல் பிரச்னைகள் வரத் தொடங்கின. முதலில், உணவு உட்கொள்ளுதலில் சிரமம், காய்ச்சல், மயக்கம் வருவது, முடி உதிர்தல், உடல் எடை இழப்பு என 4 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டதில், இதுபோன்ற பல்வேறு சிரமங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களில் அதிக நீர், இளநீர், முறையான உணவு பழக்கத்தினால் உடல் தேற ஆரம்பித்தது.

தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை, அடுத்தாண்டு 2 முறை, அதற்கடுத்தாண்டு ஒரு முறை என 3 ஆண்டுகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது,  நான்ஹாட்கின்ஸ் லிம்போமா (என்ஹெச்எல்) எனும் ரத்தத்தில் வரும் கேன்சரால் மீண்டும் பாதிக்கப்பட்டேன்.

கீமோதெரபி எடுத்துக்கொண்டதால் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கியதன் காரணமாக, இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு வந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே புற்றுநோயை எதிர்கொண்ட அனுபவம் இருந்தது. இதனால், இந்த வகையான புற்றுநோய் எதிர்கொள்வதற்கும் மீண்டும் மனதளவில் தயாரானேன். முதல் முறை சிகிச்சை எடுத்தது போல் இதற்கும் கீமோதெரபி 4 மாதங்கள் மற்றும் ரேடியேஷன் சிகிச்சை முறை 25 நாள்களுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன்.

இதையடுத்து, கடந்த 2019 இல் பரிசோதனை செய்தபோது, என்ஹெச்எல் எனும் புற்றுநோய் பாதிப்பு குறைந்த அளவில் இருப்பது தெரியவந்தது. இதற்காக 3 ஆவது முறையும் கீமோதெரபி மேற்கொண்டேன். சுமார் 4 மாதங்களுக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இயல்புநிலையில் அனைத்து பணிகளையும் செய்யும் அளவிற்குத் தேறினேன். தொடக்கத்தில் எதிர்கொண்ட சூழல் மாறி வயதாகி வரும் நிலையில் சற்றுக் கடினமாக இருந்தது. எனினும் எதிர்கொண்டே தீருவேன் எனும் என் மனநிலைதான் இதிலிருந்து மீள்வதற்கு உதவி புரிந்தது.

சுமார் 12 ஆண்டுகள் புற்றுநோய் பாதிப்பால் மனசோர்வு, உடல் பிரச்னைகள், சிகிச்சை பெறுவது என மன உளைச்சல் அதிகம் இருந்தது. இதுபோன்ற அனைத்து சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்தது எனது மனைவி உஷா, மகள் செளமியா மற்றும் நண்பர்கள், உறவினர்கள்தான்.

எனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர் உதவிக்கரம் ஒருபுறம் இருந்தாலும், தன்னொழுக்கம், எதைப் பற்றியும் கவலை கொள்ளாது தொடர்ந்து போராட வேண்டும் எனும் உத்வேக மனோதிடத்தை வளர்த்துக் கொண்டேன். இதன் மூலம்தான் என்னை 3 முறை தாக்கிய புற்றுநோயை வெற்றிகொண்டு, கடந்த 6 மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பின்றி ஆரோக்கியமான மனிதனமாக வாழ்ந்து வருகிறேன்."

எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் புற்றுநோயைத் துணிந்து போராடி வெற்றிகொள்வதில் சிகிச்சையுடன் துணையாக நிற்கிறது கோபாலன் மணியின் மனோதிடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com