காவிரி டெல்டாவில் புகையிலையால் அதிகரிக்கும் புற்றுநோய்

புற்றுநோய் பாதிப்பைத் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவிகிதம் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். குணமடைந்தவர்களும் இதை அனுபவ ரீதியாகக் கூறுகின்றனர்.
பழையபடி காயில் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மாரிமுத்து.
பழையபடி காயில் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மாரிமுத்து.

நம் நாட்டில் புகையிலைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் உயிரிழப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், குறிப்பாக வாய், குரல்வளை, நுரையீரல் புற்றுநோய் 90 சதவிகிதம் புகையிலைப்  பழக்கத்தால் வருகிறது.

டெல்டா மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூரில் ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை நடத்தும் தஞ்சாவூர் கேன்சர் சென்டருக்கு மாதத்துக்கு சராசரியாக 150 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர் புகையிலைப் பழக்கத்தால் புற்றுநோய்க்கு ஆளாவது பரிசோதனையில் தெரிய வருகிறது.

புகையிலை உபயோகம் காரணமாக வாய், தொண்டை, நுரையீரல் மூச்சுக்குழாய், உணவுக்குழாய்,  சிறுநீர்ப்பை,  சிறுநீரகம்,  கணையம்,  கருப்பை வாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது.

டெல்டா பகுதியான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் பரவியுள்ளது. இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இதனால், 40 வயதுக்கு அதிகமானோர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

குறிப்பாக, திருவாரூர், நாகை, வேதாரண்யம் போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

வேதாரண்யம் பகுதியில் புகையிலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதனால், இந்தப் பகுதி நிலத்தடி நீரில் புகையிலைச் சாறு கலந்து தண்ணீரே நச்சாக மாறிவிட்டது. இதன் காரணமாகவும் அப்பகுதியிலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சிகரெட், பீடி போன்றவற்றைவிட வட மாநிலங்களிலிருந்து கட்டுமானப் பணிக்கு வருபவர்கள் மூலமாக ஆண்களிடம் பான்பராக் வகை பாக்குகள், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், கேப்சூல் வகை புகையிலை போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் ஆண்களில் 70 சதவிகிதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்

புற்றுநோய் பாதிப்பைத் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவிகிதம் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதை குணமடைந்தவர்களும் அனுபவ ரீதியாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சி சூரங்கொல்லையைச் சேர்ந்த மோட்டார்களுக்கு காயில் கட்டும் தொழிலாளி மாரிமுத்து (46) தெரிவித்தது:

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாயில் நாக்குக் கீழே சிறு கொப்பளம் போன்று இருந்தது. சிறு வயதில் இருந்து சிகரெட் பிடித்து வந்தேன். ஒரு நாளைக்கு 6 முதல் 7 பாக்கெட்கள் சிகரெட் பிடித்தேன். ஒருநாள் மோட்டாருக்கு காயில் கட்டும்போது வாயில் கம்பி குத்திவிட்டது. காயமான இடத்தில் நிக்கோடின் படிந்து பிரச்னையை ஏற்படுத்தியது.

மாரிமுத்து
மாரிமுத்து

இதையடுத்து, தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் பரிசோதனை செய்தபோது, புற்றுநோய் என்பது தெரிய வந்தது. புற்றுநோயின் மூன்றாவது நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்த பிறகு நான் உயிர் பிழைப்பதே சிரமம் என உறவினர்கள் கருதினர். சிலர் நாள்களை நிர்ணயித்து அதற்குள் இறந்துவிடுவேன் எனக் கூறி வந்தனர். ஆனால், இது ஒன்றும் செய்யாது; அப்படித்தான் இருக்கும்; சரியாகிவிடும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தனர். அவர்கள் கூறியதுபோலவே குணமாகிவிட்டேன். புற்றுநோய் பாதிப்பின் தொடக்கத்தில் எதுவுமே சாப்பிட முடியாமல் தவித்தேன். நடக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பரிசோதனை செய்தோம்.

அப்போது, புற்றுநோயின் மூன்றாவது நிலை என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, 33 முறை கரன்ட் வைத்தனர். ஓராண்டாக சாப்பிடுவதற்கு சிரமப்பட்டு வந்தேன். கஞ்சிதான் குடிக்க முடியும். இப்போது, கொஞ்சங்கொஞ்சமாகப் பரவாயில்லை. என்றாலும், காரமாக எதுவும் சாப்பிட முடியாது. போகப் போக சரியாகிவிடும் என்றும் ஓராண்டுக்கு பிறகு எந்தப் பாதிப்பும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனக்கு நாள் குறித்தவர்கள் உள்பட பலரும் நான் குணமாகிவிட்டதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். தற்போது, சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக விட்டுவிட்டேன். நலமாக இருக்கிறன். மீண்டும் பழையபடி மோட்டார் வேலை, காயில் கட்டுவது என அனைத்து வேலைகளும் செய்ய முடிகிறது" என்றார் மாரிமுத்து.

இவரைப்போல தஞ்சாவூர் அருகே நெடார் தாளக்குடியைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு தெரிவித்தது:

"எனக்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் புகையிலை போடும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு பல் வலி வந்தது. இதன் பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்றோம். நான் நெடுந்தொலைவிலிருந்து வந்திருப்பதாலும், ஒரு மாதத்துக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், என்னை தஞ்சாவூர் கேன்சர் சென்டரிலேயே சிகிச்சை பெறுமாறு கூறினர். அங்கு பரிசோதனை செய்தபோது ஆரம்ப கட்டம்தான் இது; சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்தப் பாதிப்பு வந்தபோது வெளியில் யாருக்கும் தெரியாது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரியும். அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு மாதத்தில் குணமாகிவிட்டேன். ஆனால், பல் எல்லாம் கொட்டிவிட்டது. நாக்கிலும் சிறு பகுதி அகற்றப்பட்டதால், பேசும்போது நாக்கு குளறும். மற்றபடி நன்றாக இருக்கிறேன். பழையபடி வயல் வேலை செய்து வருகிறேன்" என்றார் திருநாவுக்கரசு.

புகையிலையில் 200 வகை நச்சுப் பொருள்கள்

பான்பராக், ஹான்ஸ், குட்கா போன்ற மெல்லும் வகை புகையிலை பொருள்கள், பீடி, சிகரெட் போன்ற புகைக்கும் வகை புகையிலை பொருள்களில் 200-க்கும் அதிகமான புற்றுநோயை உருவாக்கும் நச்சுப் பொருள்கள் உள்ளன. இவற்றில் ஹெக்ஸமின் (தீப்பெட்டியில் உள்ள உரசும் பகுதி), நைட்ரோ பென்சீன் (பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்), பினாயில் (பூச்சிக் கொல்லி), காட்மியம் (கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் திரவம்), நாப்தலின் (ரசக்கற்பூரம்), ஸ்டீரிக் அமிலம் (மெழுகு தயாரிக்கப் பயன்படும் அமிலம்), கார்பன் மோனாக்சைடு (வாகனத்திலிருந்து வெளியேறும் புகை), ஆர்சனிக், ஹைட்ரஜன் சையனைடு (விஷப்பொருள்), நிக்கோட்டின் (அடிமைப்படுத்தும் பொருள்) எனப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய 200-க்கும் அதிகமான நச்சுப் பொருள்கள் உள்ளன.

கூடுதல் விலைக்கு விற்பனை

எனவே, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தடை விதித்தது. என்றாலும், டெல்டா மாவட்டங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை வழக்கம்போல நடைபெறுகிறது.

அரசு விதித்த தடை காரணமாக மறைத்து வைத்து விற்கப்படுகிறது. அதனால், முன்பு ரூ. 5-க்கு விற்ற புகையிலை இப்போது கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதேபோல, பான்பராக் உள்ளிட்டவையும் கூடுதல் விலைக்கு வழக்கம்போல விற்பனையாகிறது. அவ்வப்போது பெயரளவுக்குச் சோதனை நடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டாலும், இதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

காவிரி டெல்டா பகுதிகளில் புகையிலையால் புற்றுநோய் என்பது பெரும் பிரச்னையாக மாறிக் கொண்டிருப்பது ஆபத்தின் அறிகுறி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com