இப்போதும் அதே சுறுசுறுப்பு; தொடரும் காத்தலிங்கத்தின் விவசாய வேலை

வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்ட திருவாரூரைச் சேர்ந்த காத்தலிங்கம், மீண்டும் துடிப்புடன் தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்ட காத்தலிங்கம், மீண்டும் துடிப்புடன் தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

உடலில் லேசாக வெப்பம் அதிகரித்ததுபோல் தோன்றினாலும், பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும், அது உண்மையாக இருந்தால், மனதளவில் தளர்ந்து, நோயின் தாக்கத்தை அதிகரிப்பதும் பெரும்பாலானவர்களின் நிலை. தற்போது கரோனா காலத்தில், பெரும்பாலான மக்கள், பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

குணப்படுத்தக்கூடிய நோய்களுக்கே இந்த நிலை எனும்போது, குணப்படுத்த முடியாதவை வந்தால், தளர்ச்சியின் உச்சத்துக்கே போய், தன்னம்பிக்கையின்றி வாழ்நாளின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக்கொள்ளும் மனிதர்கள் ஏராளம். புற்றுநோய் வரும்போது பலரும் தன்னம்பிக்கையைத் தொலைத்து விடுகின்றனர்.

ஆனால், துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவோரும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போல இருக்கிறார்கள்.

பெரும் புள்ளிகள் மட்டுமல்ல, புற்றுநோயை எதிர்கொண்டு, சிகிச்சை பெற்று, இன்னமும் தனது பணிகளைத் தொடர்ந்து செவ்வனே செய்து வரும் சாமானியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

திருவாரூர் அருகே காத்தலிங்கம் என்பவர், வாய்ப் புற்றுநோயிலிருந்து மீண்டு, தற்போது எப்போதும் போல தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

திருவாரூர் அருகே மேல ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம் (60). விவசாயக் கூலித்தொழிலாளியான காத்தலிங்கத்துக்கு, வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பழையபடி தனது விவசாயப் பணிகளை செய்து வருகிறார்.

காத்தலிங்கம் கூறுகிறார்:

எனக்கு சொந்தமாக நிலம் கிடையாது. விவசாயக் கூலி வேலை செய்து 3 மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். விவசாயக் கூலி என்பதால், இதை வைத்தே வாழ்க்கை நடத்தி வந்தோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாயில் லேசாக வலி வந்தது. தொடக்கத்தில் கவனிக்கவில்லை. ஆனால், வலி தொடர்ந்து இருந்து வந்ததால், என்னால் பணிகள் செய்ய இயலவில்லை. இதனால், ஒரே குழப்பம் ஏற்பட்டது. மீன் சாப்பிட்டதால், முள்ளானது மாட்டியிருக்கலாம், அதனால் வாயில் வலி ஏற்பட்டிருக்கும் என சிலர் தெரிவித்தனர்.

எனவே, வாயில் ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெறுவதற்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மனைவியுடன் சென்றேன். அப்போது அங்கு பரிசோதனை செய்ததில், வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். எதனால் இந்த நோய் வந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. மேலும், தொடக்க நிலையில் இருப்பதாகவும், இதை எளிதில் குணமாக்கி விடலாம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, 2019 ஜனவரியில் வாய்ப் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்தனர். அப்போதிலிருந்து இன்றுவரை எவ்விதப் பிரச்னையும் இல்லை. விவசாயப் பணிகள், பால் கறப்பது என அனைத்துப் பணிகளையும் வழக்கம் போலவே செய்கிறேன்.  

கடைசி மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும். அதுதான் இப்போதைய கடமை. மற்றபடி, நோய் வந்தது, போனது என்பதெல்லாம் எனக்கு பழங்கதையாகத்தான் தெரிகிறது என்கிறார் தன்னம்பிக்கையோடு.

நோய் என்பதால், உடலுக்குத்தானே தவிர மனதுக்கு அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் காத்தலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com