'மார்பகப் புற்றுநோய்: 25 வயது முதலே மருத்துவப் பரிசோதனை அவசியம்'

25 வயது முதலே ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணமாக்கிவிடலாம் என்கிறார் மருத்துவர் கே. வேலவன்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெண்கள் 25 வயது முதலே ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே குணமாக்கிவிடலாம் என்று ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கே.வேலவன் குறிப்பிடுகிறார்.

"நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், குடல் புற்றுநோய் இருந்தாலும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"உலக சுகாதார அமைப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 முதல் 31ஆம் தேதி வரை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்தது.

"உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல் இந்திய அரசும் இதுகுறித்த விழிப்புணர்வைப் பெண்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புக் காட்டி வருகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல், அதன் அறிகுறிகள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய செய்ய வேண்டிய பரிசோதனைகள், சிகிச்சைகள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு வழிமுறைகள் என்று அரசும் தொண்டு நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

உலக அளவில் இந்தியாவில் மட்டும் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி வருகிறார்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே இந்தப் புற்றுநோயின் தன்மை என்று சொல்லலாம். மார்பகத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டியை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அறியாமல் விட்டால் இவை உடலின் பிற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

30 வயதிலேயே பாதிப்பு

ஒருகாலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே பாதித்துவந்த மார்பகப் புற்றுநோய் தற்போது 30 வயதுள்ள பெண்களையும் பாதிக்கிறது. உடல் பருமன், சிறு வயதில் பூப்படைதல், தாமதமான திருமணம், தாமதிக்கும் குழந்தைப்பேறு,  குழந்தைப்பேறுக்கு சிகிச்சை, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டாதது,  அடிக்கடி எக்ஸ் கதிர் ஊடுருவல் பரிசோதனை செய்தல், கட்டுப்படுத்தப்படாத அதிகப்படியான நீரிழிவு, புகை, மதுப்பழக்கங்கள், தாமதமாகும் மெனோபாஸ் போன்றவை முக்கியமான காரணங்களாகும்.  

விழிப்புணர்வுப் பரிசோதனை

40 வயதுக்கு முன்னதாகவே இந்தப் பிரச்னைகள் வருவதும் உண்டு என்பதால் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மருத்துவரைச் சந்தித்து மார்பகப் பரிசோதனை செய்துகொள்ளலாம். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரே உங்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவார். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆரம்ப நிலையில் கண்டறிவது அவசியம்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவதிலும் சிரமமிருக்காது. புற்றுநோயின் தீவிரம், நிலைகளைக் கொண்டு அதற்கேற்றாற்போல் மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி என்று இவற்றில் ஒன்று அல்லது மூன்றும்கூட அளிக்கப்படுகிறது.

மார்பகத்தில் வலி இல்லாத சிறு கட்டி இருக்கும்போதே கண்டறியப்படுவது முதல்நிலை, இரண்டாம் நிலை என்று சொல்லலாம். இந்த நிலையில் கண்டறியப்படுபவர்கள் உயிருக்கு ஆபத்து என்னும் நிலையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

மார்பகக் கட்டிகளை அலட்சியப்படுத்தி வலி அதிகமாகும்போது நோய் முற்றிய பிறகு மூன்று, நான்காம் நிலையில் கண்டறியப்படும்போது சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழப்புகள் நேர்ந்துவிடுகின்றன.

எச்சரிக்கை அவசியம்

பெண்கள் எப்போதும் தங்கள் ஆரோக்கியத்தில் ஒருவித எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். உடல் உறுப்புகளில் உண்டாகும் சிறு மாற்றத்தையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.  ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது முக்கியமாகும். மாதம் ஒருமுறை நீங்களே சுய பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

சிறு கட்டிதானே என்று அலட்சியப்படுத்தாமல் சங்கடமாக உணராமல் கூச்சத்தைவிட்டு உரிய மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பெரும்பாலான பெண்கள் மார்பகத்தில் மாற்றம் வந்தாலும் அதை மருத்துவரிடம் காண்பிப்பது இல்லை. கட்டி பெரிதாகி வலி தீவிரமாகும்போதுதான் மருத்துவரை அணுகுகிறார்கள். மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளவே தயங்குகின்றனர். புற்றுநோய் வந்தாலே இறப்புதான் என்று அச்சம் கொள்ளாமல் வித்தியாசமான அறிகுறி தோன்றியதும் மருத்துவரை அணுக வேண்டும்" என்றார் வேலவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com