புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

இந்த உலகுக்கே புற்றுநோயாளிகளை அரவணைக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தி சென்றுள்ளார் மெலிண்டா ரோஸ்.
டாக்டர் சி. சுந்தரேசன்
டாக்டர் சி. சுந்தரேசன்

பிப்ரவரி 14, 1994 அன்று, அந்த செய்தி இடியாக வந்து விழுந்தது, 12 வயதே ஆன மெலிண்டாவிற்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட செய்திதான் அது, அம்மா ஜோன் மற்றும் அப்பா டேவிட்டிடம் புரியாத ஏதேதோ வார்த்தைகளை மருத்துவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர், மெலிண்டாவை அஸ்கின் ட்யூமர் (Askin tumour) என்ற ஒரு அரிதான புற்றுநோய் ஆட்கொண்டு இருக்கிறது என்பதைக் கேட்டு அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அன்புப் பெண் மெலிண்டாவை  தேற்றுவதா, இல்லை, அடுத்து என்ன செய்யப்  
போகிறோம் என்று யோசிப்பதா என்ற குழப்பத்தில் உறைந்து போனார்கள்.

நேற்று வரை நண்பர்கள் புடைசூழ ஆனந்தமாய் துள்ளி விளையாடிவந்த மெலிண்டா, நிறைய கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து வந்து இருக்கிறாள், படிப்பில் சுட்டி, நண்பர்களின் நல ஆலோசகர், வாத்தியங்களை அபாரமாக வாசிக்க வல்ல வித்துவான் எனப் பல்வகைத் திறன் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் இப்போது நோயின் வலி தாங்க முடியாமல் துடித்துக்கொண்டு இருந்தாள். அவளின் நோய்க்கு சிகிச்சை ஆரம்பித்த சில வாரங்களில் ரோஸ் ஒரு முடிவு எடுத்தாள். உலகின் மூலைமுடுக்கெல்லாம் அவளைப் போல் புற்றுநோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் பிற நோயாளிகளுக்கு மன தைரியத்தை உண்டாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினாள். நோயுற்ற நாளிலிருந்து இறுதி மூச்சு வரை அப்பணியை செவ்வனே செய்து பல புற்றுநோயாளிகளின் வாழ்க்கையின் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்தாள் மெலிண்டா ரோஸ்.

இறுதியாக செப்டம்பர் 1996 ஆம் ஆண்டு அவரின் உயிர் பிரிகின்ற தறுவாயில் பெற்றோர்களிடமும் மருத்துவர்களிடமும் தான் செய்த அந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதுவே பின்னாளில் ஆண்டுதோறும் நாம் 'ரோஸ் டே' எனப்படும் புற்றுநோயாளிகளின் நலனை நினைவு கூரும் தினமாக அனுசரித்து வருகிறோம்.

இந்த நாளானது மெலிண்டா ரோஸ் புற்றுநோயில் கடந்து வந்த பாதையை மட்டுமே  நினைவு கூறுவது அல்லது புற்றுநோயைத் வெற்றிகரமாக வென்றெடுத்த நோயாளிகளுடன் கொண்டாடுவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. இந்த ரோஸ் நினைவேந்தல் நாளில் புதிதாய் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு இந்த நோயை எதிர்கொள்ள நேர்த்தியான வழிகாட்டுதல் வழங்குவது மற்றும் தற்சமயம் இந்த புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும்  நோயாளிகளுக்கு உறுதுணையாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நாளாகவும் அமையச் செய்வது தான் மெலிண்டாவிற்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

எனவே, புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்கள் பற்றி நோக்குவோம்: 

1. உளவியல் ஆதரவு கிடைக்காமல் தவிப்பது.
2. எங்கு சிகிச்சை பெறுவது என்ற கவலை
3. உடல் ரீதியான பக்க விளைவுகளை எதிர்கொள்ளுதல்.

முதல் சவால்

1. உளவியல் ஆதரவு கிடைக்காமல் தவிப்பது

தீர்வுகள்

1)  நோயாளிக்கு புற்றுநோய் இருப்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தும் முதல் நாள் அன்றே உளவியல் ரீதியான ஆதரவு வழங்குதல் தொடங்கப்பெற வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நோயாளிக்கும் தன் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும். இந்த நோயின் தன்மை குறித்து நோயாளிகளின் புரிதல் வெவ்வேறாக இருக்கக் கூடும். புற்றுநோய் பற்றிய அச்சங்கள் அவர்களுக்குள் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். மேற்கண்ட அனைத்துக் காரணிகளையும் தன் மனதில்கொண்டே நோயாளிக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர் தனது முதல் உரையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் இந்த உரையாடலானது எளிமையாகவும், தெளிவாகவும் இருப்பது அவசியமாகிறது. இந்த முதல்கட்ட உளவியல் ரீதியான ஆதரவுதான் நோயாளி, அவர்தம் பெறவிருக்கும் சிகிச்சைகளுக்கு தன் முழு ஆதரவு அளிக்க வித்திடும். 

2) நோயாளிகளுக்கு மட்டுமன்றி நோயாளிகளைப் பராமரித்துக்கொள்ளப் போகும் நெருங்கிய உறவினர்களுக்கும் மன அழுத்தம் உண்டாக வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கும் மனரீதியான தைரியத்தையும், வலிமையையும் பேணி காக்க உளவியல் ஆலோசனைகள் நோயாளியின் உறவினர்களுக்கும் தேவைப்படுகிறது.

3) நோயாளிகளுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்கள் உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அது மேலும் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கக் கூடும். அந்த நேரங்களில் அவர்கள் தனிமையாகவும், வெறுமையாகவும் உணர்ந்து தங்களைத் தானே வெளி உலகில் இருந்து துண்டித்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் நோயை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் நோயாளிகள் தன்னந்தனியாக இல்லை என்ற நம்பிக்கை அளிக்க சமூக ஆதரவு குழுக்களுடன் அவர்களை அறிமுகம்  செய்ய வேண்டும். இதுபோன்ற குழுக்கள் தங்கள் நகரத்தில் அருகில் எங்கு உள்ளது என்பதை தாங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் மருத்துவமனைகளில் கேட்டு அறிந்து கொள்வது அவசியமாகிறது.

4) அது போல ஒரு குழு அருகாமையில் இல்லாதபட்சத்தில், இந்தியன் கேன்சர் சொசைட்டி எனும் தன்னார்வக்குழு புற்றுநோயாளிகளுக்கு ஒரு பிரத்யேக தொலைபேசி எண்ணை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.       1800-22-1951 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டால் தமிழ், ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளில் இலவசமாக ஆலோசனைகளை பெற்றிட முடியும்.

இரண்டாவது சவால்

நோய்க்கு எங்கு சென்று சிகிச்சை பெறுவது என்பது  ஒரு சிக்கலான கேள்வி, சிகிச்சை பெற்றுக்கொள்ளப் பல தெரிவுகளை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. தரமான சிகிச்சை வழங்கப்படும் இடம், தெரிந்தவர்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனைகள், சிகிச்சைக்கு ஆகப்போகும் நிதிச் சுமைகள் மற்றும் நோயாளியின் இருப்பிடத்திலிருந்து சிகிச்சை மையத்தின் தூரம் ஆகிய அனைத்தும் நோயாளிகளுக்கு குழப்பத்தை உண்டு பண்ணக்கூடும்.

தீர்வு

1) சிகிச்சை மையத்தை தேர்ந்தெடுப்பதும், சிகிச்சை முறையை தேர்ந்தெடுப்பதும், இந்நோய்க்கு எதிராக நாம் பெரும் முதல் வெற்றியாகும். இதற்கு ஏதாவது வழிவகை உண்டா என்று கேட்டால், ஆம்! இருக்கிறது,   tumourboard.tn@gmail.com என்ற இந்த மின் அஞ்சலுக்கு உங்களின் நோய் சம்பந்தமான அறிக்கைகள் மற்றும் பரிசோதனை முடிவுகளுடன், உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புகொள்ள தொலைபேசி அல்லது கைபேசி எண்ணை அனுப்பிவைத்தால்  முற்றிலும் இலவசமாக உங்களுக்கான பிரத்யேக சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உங்கள் விலாசத்துக்கு அருகிலுள்ள சிகிச்சை மையத்தின் பெயரும் முகவரியும் அனுப்படும். இந்த இலவச சேவையை தேவையான நோயாளிகள் பெற்று பயன்பெறலாம்.

2) இதுமட்டுமல்லாது, இந்திய அரசு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள புற்றுநோயாளிகளுக்குப் பல சலுகைகளை அளித்து வருகின்றது. குறிப்பாக நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து சிகிச்சை மையத்திற்கு சென்றுவர ரயில் மற்றும் பேருந்துகளைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

3) ராஷ்டிரிய ஆரோக்ய நிதி Rashtriya Arogya Nidhi (RAN), ஆயுஷ்மான் பாரத் Ayushman Bharat, அரசு நலக்குறைவு உதவி நிதி STATE ILLNESS ASSISTANCE FUND (SIAF) போன்ற திட்டங்களின் மூலம் சிகிச்சைக்காக உரிய பணப் பயனைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழக அரசின் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து விதமான புற்றுநோய்களுக்கும் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

மூன்றாவது சவால்

சிகிச்சை மற்றும் நோயின் விளைவாக உண்டாகும் உடல் ரீதியான பக்க விளைவுகள்

தீர்வு 

1) புற்றுநோயின் காரணமாக நோயாளிகளின் உடலில் பலவிதமான வலிகள் ஏற்படலாம். அதேநேரத்தில் சிகிச்சையின் பக்கவிளைவாக நோயெதிர்ப்புக் குறைபாடு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தகுந்த  சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது நலம் பயக்கும்.

2) எதிர்ப்பு சக்தியை பெருக்கிக்கொள்ள சத்தான காய்- காய்கனிகள் மற்றும் மாமிச உணவுகளை உட்கொள்வது நல்லது,

3)   நடை பழகுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம் .

4) நோயைப் பற்றியே சிந்தனைகளிலிருந்து விடிவு பெற இனிய இசை கேட்டு பழகலாம்.

5)  தங்கள் வலியிலிருந்து தங்கள் எண்ணங்களை மடை மாற்றப் பிறருக்கு பயன்படும் வகையில் ஏதோ ஒரு செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மிகுந்த பயனளிக்கும். 

நாம் இன்று நினைவு கூறும் மெலிண்டா ரோஸும், 12 வயது சிறுமியாக இருந்தபோதே இதேபோன்று பிற புற்றுநோயாளிகளுக்குத் தன்னாலான கவிதைகள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி நோயை எதிர்க்கொள்ள பக்கபலமாக இருந்ததால், இன்றும் அவள் நம்மிடையே வாழ்கிறார், இந்த உலகுக்கே புற்று நோயாளிகளை அரவணைக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தி சென்றுள்ளார் மெலிண்டா!
      
புற்றுநோய் சிகிச்சையானது பல வெற்றிகள் மற்றும் தோல்விகள் நிறைந்த ஒரு நீண்ட பயணம். எனவே, இந்தக் கொடிய நோயை எதிர்கொள்ளப் புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை முடிந்தவரை பகிர்வோம். புற்றுநோயாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இதை செய்து, மெலிண்டா ரோஸை இன்று அனைவரும்  நினைவு கூறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com