அன்பாக, ஆறுதலாகச் சில வார்த்தைகள்...

நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் அவருக்குத் தரக்கூடிய ஆறுதலான சில வார்த்தைகள் கடுமையான நோய் தாக்கத்திலிருந்தும் மீண்டுவரச்செய்துவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்
மார்கரெட் அன்புதுரை
மார்கரெட் அன்புதுரை

நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் அவருக்கு தரக்கூடிய ஆறுதலான சில வார்த்தைகள் கடுமையான நோய் தாக்கத்திலிருந்தும் மீண்டு வரச்செய்துவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு, உடல் எதிர்ப்பு சக்தியின்மை போன்றவை மனிதர்களுக்குத் தற்போது பல்வேறு புதிய புதிய நோய்களைக் கொண்டு வருகிறது. இவற்றில் கொடிதாகப் புற்றுநோய் இருந்து வருகிறது. மரபு சார்ந்த நோயாக இருந்தாலும், அதுமட்டுமே காரணமாக இருப்பதில்லை. இதன் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை  நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் பாதிப்பு என்றவுடன் அச்சம் தொற்றிக் கொள்கிறது. உயிரிழப்பு தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். ஒரு நபருக்கு பாதிப்பு என்றால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. ஆனால், இன்றைய நவீன மருத்துவ வசதிகள் புற்றுநோயை வென்று வரலாம் என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருக்கின்றன. அதை உறுதி செய்யும் வகையில் புற்றுநோயை வென்றவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு புற்றுநோயில் இருந்து மீண்டவர்களில் பலர், பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி ஆற்றுப்படுத்துநர்களாகச் செயலாற்றி வருகின்றனர்.

நோய்த் தாக்கத்தால் ஏற்படக் கூடிய அச்சம் பெரும் மன அழுத்தத்தில் கொண்டு சென்று விடுகிறது. அத்துடன், குடும்பத்தினரால் ஒதுக்கப்படக்கூடிய சூழல் என்றால் நோய் தரக்கூடிய பாதிப்பைக் காட்டிலும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய தருணங்களில் ஆற்றுப்படுத்துநர்களின் ஒரு சில வார்த்தைகள் அருமருந்தாக அமைகின்றன.

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ஆற்றுப்படுத்துநராகச் செயலாற்றி வருபவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் மார்கரெட் அன்புதுரை (63). இவரது கணவர் ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மார்கரெட்டுக்கு, தனது 31 ஆவது வயதில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. திருமணம் ஆகி 7 வயதுப் பெண் குழந்தையுடன் இருந்த அவருக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஆரம்பத்தில் பயம் இருந்துள்ளது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்து உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவர்களைப் பார்த்து மேலும் அச்சம் தொற்றிக் கொண்டது. பின்னர் குடும்பத்தினர், நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் அவருக்கு மன தைரியத்தை அளித்துள்ளன. அடுத்தடுத்து இரு அறுவைச் சிகிச்சைகள் செய்து தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கவுன்சலிங் அளித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியது:

"புற்றுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு சென்றுவிடுவதால் பாதிப்பில் இருந்து குணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். பாதிப்பு ஏற்பட்டவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் அரவணைப்பும், ஆறுதலும் மிக முக்கியமானது. பாதிப்பு ஏற்பட்டவர் இயல்பாக அவரது பணிகளைச் செய்யும்போது, நோய்த் தாக்கத்தில் இருந்து விரைவிலேயே மீண்டுவர முடிகிறது.

எனக்கு 29 வயதில் லேசான அறிகுறி தென்பட்டபோது, அச்சத்தால் அதை வெளிப்படுத்தவில்லை. 2 ஆண்டுகள் கழித்தே சிகிச்சைக்குச் சென்றேன். பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது முதலில் பயம் ஏற்பட்டது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டே எனது பணிகளை வழக்கம்போல செய்து வந்தேன். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி பணியிடத்திலும் கிடைத்த ஒத்துழைப்பும் இறைவனின் அருளும் பாதிப்பின் வலியைக் குறைத்தது.

புற்றுநோய் என்றாலே உயிரிழப்பு என்ற அச்சம் வந்துவிடுகிறது. ஆறுதலாக வார்த்தைகளைக் கூறும்போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. பணியில் இருந்தபோதே, சக பணியாளர்களின் உறவினர்கள் யாருக்கேனும் பாதிப்பு இருந்தால் என்னிடம் அழைத்துவந்து ஆறுதலான வார்த்தைகளைக் கூறும்படி கேட்பர். பலருக்கும் என்னால் முடிந்த ஆலோசனைகளைக் கூறி கவுன்சலிங் அளித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக வாரம் ஒருமுறை அரசு மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோயாளிகளுக்கு கவுன்சலிங் அளித்து வருகிறேன்.

பாதிப்பு ஏற்பட்டவர்களில் குழந்தைகள், இளம் வயதினர், வயதானவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் பேசும்போது, பாதிப்பை மறந்து உற்சாகம் ஆகிவிடுகின்றனர் என்கிறார் மார்கரெட் அன்புதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com