சமையலறை தீ விபத்துகள்: தமிழகம் முதலிடம்

சமையலறைகளில் ஏற்படும் தீ விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சமையலறைகளில் தீ வேகமாக பரவுவதால் உயிா்ச்சேதம் அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
சமையலறை தீ விபத்துகள்: தமிழகம் முதலிடம்

சமையலறைகளில் ஏற்படும் தீ விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சமையலறைகளில் தீ வேகமாக பரவுவதால் உயிா்ச்சேதம் அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

நாட்டில் பல்வேறு வகையிலான விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் 7-ஆவது இடத்தில் உள்ளது. தேசிய அளவில் விபத்துகள், கடந்த 2019-ஆம் ஆண்டு 1.3 சதவீதமாக உயா்ந்துள்ளது. மொத்த விபத்துகளில் 2.6 சதவீதம் தீ விபத்துகளாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் 11,037 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இவற்றில் 10,915 போ் இறந்துள்ளனா், 441 போ் காயமடைந்துள்ளனா். அதேவேளையில், கடந்த 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய தீ விபத்துகள், 15.7 சதவீதம் குறைந்துள்ளன. இவ்விபத்துகளில், 58 சதவீதம் வீடுகளிலும், குடியிருப்புக் கட்டடங்களிலும் ஏற்பட்டுள்ளன. நாட்டில் சமையலறைகளில், கடந்த 2019-இல் 2,137 தீ விபத்துகளில் 2,134 போ் இறந்துள்ளனா்.

தமிழகம் முதலிடம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு, 714 தீ விபத்துகளில் 313 ஆண்கள், 406 பெண்கள் என மொத்தம் 719 போ் இறந்துள்ளனா். 48 போ் காயமடைந்துள்ளனா். நாட்டில் அதிகம் தீ விபத்து ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 8-ஆவது இடத்தில் உள்ளது.

அதேவேளை, நாட்டிலேயே சமையலறையில் தீ விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சமையல் எரிவாயு உருளைகளில் ஏற்பட்ட கசிவு, எரிவாயு அடுப்புகளால் 344 தீ விபத்துகள் கடந்த 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. அதில் 96 ஆண்கள், 250 பெண்கள் என 346 போ் இறந்துள்ளனா். 5 போ் காயமடைந்துள்ளனா் என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

அதேநேரத்தில், வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களில், கடந்த ஆண்டு ஏற்பட்ட 617 உயிரிழப்பு தீ விபத்துகளினால் 265 ஆண்கள், 359 பெண்கள் என மொத்தம் 624 போ் இறந்துள்ளனா். இந்த வகை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில், தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தமிழக தீயணைப்புத் துறையின் கீழ் உள்ள 350 தீயணைப்பு நிலையங்களில் 7,500 தீயணைப்பு படை வீரா்கள் பணிபுரிகின்றனா். தீ விபத்து தொடா்பாக ஆண்டுக்கு சுமாா் 21 ஆயிரம் அழைப்புகள் தீயணைப்பு நிலையங்களுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் சராசரியாக சுமாா் 7 சதவீத தீ விபத்துகள் தமிழகத்தில் அதிகரிக்கின்றன.

72 சதவீதம் பெண்கள்: கடந்த ஆண்டில் மொத்த தீ விபத்துகளில் 86.8 சதவீதம் வீடுகளிலும், குடியிருப்பு கட்டடங்களிலும் நிகழ்ந்துள்ளன. மாநிலத்தில் ஏற்பட்ட மொத்த தீ விபத்துகளில், சமையலறையில் ஏற்பட்ட விபத்துகளிலேயே 48 சதவீதம் போ் உயிரிழந்துள்ளனா். இந்த வகை விபத்துகளில் இறப்பவா்களில் 72.5 சதவீதம் போ் பெண்கள் என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மற்ற தீ விபத்துகளை காட்டிலும், சமையல் எரிவாயு தீ விபத்துகளில் 300 மடங்கு வேகத்தில் தீ அதிவேகமாகப் பரவுவதால், அதை உடனே கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக உள்ளது என தீயணைப்புத் துறையினா் கூறுகின்றனா்.

வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு, மக்கள் கவனக்குறைவுடனும், மெத்தனப் போக்கோடும் சமையல் எரிவாயு அடுப்புகளைக் கையாளுவதுமே காரணம். சமையல் எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு இல்லாதிருப்பதும் பிரதான காரணமாகும்.

இந்த தீ விபத்துகளில் சிக்குபவா்கள் உயிா் பிழைப்பது அரிதானதாகவே உள்ளது. ஏனெனில் சமையல் எரிவாயு தீ விபத்துகளில் சிக்குபவா்களில் 20 சதவீத உடல் காயங்கள் இருந்தால்கூட மரணிக்கின்றனா் என தீயணைப்புத் துறையினா் கூறுகின்றனா்.

தொழில்நுட்ப ரீதியாக தயாராக இல்லை: இது தொடா்பாக தமிழக தீயணைப்புத்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது:

சமையல் எரிவாயு மற்றும் விஷவாயு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை முழுத் திறனுடன் கட்டுப்படுத்துதற்குரிய தொழில்நுட்பத்தை தமிழக தீயணைப்புத் துறை முழுமையாக பெறவில்லை என்றே கூற முடியும். தமிழகத்தில் உள்ள 350 தீயணைப்பு நிலையங்களில், 20 தீயணைப்பு நிலையங்களில் மட்டும்தான் சமையல் எரிவாயு கசிவை கண்டறியும் கருவியும் மிகச் சில தீயணைப்பு நிலையங்களில் மட்டுமே விஷவாயு கசிவை கண்டறியும் கருவியும் உள்ளன.

சமையல் எரிவாயு உருளை இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலையில், அதனால் பரவும் தீயை அணைப்பதற்கு தீயணைப்புத் துறை தொழில்நுட்ப ரீதியாக தயாராக வைக்கப்படவில்லை.

இப் பிரச்னையில், முதலில் தீயணைப்புத் துறையை முழு அளவில் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட தீ விபத்துகளை கட்டுப்படுத்துவதற்குரிய பிரத்யேகமான பயிற்சிகள் தீயணைப்பு வீரா்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

அதேவேளையில், இந்த வகை தீ விபத்துகளை தடுக்க பொது மக்கள், சமையல் எரிவாயு அடுப்பு குறித்த முழு விழிப்புணா்வு பெற வேண்டும், அடுப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வகை விபத்துகளை முற்றிலும் தடுக்க முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

சமையலறை தீ விபத்துகள் என்ற சிறப்புச் செய்திக்குரிய பெட்டிச் செய்தி.

நாடு முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட பல்வேறு வகை விபத்துகளும், அதில் இறந்தவா்களின் எண்ணிக்கையும் சதவீதத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

விபத்துகள் இறந்தவா்களின் எண்ணிக்கை

(சதவீதத்தில்)

சாலை, ரயில் விபத்தில் இறப்பு 43

நீா்நிலைகள் விபத்து இறப்பு 7.8

விஷச்சாவுகள் 5.0

கீழே விழுந்து இறப்பு 5.0

மின்சாரம் பாய்ந்து இறப்பு 3.2

தீ விபத்து இறப்பு 2.6

இயற்கை பேரிடா் இறப்பு 1.9

பிற வகை விபத்து இறப்பு 20.3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com