உடனடித் தேவை தேர்தல் சீர்திருத்தம்

"ஓட்டு இயந்திரம் தேவையில்லை, ஓட்டுச் சீட்டு முறைதான் தேவை" என்ற கோரிக்கை, ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.
உடனடித் தேவை தேர்தல் சீர்திருத்தம்
உடனடித் தேவை தேர்தல் சீர்திருத்தம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எண்ணற்ற குழப்பங்கள். வாக்கு இயந்திரம் பழுது, விவிபேட் செயல்படவில்லை, எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னத்துக்கே ஓட்டு விழும் மோசமான நிலை எனக் குறைபாடுகள் நீண்டுகொண்டே போகின்றன.

இந்த ஆண்டு தேர்தலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்தியா முழுவதும் இதேபோன்ற குறைபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்  கொண்டுதானிருக்கின்றன.

இவற்றைத் தவிர்க்க மாற்று வழிகள்தான் என்ன?

1. வாக்கு இயந்திரம் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கு மாறாக ஓட்டுச்  சீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. வாக்கு இயந்திரத்தின் மீது இந்திய மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனர். அறிவியலில் மிகவும் முன்னேறிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதில்லை. ஓட்டுச் சீட்டு முறைதான் பயன்பாட்டில் உள்ளது. எனவே "ஓட்டு இயந்திரம் தேவையில்லை, ஓட்டுச் சீட்டு முறைதான் தேவை" என்ற கோரிக்கை, ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள், தாங்கள் பாதிக்கப்படும்பொழுது மட்டும், ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மெலிந்த குரலில் வேண்டுகின்றன. ஆனால் எந்தக் கட்சியும் இதற்காக மக்களைத் திரட்டித் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது இல்லை. வெறுமனே அவ்வப்பொழுது தற்காலிகமாக இதுபற்றிக் கூச்சலிடுவதோடு, இது நின்று போய்விடுகிறது.  இலட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி ஓட்டுச்சீட்டு முறைதான் இந்தியா முழுவதும்   தேவை எனக் கோரும் மக்கள் திரள் போராட்டங்கள் கட்டி அமைக்கப்படவேண்டும்.

மாற்றம் வரும்வரை இப்போராட்டம் ஓய்ந்து விடக்கூடாது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சிவில் சமூகம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தும் தொடர் போராட்டத்தின் மூலம் மட்டும்தான் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர முடியும். வெற்றுப் புலம்பல்களால் எதுவும் நடக்காது.

2. அடுத்து, தேர்தல் நடைமுறையில்  முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தனிநபர்களை முன்னிறுத்தித் தெரிந்தெடுக்கும் முறைக்கு மாற்றாக, கட்சி பெறும் ஓட்டு விழுக்காட்டின் அடிப்படையில், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும். ( Proportional Representation ) பல தருணங்களில் மிக அதிகமான வாக்கு விழுக்காடு பெற்றிருக்கும் கட்சி, அதிகமான வெற்றி வேட்பாளர்களைப் பெற முடியாத காரணத்தால், ஆட்சி அமைக்க முடிவதில்லை.  அதேவேளை குறைந்த ஓட்டு விழுக்காடு பெற்றுள்ள கட்சி, அதிகமான வெற்றி வேட்பாளர்களைக் கொண்டிருப்பதால், ஆட்சி அமைக்க முடிகிறது.

இது ஒரு வகையான எண்ணிக்கை விளையாட்டாகப் போய்விட்டது. இது ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது. ஏற்க முடியாதது. எனவே கட்சிவாரி பிரதிநிதித்துவ முறை தேவை.

இம்முறையில் வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் ஓட்டு விழுக்காட்டின் அடிப்படையில், சட்டமன்றம் / நாடாளுமன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படும். இது மிகவும் முக்கியமான தேர்தல் சீர்திருத்தம் ஆகும். இத்தகைய பரிந்துரையை அரசியல் கட்சிகள் அவ்வப்பொழுது எழுப்பினாலும், தொடர் அழுத்தம் இல்லாத காரணத்தால், மெல்லிய குரலாக அது கரைந்து போய்விடுகிறது.

3. தேர்தல் முறையில் உள்ள மற்றொரு முக்கியக் குறைபாடு, அது முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. எனவே, பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிக்கு ஏற்பத் தாளமிட வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்திற்கு நேரிட்டுவிடுகிறது.

எனவே தேர்தல் ஆணையத்தை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, தனி அதிகாரம் மிக்க, அரசியல் தலையீடுகள் இல்லாத, அதிகாரம் மிக்கதோர் அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும்.

4. இந்தியாவில் ஒருவர் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், ஐந்து ஆண்டுகள் அவர் எவ்வளவு ஊழல் புரிந்தாலும், தொகுதி மக்களுக்கு எவ்வித சேவையும் ஆற்றாமல் இருந்தாலும், தொகுதிப் பக்கமே ஐந்து ஆண்டுகள் எட்டிப் பார்க்காவிட்டாலும், வாக்காளர்களால் அவரைச் சட்டப்படி எதுவும் செய்ய இயலாது.

மக்களுக்குப் பொறுப்பு ஏற்க மறுக்கும் இத்தகைய நடைமுறை  மிகக் கொடுமையானது.  வேட்பாளர்களை,  வாக்காளர்கள் திருப்பி அழைக்கும் முறை  (Recalling method)  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

5. இந்தியத் தேர்தல் முறை என்பது கோடிக்கணக்கான ரூபாய் பணம் புழங்கும் ஓர் அமைப்பாக மாறிவிட்டது. பணம் இல்லாமல் தேர்தலில் பங்கேற்று வெற்றி பெறுவது என்பது எண்ணிப் பார்க்க முடியாததாக மாறிவிட்டது.

இதற்கு மாற்றாக, தேர்தல் செலவினங்களைத் தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அரசியல் கட்சிகளிலுள்ள உறுப்பினர் ( எண்ணிக்கையின் ) அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிகளிலிருந்து உரிய நிதிப் பங்களிப்பைத் தேர்தல் ஆணையம் பெற்று தேர்தல்களை நடத்தலாம்.

6. தேர்தலில் எவ்வகையில் எல்லாம் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியும்   என்பதைக் கண்டறிய,  நிபுணர்கள் அடங்கியதோர்  குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு, பொதுமக்களிடம், அரசியல் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து  நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தேர்தல் குறைபாடுகளைச் சிறிது சிறிதாக நீக்கி, அதைச் செழுமைப்படுத்துவதன் மூலமும், சனநாயகப் படுத்துவதன் மூலமும் தேர்தல்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும்.

இப்படிப்பட்ட அடிப்படையான மாற்றங்களைச் செய்யாமல் இந்தியத் தேர்தல் முறை, ஜனநாயக வழியிலான தேர்தல் முறையாக ஒருக்காலும் இருக்க முடியாது.

[கட்டுரையாளர் - மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com