தமிழகத்தைப் பிரிக்க மீண்டும் குரல் கொடுக்கும் பாமக

தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று மீண்டும் குரல் கொடுக்கும் பாமகவின் கோரிக்கை சாத்தியமாகுமா அல்லது வெற்று விவாதங்களுடன் கடந்து போகுமா என்கிற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது. 
தமிழகத்தைப் பிரிக்க மீண்டும் குரல் கொடுக்கும் பாமக
தமிழகத்தைப் பிரிக்க மீண்டும் குரல் கொடுக்கும் பாமக


தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று மீண்டும் குரல் கொடுக்கும் பாமகவின் கோரிக்கை சாத்தியமாகுமா அல்லது வெற்று விவாதங்களுடன் கடந்து போகுமா என்கிற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6}ஆம் தேதி நடைபெற்று, வருகிற மே 2}இல் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுக்காக மாநிலமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. மீண்டும் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற விவாதம் பட்டி, தொட்டி மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் பரபரப்பாகி உள்ளது. 

இந்த நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனது முகநூல் மூலம் எழுப்பியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், அஸ்ஸôம், கர்நாடகம், ஒடிஸô, வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு ஆகியவற்றை இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ராமதாஸ். "நீண்ட நெடிய காத்திருப்பு...சிறியவையே சிறப்பானவை' என்ற தலைப்பில் இந்தக் கோரிக்கையை அவர் எழுப்பியுள்ளார். 

தமிழகத்தைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்தது அல்ல. வடதமிழகத்தில் பாமகவுக்கு முன்னோடிக் கட்சியாக விளங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கிய ராமசாமி படையாச்சியார், தனது இறுதிக்காலத்தில் எழுப்பிய கோரிக்கை இது. வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் வட தமிழகத்தைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் எழுப்பியும், மக்கள் மத்தியில் அது எடுபடாததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இதே கோரிக்கையை 1989-இல் பாமகவை தொடங்கியதிலிருந்தே ராமதாஸýம் அவ்வப்போது எழுப்பி வருகிறார். எப்போதும் வட தமிழகத்தை மட்டுமே தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வந்த ராமதாஸ், இப்போது கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்கு மண்டலத்தையும், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களையும் தனியாகப் பிரிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். 

புதிய மாநிலங்கள் பிரிப்பு என்பது, அதற்கான ஆதரவு}எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் சாதக, பாதக பின்னணியைப் பொருத்தே இதுவரை சாத்தியமாகி வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்கப்பட்ட புதிய மாநிலங்கள் குறித்த பின்னணியை ஆய்வு செய்தால்தான், தமிழகத்தில் புதிய மாநிலங்கள் கோரிக்கை சாத்தியமா என்பது தெளிவாகும்.

ஜார்க்கண்ட்-உத்தரகண்ட்: கடந்த 20 ஆண்டுகளில் பிகாரிலிருந்து ஜார்க்கண்ட், உத்தர பிரதேசத்திலிருந்து உத்தரகண்ட் என இரு புதிய மாநிலங்கள் 2000-ஆம் ஆண்டில் மத்திய பாஜக ஆட்சிக் காலத்திலும், ஆந்திரத்திலிருந்து தெலங்கானா 2014-ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியிலும் தோற்றுவிக்கப்பட்டன.

 இதில் ஜார்க்கண்ட் ஏறக்குறைய 30 சதவீதம் பழங்குடியினரை கொண்ட மாநிலம். ஒன்றுபட்ட பிகார் மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தியாக விளங்கிய லாலு பிரசாத் யாதவின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்ற அரசியல் கணக்கில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது, மத்தியில் ஆண்ட பாஜகவும், சிபு சோரன் தலைமையிலான  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் அரசியல் ரீதியாக சம அளவு பயன்பெற்றன. ஜார்க்கண்டில் பழங்குடியினர் அரசியல் நிர்ணய சக்தியாக இருந்ததாலும், சிபு சோரனுக்கு,  ஓபிசி சமூகமான குர்மி சமூகத்தின் ஆதரவு இருந்ததாலும், ஜார்க்கண்ட்டை பிரித்து மாநிலமாக்கி விட்டால், யாதவர்கள்  அடர்த்தியாக வாழும் பிகாரில் தான் வெற்றி பெறுவது எளிது என லாலு கணக்கு போட்டதாலும், பிகார் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் எளிதாக நிறைவேறியது. 

ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, பாபுலால் மராண்டி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இருப்பினும், 2014- வரை அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தன. ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிபு சோரனின் மகனான ஹேமந்த் சோரன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைத்துள்ளது.

அதேபோல, உத்தரகண்ட் மாநிலமும் மக்களின் கோரிக்கை, தொடர் போராட்டம் காரணமாகவும், பாஜகவின் உள்கட்சி  அரசியல் கணக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையிலும்,  மத்திய பாஜக அரசால் பிரிக்கப்பட்டது. பாஜகவுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருந்ததால், இப்புதிய மாநிலமும் எளிதாக உருவாக்கப்பட்டது.

தெலங்கானா: ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸýக்கு எதிராக அதிகார மையமாக வளர்ந்து வந்த ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, மட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸின் அரசியல் கணக்கு தவறாகி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரத்திலும், கே.சி.சந்திரசேகர ராவ் தெலங்கானாவிலும் முக்கிய அரசியல் சக்தியாக வளர்ந்துவிட்டனர்.   

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2001-இல் வெளியேறி தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்து  அரசியல் செய்த சந்திரசேகர ராவ் தனது கரீம்நகர் மக்களவை உறுப்பினர் பதவியை இரு முறை (2006, 2008) ராஜிநாமா செய்து இடைத்தேர்தலைச் சந்தித்து மக்கள் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்றார். தனி மாநிலக் கோரிக்கைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியைக்கூட ராஜிநாமா செய்தார். சந்திரசேகரராவ் போராட்டம் நடத்தி வந்த காலத்தில் தெலங்கானா பகுதியில் 10 முதல் 15 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் அவர் அரசியலில் பொதுத்தள தலைவராகவே இருந்தார். அவர் தன்னை ஜாதியத் தலைவராக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.
விபரீத விளையாட்டு: ஆனால், தமிழகத்தில் புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பாமக,  மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இந்தக் கோரிக்கையை எழுப்பியதும் இல்லை; அதற்காக பதவியை ராஜிநாமா செய்ததும் இல்லை. இதேபோல பாமக, வட தமிழகத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வாக்கு வங்கியை வைத்திருந்தாலும், பொதுத்தள அரசியல் கட்சியாகப் பார்க்கப்படாமல், ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த அரசியல் கட்சியாகவே இதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. பாமக எடுக்கும் எந்த ஒரு கோரிக்கைக்கும் வடதமிழகத்தில் தொடர்ந்து எதிர்விளைவுகள் இருப்பதால், இந்தக் கோரிக்கையை பொதுத்தள அரசியல் கட்சிகளான அதிமுக,  திமுக நிச்சயம் ஏற்காது.

மேலும், இந்தக் கோரிக்கையை பாமக எழுப்பி, தொடர்ந்து அரசியல் செய்தால், வட தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை மேலும் பலமாக்க முடியும். ஆனால், இந்தக் கோரிக்கைக்கு அதிமுக,  திமுக ஆதரவு அளித்தால் வடதமிழகத்தில் மட்டுமன்றி, பிற பகுதிகளிலும் அரசியல் ரீதியாக எதிர்விளைவுகள் உருவாகி, இவ்விரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியில் கணிசமாக சேதாரம் ஏற்படக்கூடும். மேலும், பாமகவுக்கு இணையாக அல்லது கூடுதலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் எந்தக் கட்சியும் இந்த விபரீத அரசியல் விளையாட்டில் இறங்க ஆர்வம் காட்டாது. அதேநேரத்தில், பாமகவைவிடக் குறைவான வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிகள் கொங்கு மண்டலம் அல்லது தென் தமிழகத்தில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது.

கைவிட்ட கட்சிகள்: ஏற்கெனவே, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க "தென் தமிழ்நாடு' என்ற அமைப்பை மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் நடத்தி, பின்னர் கைவிட்டார். கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்து கட்சி தொடங்கிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் இப்போது இதுகுறித்துப் பேசுவதில்லை. இவர்கள் ஏதாவது ஒரு  திராவிடக் கட்சியிடமிருந்து ஒரு சில தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அந்தக் கட்சியின் சின்னத்தில்தான் தேர்தலில் போட்டியிடக்கூடிய நிலையில் உள்ளனர்.

தனித் தமிழகமாக இருக்கும்போது கிடைக்கும் அதிகாரத்தைவிட, புதிய மாநிலங்களாக பிரித்துவிட்டால் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால், ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள அதிமுக,  திமுக கட்சிகள் புதிய மாநிலக் கோரிக்கைக்கு இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு ஆதரவு தர வாய்ப்பு குறைவுதான். 

சாத்தியம் குறைவு: மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக,  புதிய மாநிலங்கள் பிரிப்பு கோரிக்கைக்கு ஆதரவு  அளிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையின் அனுமதி தேவை என்பதால், இப்போதைக்கு இதற்கான சாத்தியமும் குறைவுதான். எனவே, மத்தியிலும்,  மாநிலத்திலும்  ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள, ஒற்றை நோக்கம் கொண்ட கட்சிகளால் மட்டுமே புதிய மாநிலங்களைப் பிரிக்க முடியும். 

பாமக போன்ற அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை அரசியலில் செல்வாக்கை உயர்த்தும் ஆயுதமாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். இப்போதைக்கு அச்சு,  காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கு தீனி போடும் விவாதப் பொருளாக மட்டுமே இந்தக் கோரிக்கை சுழன்றுகொண்டே இருக்குமே தவிர, இதற்கான முயற்சியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த இயலாது என்பதே மறுக்க முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com