எழுத்தும் எழுத்தாணியும்

எழுத்துகளை நம் கண்ணால் பார்ப்பதற்கு உரிய வகையில் எழுதப் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் வரலாற்றைப் பார்ப்போமேயானால் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும். 
எழுத்தும் எழுத்தாணியும்

உலகெங்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வரலாற்றுப் பதிவுகளையும் நினைவுகொள்ளும் விதமாக உலக நாடுகளுக்கான ஒரு பொது அமைப்போ அல்லது ஒரு நாட்டின் அரசோ அல்லது பெரும் அமைப்போ ஒரு குறிப்பிட்ட அந்த செயல் நடைபெறும் நாளை பொது தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நாளில் விழா ஏற்பாடு செய்து மக்களிடையே கொண்டு செல்கின்றது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் உலக எழுதுபொருள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிரிட்டிஷ் வரலாற்றில் மிக முக்கியமாக எழுதப்பட்ட ஆவணங்களில் ஒன்றான அடிப்படை சாசனம் கி.பி. 1215ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதை நினைவுகூறும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சற்றேறக் குறைய 800 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வினைக் குறிக்கும் இந்நாள் கி.பி. 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வோர் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

உலக எழுதுபொருள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஒரு வாரம் தேசிய எழுதுபொருள்கள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. 

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது மூத்தோர் வாக்கு. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப.. என்பது குறள் வாக்கு. எழுத்து, உலக வரலாற்றின் ஊற்றுக்கண். எழுத்து இல்லையென்றால் சமகால சமூகப் போக்கினை அறிய முடியாது. வரலாற்றுக்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என காலப்பகுப்பினை எவ்வளவு வகையாகப் பிரித்து வைத்திருந்தாலும்கூட அவ்வக்கால நிகழ்வுகளையும் மனித குலத்தின் வாழ்வியல் முறைகளையும் இயற்கையால் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் இன்று நமக்கு பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்பவை எழுத்துக்களே ஆகும்.

இத்தகு எழுத்தே கடவுளாகப் போற்றப்பட்ட நிலையில் வரலாற்றில் காணக்கிடைப்பது பெரும் வியப்பாகும். நம் நாட்டில் சரசுவதியையும், ஹயக்ரீவரையும் எழுத்தின் கடவுளாகக் கொண்டாடி வருகின்றோம்.

அதேபோன்று உலகின் மிகச்சிறந்த நாகரிகத் தோற்றம் கொண்டவர்களாகக் கருதப்படும் எகிப்தியர்கள் “தோத்” என்னும் கடவுள் எழுத்தைத் தோற்றுவித்ததாகக் கருதினர்.

பாபிலோனியர்களும் “நேபோ” என்னும் கடவுள்தான் எழுத்தை உருவாக்கியதாக நம்பினர். அதேபோன்று கிரேக்கர்கள்  “ஹர்மஸ்” என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளனர். யூதர்களும் “மோசஸ்” என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். இதனையே தேவாரப் பதிகத்தில் அப்பர் சுவாமிகள், “எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி” என்று இறைவனை எண்ணும் எழுத்துமாகப் போற்றுகின்றார்.

தொடக்கத்தில் செய்திகளைக் கோடுகளாகவும் குறியீடுகளாகவும் சித்திரங்களாகவும் பயன்படுத்தத் தொடங்கினான் மனிதன். இதன் வளர்ச்சியே எழுத்தாக மாறியது. இன்றைய உலகில் கண்டறியப்பட்ட அத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாய் அமைந்தது எழுத்துகளே. மெசபடோமியா அகழாய்வில் கிடைத்த ஓட்டுச் சுவடி கி.மு. 3300-ஐ சேர்ந்ததாகும். இதுவே உலகின் மிகப்பழைய எழுத்து என அறிஞர்கள் கூறுவர். அதனைத் தொடர்ந்து கி.மு. 3100-இல் எகிப்திலும், கி.மு. 2700-இல் பாபிலோனியாவிலும், கி.மு. 2500-இல் சிந்து சமவெளியிலும் கி.மு. 1200-இல் சீனாவிலும் எழுதப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை வேதகாலத்தில் ஒருவர் கற்ற கல்வியை நேரிடையாகப் பிறருக்கு சொல்லிக் கொடுத்தனர். இதனை ‘சுருதி’ என்று வழங்குவர். இவ்வாறு கற்ற செய்திகள் எழுத்து முறை அறிந்த பின்னர் நூல்களாக உருமாறியதாக சமஸ்கிருத இலக்கிய வரலாற்றை எழுதிய மாக்ஸ்மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தன் நூலில் 25 பக்கங்களுக்கு இந்தியாவின் எழுத்து முறைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கீழ்த்திசை வரலாற்று ஆய்வாளரான டாக்டர் பூலர் இந்தியாவில் கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரையிலான எழுத்து வளர்ச்சி பற்றி குறிப்பிடுகின்றார். இந்தியாவில் கிடைத்த பழைமையான எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களே ஆகும். தமிழ் எழுத்துகளும் சித்திர எழுத்துக்களாகவே இருந்திருக்க வேண்டும் என்று யாப்பருங்கல விருத்தி

காணப்பட்ட வுருவ மெல்லாம்
மாணங் காட்டும் வகைமை நாடி
வழுவி வோவியன் கைவினை போல
எழுதப் படுவ துருவெழுத் தாகும்

என்று குறிப்பிடுகின்றது.

தமிழ் வரி வடிவ எழுத்துக்களின் தொன்மையினை ஆராயும் இடத்தில்  கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரிவடிவம் செம்மையுற்று இருந்தது என்பது தெரிய வருகிறது. கி.மு.வில் இலக்கண நூல் செய்த தொல்காப்பியனார் தமக்கு முன்பிருந்த ஆசிரியர்கள் செய்த பல நூல்களை ஆராய்ந்து தன்னுடைய நூலை செய்ததாக தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். அன்று இருந்த வரிவடிவம் எத்தகையது என்பதை இன்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லை.இருப்பினும் தொல்காப்பியர் கூறுவதுபோல “அந்தரத்தெழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்” எனக் கூறுவதன் வாயிலாக வரிவடிவம் அவர் காலத்தில் அமைந்திருத்தல் வேண்டுமென அறியலாம்.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை என ஆய்வாளர்கள் கூறும் சங்க நூல்களுள் அகநானூறு, “விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல்” என்கின்றது. அதே அகநானூற்றில் “மருங்குல் நுணுகிய பேமுதிர் நடுகல் பெயர்பயம் படர தோன்று குயில் எழுத்து” என்றும், நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் என்றும் எழுது சுவர் நினைந்த அதுகுவார் மலைக்கண் என்றும் குறிப்பிடுகின்றன. அதேபோல பதிற்றுப்பத்துச் செய்யுள் ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதிச் செவ்விரல் சிவந்த என்கின்றது.

தமிழ் எழுத்தின் வரிவடிவம் காலந்தோறும் மாற்றம் பெற்று வந்துள்ளது. இதனால் நம் பழைய வரிவடிவை அறிவதற்கு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இத்தகு இடர்பாட்டை களைவதற்கு என்று அறுவகை இலக்கணம் என்ற நூலில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தமிழ் எழுத்தின் வரி வடிவத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

இத்தகு பெருமைகளுக்குரிய எழுத்தின் தோற்றத்தை எழுத்தின் வரலாற்றை நமக்கெல்லாம் அறிவிப்பவை. எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள்களே ஆகும். இதனை எழுதுபடுபொருள்கள் என்றும், எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் என்றும் இரண்டு வகையாகக் கொள்வர். இத்துறை சார்ந்த அறிஞர்கள் எழுதுபடுபொருள்களாக பாறை, களிமண், மூங்கில், மரப்பட்டை, விலங்குகளின் தோல், துணி, தாழை மடல், உலோகத் தகடுகள் (தங்கம், வெள்ளி, செம்பு) யானைத் தந்தம், கல்வெட்டு, பனை ஓலைச்சுவடி, கையால் தயாரிக்கப்பட்ட காகிதம், இயந்திரங்களால் தயார் செய்யப்பட்ட காகிதங்கள் மற்றும் இன்றைய நவீன உலகில் கணிப்பொறி வரிவடிவில் அமைந்த எழுத்துகள் என காலந்தோறும் எழுதுபடுபொருள்கள் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை எட்டியுள்ளோம்.

இது ஒரு வகையில் இருந்தாலும் இத்தகைய எழுத்துகளை நம் கண்ணால் பார்ப்பதற்கு உரிய வகையில் எழுதப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் வரலாற்றைப் பார்ப்போமேயானால் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும். இருந்தாலும் அப்பொருள் கொண்டு படைக்கப்பெற்ற எழுத்தும் சொல்லுமே இன்று மனித குலத்தின் பின்னோக்கிய வரலாற்றுப் பதிவினை அடையாளம் காணக்கூடிய அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இன்று நாம் பயன்படுத்தக்கூடிய பேனா தன் வரலாற்றைக் கூறினால் எவ்வாறு இருக்கும். பேனாவின் வரலாற்றை அப்படியே பின்னோக்கிச் சென்று பார்ப்போமா?

இன்று பால்முனைப் பந்து பேனாவை நாம் அதிகம் பயன்படுத்துகின்றோம். பயன்பாட்டுக்குப் பின் அதிலுள்ள மை தீர்ந்த பிறகு தூக்கி எறிந்து விடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் மை நிரப்பிய குழாய் பேனாவை பயன்படுத்தினோம். அதற்கு முன்னதாக இங்க் (மை) நிரப்பிய பேனாவை அதிகம் பயன்படுத்தினோம். அதற்கு முன்னர் மைக்கூடு தனியாகவும் மைக்கூட்டில் இருக்கும் மசியைத் தொட்டுத் தொட்டு எழுதும் பேனாவையும் பயன்படுத்தி வந்தோம்.

பழங்காலத்தில் பாறை மற்றும் குகைச்சுவர்களில் கற்களால் தேய்த்து எழுத்தைப் படைத்தனர். பின்னர் பச்சிலைச் சாறுகளைக் கொண்டு கோடுகளும் குறியீடுகளும் படைத்தனர். அதன் தொடர்ச்சியாக ஓவியங்களாகவும், எழுத்துக்களாகவும் வரைந்தனர். செப்பேடுகளும் தங்கத் தகடுகளும் எழுதப் பயன்பட்டக் காலத்தில் செம்பொன் ஊசி எழுதுகோலாகப் பயன்பட்டதை

பைம்பொன் செய்த விசின் உச்சி
இருந்த பொன்ஓலை செம்பொன் ஊசியால் எழுது

என சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

எகிப்தில் நைல் நதிக்கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய நீர்த்தாவரம் பேப்பரைஸ்(Papyrus) எனப்படும் இதனை பதப்படுத்திய பின்னர் நாணல் தண்டைப் பயன்படுத்தி எழுதுபடுபொருளாகக் கொண்டு மை தொட்டு எழுதிய ஆவணங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பூர்ஜ மரப்பட்டையில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மை இவ்வாறு தயாரிக்கப்பட்டது. பசுவின் கோமியத்தில் சங்கினை ஊற வைத்து பிறகு அதனை எரித்து அதிலிருந்து வந்த கரியுடன் வேலம் பிசின் மற்றும் மழைநீர் சேர்த்து இந்த மை தயாரிக்கப்பட்டது. இக்குறிப்பு அலெக்சாண்டர் படையெடுத்து இந்தியாவிற்கு வந்தபோது அவருடன் வந்த ‘க்ருடிஸ்’ என்பவரின் குறிப்பால் காணக்கிடைக்கிறது.

இதேபோன்ற அகர் மரப்பட்டைகளில் மசி கொண்டு எழுதப்பட்டன. சான்சிபட் சுவடிகளில் எழுதுவதற்கென்று பலவகையான வண்ண மசிகள் தயாரிக்கப்பட்டன. இந்த மை தயாரிக்க சிலிக்கா என்ற பழத்தை புதிய மண்பாண்டத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஊற வைத்து பின் அதை இரவு நேர பனியில் நல்ல வழவழப்பான பாத்திரத்தில் வைப்பர். பணியினால் மண்பாண்டத்தில் இருந்து பழச்சாறு வெளிப்படும். அந்த சாற்றுடன் வேதி உப்பு கலந்து மை தயாரிப்பர். சில இடங்களில் ‘‘கும்சியா’’ என்ற மீனின் ரத்தத்தையோ, பசுவின் கோமியத்தையோ இச்சாற்றுடன் சேர்த்தும் மை தயாரித்தனர்.

பாணரின் ஹர்ஷசரிதம் என்ற நூலில் வெள்ளரிப்பழச் சாறு மையாகப் பயன்பட்டது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் அசாமை ஆண்ட பாஸ்கரவர்மன் மரப்பட்டையில் பழுத்து சிவந்த வெள்ளரிப் பழத்தின் சாறுகொண்டு எழுதப்பட்ட சுவடிகளை ஹர்ஷவர்த்தனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளான். மரப்பலகைகளில் உளி கொண்டு செதுக்கி எழுதிய நூல்களும் காணக் கிடைக்கின்றன. அதேபோன்று கரி அல்லது சுண்ணாம்புக்கட்டி கொண்டும் மரப்பலகையில் எழுதியுள்ளனர். அதேபோன்று பலகையில் மெழுகைக் காய்ச்சித் தடவி ஆணி கொண்டு கீறியும் எழுதியுள்ளனர். இதனைப் பற்றிய குறிப்புகளை புத்த ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

வணிகர்கள் குறிப்பாக மைசூர் பகுதியில் தங்களது அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுதுவதற்கு துணிகளைப் பயன்படுத்தினார்கள். இதற்கு பருத்தி துணிகளை ஒரே அளவாக நறுக்கிக்கொண்டு அத்துணிகளில் அரைத்து எடுக்கப்பட்ட புளியங்கொட்டை பசையுடன் விளக்கு கரி சேர்த்து பூசிய பிறகு காயவைத்து அதில் சுண்ணாம்பு கட்டிகள் கொண்டு எழுதினர். இதனைக் ‘கடுத்தா’ என்று அழைத்தனர். இன்றும் கர்நாடக அருங்காட்சியகங்கள், சிருங்கேரி மடம் போன்ற இடங்களில் கடுத்தா காணப்படுகின்றது.

இவையெல்லாம் ஆரம்ப கால கட்டங்களில் எழுதுபொருள்களாகவும் எழுதுபடுபொருள்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இவற்றைத் தயாரிப்பதும் பராமரிப்பதும் கடினமாக இருந்து வந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் சரியான தீர்வாகக் கண்டறியப்பட்டதே பனை ஓலைச் சுவடியாகும்.

பனை ஓலையில் எழுதத் தொடங்கிய பிறகுதான் இந்தியாவில் குறிப்பாகத் தமிழர்களின் மரபு சார்ந்த அறிவு சொத்துக்கள் இன்று நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றது. அறிவுக் கருவூலமாய்த் திகழக்கூடிய பனை ஓலைச்சுவடி எழுதுவதற்குப் பயன்பட்ட பொருட்களைப் பார்ப்போமா?

கல்லெழுத்துக்கள் தோற்றம் பெற்ற காலத்தில் நாடு முழுமைக்கும் பல்வேறு அரச மரபைச் சார்ந்த மன்னர்களாலும் மிகப்பெரும் வணிகர்களாலும் தாங்கள் செய்த அறங்கள் பற்றியும் பல்வேறு நிகழ்வுகள் பற்றியும் கல்லிலே பொறிக்கச் செய்தனர். அத்தகு செய்திகள் கல்லிலே வெட்டப்படுவதற்கு முன்பாக ஓலையில் எழுதச் செய்து அந்த ஓலையினை கல்வெட்டு வெட்டக்கூடிய பகுதிக்கு எடுத்துச்சென்று அதிலுள்ள செய்தியை செந்தூரம் கொண்டு தூரிகையால் முதலில் எழுதுவர். பின்னர் எழுதப்பட்ட செந்தூர எழுத்துகள் மீது உளிகொண்டு வெட்டுவர். இதுவே கல்லில் எழுதும் முறையாகும். இதன்பிறகே அதிக அளவிலான ஓலைகள் எழுதப்பட்டன.

ஓலைகளில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கூருளியும், ஊசியும் குறித்து சங்க நூல்களும், சிந்தாமணியும் குறிப்பிடுகின்றது. நெடுங்காலமாகவே இவ்வாறு எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் எழுத்தாணி என வழங்கப்பட்டாலும், முதன் முதலாக எழுத்தாணி என்ற சொல்லை ஏலாதி என்னும் நூல்தான் குறிப்பிடுகின்றது. இந்த எழுத்தாணி பல வகையாக வழங்கப்படுகிறது.

குண்டெழுத்தாணி, குடைவெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, கணை எழுத்தாணி, அலகெழுத்தாணி, தேரெழுத்தாணி என்பனவாகும்.

இன்றுபோல் அன்று எழுதுவதற்குத் தாள் கிடையாது. எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டவைகள் பனை ஓலைகள்தான். இதற்குப் பயன்பட்ட பனை ஓலைகள் தாளிப்பனை, கூந்தல்பனை என்பவையாகும். இவற்றில் எழுதுவதற்கு இரும்பால் செய்யப்பட்ட கூரிய முனை கொண்ட எழுத்தாணிகள் தயாரிக்கப்பட்டன. இவைதான் அன்றைய நிலையில் மிக அதிக அளவில் எழுதப் பயன்பட்ட பொருள் என்பதில் மிகையில்லை.

எழுத்தாணி கொண்டு எழுதுபவருக்கு எழுத்தச்சன் என்று பெயர். ஒரே நூலினை பல படிகள் எடுப்பதற்கு பல்வேறு நபர்கள் ஊதியம் பெற்றுக் கொண்டு ஓலையில் எழுதி வந்தனர். அவ்வாறு எழுதக்கூடியவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு எழுத்துக்காரத்தெரு என்றே பெயர். இன்றளவும் தஞ்சை மாவட்டம், மாரியம்மன்கோயில் பகுதியில் எழுத்துக்காரத்தெரு என்ற பெயருடன் தெரு ஒன்று உள்ளது. இப்பெயரால் நாம் அறிவது எழுத்தாணி மறைந்தாலும் அப்பெயர் கொண்ட தெரு மட்டும் நின்று நிலைத்திருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

[ஏப்ரல் - 21, 2021 உலக எழுதுபொருள்கள் தினம்;

ஏப்ரல் 20-25, 2021 - தேசிய எழுதுபொருள்கள் வாரம்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com