நேர்மை, தொண்டுள்ளத்தை வளர்க்கும் சாரணர் இயக்கம்

உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கம் சாரணர் இயக்கமாகும்.
நேர்மை, தொண்டுள்ளத்தை வளர்க்கும் சாரணர் இயக்கம்
நேர்மை, தொண்டுள்ளத்தை வளர்க்கும் சாரணர் இயக்கம்

ஆகஸ்ட் 1 - சாரணர் நாள்

உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கம் சாரணர் இயக்கமாகும். சார்ட்டர் ஹவுஸ் பாடசாலையில் கல்விக் கற்றுப் புலமை பெற்ற பேடன்பவல் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1876 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்தார். தன்னுடைய இளம் வயதிலேயே இராணுவத்தில் இணைந்ததால், அன்றைய நாளில் உலகின் பல நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த பவல் இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டது.

தேசப்பற்று, வாய்மை, நேர்மை, துணிவு போன்ற ஆளுமைகளைக் கொண்டு “எதற்கும் தயாரக இரு” என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிய சாரணர் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படும் பவல் 22.02.1857 ஆம் ஆண்டு பிறந்தார். ரெவரண்ட் பேடன் பவல் இவருடைய தந்தை ஆவார். ரெவரண்டின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த குழந்தைகள் பத்துபேர். அவர்களுள் எட்டு பேர் ஆண் மக்கள். அதில் ஏழாவதாகப் பிறந்த பேடன் பவல்தான் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோதே தந்தை காலமானார்.

பவல் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய காலத்தில் 1907 ஆம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். லண்டன் பிரவுண்ரு தீவில் முதல் சாரணியர் இயக்க மாநாடும் சாரணியர் பாசறையும் நடத்தப்பட்டது. 1908-இல் இவர் எழுதிய சாரணியம் என்ற நூல் வெற்றிகரமாக விற்பனை ஆவதையும் இந்நூல் பல இளைஞர்களையும் ஆசிரியர்களையும் பயிற்றுவிப்பதற்கு உறுதுணையாக இருப்பதை நேரில் கண்டார்.

1910 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் சாரணியம் பரவத் தொடங்கியது. இன்றைய நிலையில் உலகில் 216 நாடுகளில் சாரணிய சங்கம் செயல்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் 38 மில்லியன் சாரணர்கள் இருக்கின்றனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் 18 மில்லியன் சாரணியர் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாட்டு அவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை விட அதிக நாடுகளில் சேவையாற்றும் தொண்டு நிறுவனமாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.

6-8-1920 ஆம் ஆண்டு உலக சாரணர்களை ஒன்றிணைத்து தன்னுடைய தலைமையில் சாரணர் ஜம்போரி என்ற மாபெரும் நிகழ்வினை நடத்தினார் பவல். அன்று உலகின் பிரதம சாரணர் என்று இவர் பிரகடனப்படுத்தப்பட்டார். மேலும் இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இதற்கு கில்வெல் பிரபு எனப்பெயர் சூட்டி சிறப்பு செய்தார்.

இவருடைய மனைவி சீமாட்டி ஒபேவா பேடன் பவல் 1910 ஆம் ஆண்டு பெண்கள் சாரணிய அமைப்பைத் தோற்றுவித்து உலகெங்கும் பரவச் செய்தார். ஆப்பிரிக்காவில் தன் துணைவியாரோடு வசித்து வந்த பேடன் பவுல் 08.01.1941-இல் காலமானார்.

இந்தியாவிற்கும் இந்தியருக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவரும், இந்தியர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராக விளங்கியவரும் ஹோம்ரூல் இயக்கத்தினை தோற்றுவித்தவருமான போற்றுதலுக்குரிய அம்மையார் டாக்டர் அன்னிபெசன்ட் ஆவார். இவரே இந்தியாவில் சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர். 1916 ஆம் ஆண்டு இவ்வம்மையாரால் இந்திய சாரணர் இயக்கம் தனிப்பட்ட முறையில் தொடங்கப்பட்டு, நடைபெற்று வந்தது. அதே நேரம் சர்வதேச அளவில் நிறுவப்பட்ட பிற நாட்டு சாரணருக்கு சமமான அடிப்படையில் இந்திய சாரணரை சேர்த்துக் கொள்வதற்கு பேடன் பவல் (Lord Baden Powell) மறுப்பு தெரிவித்தார்.

வட இந்தியாவில் 1917 ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியா என்பவரால் சேவா சமிதி சாரணர் இயக்கம் என்றதோர் அமைப்பு தொடங்கப்பெற்றது. இந்த இரு சாரணர் இயக்கமும் நாடு முழுவதும் பரவி நல்லாதரவுடன் வளர்ச்சி பெற்றது.

பொதுவாக சிறுவர் சிறுமிகளுக்கு மிகவும் பிடித்தது விளையாட்டாகும். எனவே அவர்களது விளையாட்டு உணர்வினை முறையாகப் பயன்படுத்தி உரிய பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களுடைய உடல் நலன் மேம்படும் என்பதோடு மற்றவர்களுடன் கலந்து விளையாடும் போது அவர்களுடைய தன்னம்பிக்கையும் நன்முயற்சியும் வளர்ச்சி பெறுகிறது. எனவே அவர்களை தன்னலம் அற்றவர்களாகவும், நாட்டிற்கு பயன்படக் கூடியவர்களாகவும் மாற்ற விரும்பிய ஆங்கிலேயரான பேடன் பவுல் 1908 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சாரணர் இயக்கத்தைத் தொடங்கினார். இங்கிலாந்து இராணுவ அதிகாரியாக இருந்தவர் இவர். மனித சமூகத்தில் தன்னலம் மிகுந்து வருவதையும் பொது நலம் கருதுவோர் குறைந்து வருவதையும் கண்ட அவர் எதிர்கால குடிமக்களான இளஞ்சிறார்களை இளமையில் இருந்தே நேர்மையும் தொண்டுள்ளமும் கொண்டவர்களாக மாற்றமுடியும் என்று கருதினார்.

இதற்கென நன்னடத்தைப் பயிற்சித் திட்டம் ஒன்றை வகுத்தார். அந்தத் திட்டத்தை ஆய்வு செய்து பார்ப்பதற்காக 1907 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருபது சிறுவர்களைக் கொண்டு முகாம் ஒன்று நடத்தினார். அந்த முகாமில் பயின்ற சிறுவர்கள் கடமைகளை நன்கு உணர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்தார்கள். அங்கு பயின்ற மாணவர்களை அவர் சாரணர் (Scouts) என்று அழைத்தார். இவருடைய ஆராய்ச்சி பெரும் வெற்றி பெற்றது. இதனால் மகிழ்ச்சியுற்ற பவல் சாரணர் இயக்கம் என்னும் ஒரு நூலை எழுதி 1908 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இன்று வரை இந்நூலே சாரணர் இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் கலைக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது.

 சாரணர் அமைப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பொறுப்பேற்று ஒரு செயலை திறம்பட செய்வதிலும் தலைமை வகிப்பதிலும் சிறப்புடன் திகழ்ந்தனர். இதனால் இந்த இயக்கம் உலகம் முழுவதும் மிக விரைவாகப் பரவியது. இன்றைய நிலையில் அனைத்து நாடுகளிலும் சாரணர் இயக்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து சர்வதேச சாரணர் அமைப்பும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் 1916-இல் இந்தியாவில் சாரணர் அமைப்பு தொடங்கப்பெற்று அதனை அங்கீகரிக்கப் பவல் மறுத்ததும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். 1921-22 ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வருகை தந்த பேடன் பவல் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு இந்திய சாரணர் இயக்கத்தை தம் இயக்கத்துடன் சேர்த்துக் கொள்ள இசைவு தந்தார். இதனால் இந்திய சாரணர் இயக்கம் பேடன் பவுலின் சாரணர் இயக்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.

அதே நேரம் அயல்நாட்டு சாரணர் இயக்க தலைமையின் கீழ்  இயங்க விரும்பாத சேவா சமிதி சாரணர் இயக்கம் தனித்தே செயல்பட்டது. சேவா சமிதி சாரணர் இயக்கத்தின் எண்ணம் சரி என்பது போலவே பேடன் பவுலுடன் இணைந்த இந்திய சாரணருக்கு பிற நாட்டு சாரணருக்குக் கிடைத்த தகுதி நிலை கிடைக்கவில்லை. மேலும் 1937 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேடன் பவுல் கூறிய சில கருத்துக்கள் விரும்பத்தகாத நிலையில் இந்திய சாரணர் இயக்கம் சர்வதேச சாரணர் நிறுவனத்திலிருந்து விலகி தனியாக செயல்படத் தொடங்கியது.

இந்திய சாரணர் இயக்கமும், சேவாசமிதி சாரணர் இயக்கமும் ஒன்றிணைந்து இந்துஸ்தான் சாரணர் இயக்கம் என்ற புதியதொரு வடிவம் பெற்றது. இப்புதிய இயக்கத்தினர் இந்தியச் சூழ்நிலை, பண்பாடு, நாட்டு நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப பயிற்சி முறைகளை உருவாக்கினர். ஆண் சாரணர், பெண் சாரணர் இயக்கங்கள் ஒரே தலைமையின் கீழ் இயங்கத் தொடங்கின. இவ்வாறு இந்த இயக்கம் செயல்பட்டு வந்த நிலையிலும் கூட பேடன் பவுல் இயக்கத்தோடு தொடர்பு கொண்டு ஒரு சிறு சாரணர் குழுவும் இயங்கி வந்தது வரலாற்றில் அதிசயமே.

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா முழுமைக்கும் ஒரே சாரணர் இயக்கம் செயல்படத் தொடங்கியது. அன்றைய மத்திய அரசின் கல்வி அமைச்சரான மௌலான அபுல்கலாம் ஆசாத் இதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இறை பக்தியையும், தர்ம சிந்தனையையும் நாட்டிற்கும் சேவை செய்யும் நோக்கத்தையும் முதன்மையாகக் கொண்டு சாரணர் இயக்கம் இயங்கி வருகின்றது. சாரணர் பல பிரிவினராகப் பிரிக்கப்படுகின்றனர். ஏழு முதல் பன்னிரெண்டு வயதிற்குள் உடையவர்கள் குருளையர் என்றும், 11 முதல் 18 வயது உடையவர்கள் சாரணர் என்றும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் திரிசாரணர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சாரணருக்கான சட்டத்திட்டங்கள்

  • சாரணருடைய கௌரவத்தின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  • இந்திய குடியரசுக்கு உண்மையானவராக இருக்க வேண்டும்.
  • கடவுள் பக்தியும், தர்ம சிந்தனையும் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்,
  • மக்கள் அனைவருக்கும் நண்பராகவும்,
  • விலங்குகளோடு அன்பு பாராட்டுவதும்,
  • பணிவுடனும்,
  • ஒழுக்கத்தோடும்,
  • தலைமை உத்தரவுக்கு கீழ் படிதலும்,
  • எத்தகு இடர்பாடு ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் திறனும்,
  • சிந்தனை, செயல்வாக்கில் தூய்மையாகவும், சிக்கனமாகவும் இருக்க வேண்டும்.

மேற்கூறிய சட்டத்திட்டங்களின்படி செயல்படுவது சாரணர் கடமையாகும். மேலும் எப்போதும் தயாராக இருத்தலை தங்களுடைய குறிக்கோளாகவும் “உன்னால் இயன்றதைச்செய்” என்பதைக் குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

சாரணரைப் பொருத்தவரை அவர்களுக்கு நான்கு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உடற்பயிற்சி, நன்னடத்தைப் பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, பொதுநல சேவைக்கான பயிற்சி ஆகியனவாகும். உடல்நலம் பேணுதல் பொருட்டு உடற்பயிற்சி வழங்கப்படுகிறது. கூர்ந்து கவனித்தல், தன்னம்பிக்கையோடு திறம்பட செயலாற்றுதல் இவை நன்னடத்தைப் பயிற்சியாகும். இப்பயிற்சி முடித்ததும் இவர்களுக்கு சாரணச் சின்னம் (Scoute Badge) வழங்கப்படுகிறது. மேலும் தீயணைத்தல், முதலுதவி செய்தல், உயிர்காத்தல் போன்ற பொதுநலன் சார்ந்த சேவையில் ஈடுபடுவதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. முக்கியமானதொரு பயிற்சியாக முகாமிடுதல் நடைபெறுகிறது. இதில் ஒரு முகாமை நிர்வாகம் செய்வதற்கான பயிற்சியும் சேவை மனப்பான்மையும் கடமை உணர்வும் ஏற்படுகின்றது.

இத்தகு விதிமுறைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு சிறந்த சேவையாற்றுவேன் என்றும் பதவி ஏற்பின்போது என்னால் இயன்ற வரையில் கடவுளுக்கும், தர்மத்திற்கும், தாய் நாட்டிற்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்வேன் என்றும் சாரணர் சட்டத் திட்டத்திற்கு கீழ் பணிந்து நடப்பேன் என்று உறுதியளித்து சாரணர் பதவியை ஏற்கின்றனர்.

உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர்கள் சாரணர் இயக்கத்தில் இருந்தவர்கள் என்னும்போது பெருமிதமாக உள்ளது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான்.எஃப் கென்னடி, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றோரும், நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், இதுவரை நிலவில் காலடி எடுத்து வைத்த பன்னிரெண்டு பேர்களில் 11 பேர் சாரணர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதுபோல 1959 ஆம் ஆண்டில் இருந்து விண்வெளி விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பெற்ற 214 பேரில் 125 பேர் சாரணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் புகழ்மிக்க மைக்ரோசாசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில்கேட்ஸூம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடெங்கும் பள்ளிகள்தோறும் சாரணர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அவற்றின் வழியாகச் சிறந்த பணி ஆற்றப்பட்டு வருவதே சாரணர் தினமான ஆகஸ்டு ஒன்றாம் தேதியான இன்று நினைவுகூர்ந்து போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com