'சினிமா சித்தன்' - மாயவநாதன்

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன்.
கவிஞர் மாயவநாதன்
கவிஞர் மாயவநாதன்

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.

திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.

சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம். தீவிரமான காளிபக்தர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர். படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார். அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.

சென்னை-மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார். நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன். 1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன். "படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில்,

"தண்ணிலவு தேனிரைக்க

தாழைமடல் நீர்தெளிக்க

கன்னிமகள் நடைபயின்று வந்தாள்-இளம்

காதலனைக் கண்டு நாணி நின்றாள்''

என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார். பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி, "யார் இந்த மாயவநாதன்?' என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.

"கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்'' என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்" என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும். இதயத்தில் நீ - திரைப்படத்தில்,

"சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த

கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட

யார் வந்தவரோ? - அவர்

தான் என்னவரே...''

என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி லாகவம் ஒரு நிரூபணமாகும். சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.

பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...

"கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா''

என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.

மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர். ஒருமுறை "மறக்க முடியுமா' திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?' என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்' என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார். மாயவநாதனுக்கு "கவிக்கோபம்' வந்துவிட்டது. கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார். பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது' - என்ற பாடல்.

மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை. பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான். தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.

பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள். "பந்தபாசம்' படத்தில் வருகிற...

"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்

நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?

குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''

என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.

பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,

"பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு

பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு

எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''

வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். "இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?'' அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.

என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே''

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.

திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.

1971-இல் மாயவநாதன் காலமானார். "டெல்லி டூ மெட்ராஸ்' - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.

[ஆகஸ்ட் 6 - கவிஞர் மாயவநாதன் நினைவு நாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com