தமிழகக் கோயில்களில் வெகுவாகக் குறைந்த யானைகள்!

தமிழகக் கோயில்களில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், கலாசார பெருமைகளை பறைசாற்றும் யானைகளை அனைத்துக் கோயில்களிலும் வளர்க்க யானை பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருக்குவளை நாகராஜன் யானை | வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி யானை
திருக்குவளை நாகராஜன் யானை | வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி யானை

சங்க காலத்தில் போர் அடிக்கவும், போர் புரியவும் தமிழர்கள் யானைகளை பயன்படுத்தியுள்ளனர். நாம் இன்று மலைத்துப் பார்க்கும் பிரம்மாண்ட கோயில் கோபுரங்களை அமைக்க யானைகளே பயன்படுத்தப்பட்டன. நாடாளும் அரசர்களை யானைகள் மாலை அணிவித்து தேர்ந்தெடுத்துள்ள வரலாறு உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் ஒரே உயிரினம் யானை மட்டுமே. காட்டு விலங்குகளில் மனிதர்களால் பழக்கப்படுத்தக்கூடிய விலங்காகவும் யானைகள் உள்ளன. 

திருபுவனம் தருமி | திருவிடைமருதூர் கோமதி யானை
திருபுவனம் தருமி | திருவிடைமருதூர் கோமதி யானை

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வளர்க்கப்பட்ட யானைகள் குறித்த ஒரு பார்வை:

யானை வளர்ப்பு என்பது ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கும் முன்னரிலிருந்தே இருந்து வருகிறது. கோயில் கட்டுவதற்கு மகத்தான உதவிகளை செய்துள்ள யானைகளுக்கு நன்றி பாராட்டும் விதமாகவே கோயில்களில் இன்றளவும் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கடுமையான பயிற்சியால் மட்டுமே சாத்தியப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் தன்மையை யானைகள் இயற்கையாகவே பெற்றுள்ளன. 

திருப்புகலூர் சூலிகாம்பாள் | நாகூர் தர்கா பாத்திமா பீவீ
திருப்புகலூர் சூலிகாம்பாள் | நாகூர் தர்கா பாத்திமா பீவீ

எனவே, யானைகளிடம் ஆசீர்வாதம் பெருவதில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சுவாமி புறப்பாட்டின்போது கம்பீரமாக யானைகள் நடந்து செல்லும். அவ்வாறு யானைகள் முன்னே செல்வதால் தீய சக்திகள் அனைத்தும் அழிந்து விடும் என்பது ஐதீகம். முன்பு தமிழகத்தில் பல கோயில்களில் யானைகள் இருந்த நிலையில் தற்போது 30 யானைகள் மட்டுமே உள்ளன. 

சுவாமிமலை துர்க்கா யானை
சுவாமிமலை துர்க்கா யானை

உதாரணத்திற்கு தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் படையில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் ஒரு யானை கூட இல்லை. அதேபோல மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள (நாற்பது கிலோமீட்டர் சுற்றியுள்ள சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர் உள்ளடக்கிய) பகுதிகளில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள் கோயில்களிலும், மடங்களிலும் இருந்தன.

திருப்பனந்தாள் பெரியநாயகி | சிதம்பரம் நடராஜன்
திருப்பனந்தாள் பெரியநாயகி | சிதம்பரம் நடராஜன்

உதாரணமாக தருமபுரம் மடம் நலன் யானை, வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி யானை, சீர்காழி ஜெயந்தி யானை, சிதம்பரம் நடராஜன் யானை, திருப்பனந்தாள் மடம் பெரியநாயகி யானை ஜெயந்தி யானை, திருவாடுதுறை மடம் ஜெயா யானை, திருவிடைமருதூர் கோமதி யானை, திருபுவனம் தருமி யானை, கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் யானை, சுவாமிமலை துர்க்கா யானை, திருப்புகலூர் சூலிகாம்பாள் யானை, திருக்குவளை தியாகராஜன் யானை, திருவாரூர் கமலாம்பாள் யானை, நாகூர் தர்கா பாத்திமா பீவீ யானை ஆகிய யானைகள் இருந்தன.

தருமபுரம் மடம் நலன் | சீர்காழி ஜெயந்தி
தருமபுரம் மடம் நலன் | சீர்காழி ஜெயந்தி

ஆனால், தற்போது மயிலாடுதுறை அபயாம்பிகை யானை, திருக்கடையூர் அபிராமி யானை, உப்பிலியப்பன் கோயில் பூமாதேவி யானை, கும்பகோணம் மங்களம் யானை ஆகிய நான்கு யானைகள் மட்டுமே உள்ளன. காடுகளில் வாழும் யானைகளைவிட வளர்ப்பில் வாழும் யானைகள் அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றன. மற்றொரு பக்கம், காடுகளில் வாழும் யானைகளின் யானை வழித்தடங்கள் (வலசைப் பாதைகள்) ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், அவை செல்ல வழி தெரியாமல் ஊருக்குள் வருகின்றன. அதன் மூலம் யானை மனித மோதல் உருவாகிறது.

திருவாடுதுறை மடம் ஜெயா | திருப்பனந்தாள் ஜெயந்தி 
திருவாடுதுறை மடம் ஜெயா | திருப்பனந்தாள் ஜெயந்தி 

காடுகளிலும், வளர்ப்பிலும் யானைகள் இருந்தால்தான் யானை இனம் பாதுகாக்கப்படும். இயற்கையான சூழலில் வளர்ப்பு யானைகளை வளர்க்க வேண்டும் என்று கூறும் சட்டம், யானைகளுக்கு இயற்கையாக நடைபெற வேண்டிய இனப்பெருக்கத்தை மட்டும் தடை செய்கிறதென்று வேதனை தெரிவிக்கும் யானைப் பிரியர்கள், காட்டு யானைகளை பாதுகாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், யானைகளின் இனப்பெருக்கத்திற்கு அனுமதி அளித்தும், யானை இல்லாத கோயில்களுக்கு யானை வழங்கியும் நமது கலாசார பாரம்பரியத்தின் அங்கமான யானைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே யானைப் பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

யானைகள் தினத்தன்று நாம் அனைவரும் காடுகளில் வாழும் யானைகளையும், வளர்ப்பு யானைகளையும் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். 

[ஆகஸ்ட் 12 - சர்வதேச யானைகள் தினம்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com