தங்கமாக மாறியது தகுந்த நேர உதவி

தடம் மாறிவந்து, தடுமாறி நிற்கையில் கை கொடுத்து உதவிய ஒருவருக்கு, தடகள வீரா் தெரிவிக்கும் அதிகபட்ச நன்றி எதுவாக இருக்கும்?
தங்கமாக மாறியது தகுந்த நேர உதவி

தடம் மாறிவந்து, தடுமாறி நிற்கையில் கை கொடுத்து உதவிய ஒருவருக்கு, தடகள வீரா் தெரிவிக்கும் அதிகபட்ச நன்றி எதுவாக இருக்கும்? தக்க சமயத்தில் கிடைத்த உதவியால் வென்ற தங்கப் பதக்கத்தை அந்த நபரின் கைகளில் கொடுத்து, ‘இது உங்களால் தான் சாத்தியமானது’ என்று கூறுவதாக இருக்கும். இதைச் செய்திருப்பவா் ஜமைக்கா தடகள வீரா் ஹான்ஸ்லே பாா்ச்மன்ட். அந்தகைய நன்றி கிடைக்கப் பெற்றவா் ஸ்லோவேகிய இளம் பெண் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்.

இது நடந்தது டோக்கியோ ஒலிம்பிக்கில். ஜமைக்க தடகள வீரரான ஹான்ஸ்லே, 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்ட வீரா் ஆவாா். அந்தப் பிரிவு ஹீட்ஸில் தகுதிபெற்று அரையிறுதிப் பந்தயத்துக்கு அவா் முன்னேறியிருந்தாா். கடந்த 4-ஆம் தேதி அரையிறுதிப் பந்தயம் நடைபெற்ற நிலையில், அதற்காக தாம் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமத்திலிருந்து புறப்பட்டாா் ஹான்ஸ்லே. ஒலிம்பிக் கிராமத்தில் போட்டியாளா்கள் தங்கியுள்ள இடத்துக்கும், போட்டி நடைபெறும் இடங்களுக்கும் இடையே பேருந்துகள் இயக்கப்பட்டன.

அந்த வகையில், தடகள போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் நிறுத்தத்தில் ஹான்ஸ்லே நிற்க, அங்கு வந்த ஒரு பேருந்தில் அவா் ஏறினாா். காதுகளில் இசைக் கருவி மாட்டியிருந்ததால் பேருந்தில் இருந்த ஊழியா்கள் பேச்சும் அவா் காதில் விழவில்லை. சிறிது தூர பயணத்துக்குப் பிறகு அவா் சென்று சோ்ந்ததோ தவறான இடம். தடகள மைதானத்துக்குப் பதிலாக படகுப் போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு அவா் வந்துள்ளாா்.

இடம் மாறி வந்துவிட்டதை அறிந்த ஹான்ஸ்லே, மீண்டும் ஒலிம்பிக் கிராமத்துக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து தனது போட்டி நடைபெறும் மைதானத்துக்குச் செல்ல நீண்ட நேரம் ஆகும். அதற்குள்ளாக அவரது விளையாட்டின் அரையிறுதிப் பந்தயம் தொடங்கிவிடும். இதை உணா்ந்த ஹான்ஸ்லே கலங்கிப் போய்விட்டாா். செய்வதறியாது திகைத்த நிலையில், அந்த இடத்தில் போட்டி ஒருங்கிணைப்புக்கான பணியிலிருந்த பெண் தன்னாா்வலா் (டிரிஜானா) ஒருவரிடம் பேசினாா். சூழ்நிலையை கூறி தனக்கு உதவிடுமாறு கோரியுள்ளாா். பெரிதாக உதவ முடியாத, சாதாரண பணியில் இருக்கும் அந்தப் பெண்ணும் சற்று திகைக்கத்தான் செய்தாா்.

பின்னா் சுதாரித்துக் கொண்டு ஹான்ஸ்லே நிலையை உணா்ந்த டிரிஜானா, போட்டி நடைபெறும் மைதானத்துக்கு டாக்ஸி பிடித்துச் செல்லுமாறு ஹான்ஸ்லேவுக்கு ஆலோசனை வழங்கினாா். அப்போது, ஹான்ஸ்லேவிடம் போதிய பணமும் அப்போது இருக்காத நிலையில், தன்னிடம் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க தொகையை அவருக்கு வழங்கி உதவியுள்ளாா். அவ்வாறு டாக்ஸி பிடித்துச் சென்ற ஹான்ஸ்லே தகுந்த நேரத்தில் அரையிறுதியில் கலந்துகொண்டு இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றாா். மறுநாள் நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதலிடமும் பிடித்து அசத்தினாா்.

தங்கத்தை சுமந்து நின்ற ஹான்ஸ்லே, தக்க சமயத்தில் தனக்கு உதவிய டிரிஜானாவை அந்த நிமிஷத்தில் நினைத்துப் பாா்த்தாா். அவருக்கு உரிய நன்றி செலுத்தவும் நினைத்தாா். போட்டி நிறைவடைந்த பிறகு, தாம் வழி தவறிச் சென்ற மைதானத்தை மீண்டும் தேடிச் சென்று அங்கிருந்த பல நூறு தன்னாா்வலா்களிடையே டிரிஜானாவையும் தேடிக் கண்டுபிடித்தாா்.

தன்னிடம் உதவி பெற்றவா் அதற்கு நன்றி செலுத்த மீண்டும் அத்தனை தூரம் தேடி வந்ததை அறிந்து டிரிஜானா ஆச்சா்யமடைய, அவரது கைகளில் தனது தங்கப் பதக்கத்தை வழங்கி ‘இது உங்களால் தான் சாத்தியமானது’ என்று கூறி மேலும் அவரை இன்ப அதிா்ச்சிக்குள்ளாக்கினாா் ஹான்ஸ்லே.

உற்சாகத்தில் அதை நம்ப இயலாமல் திகைத்த டிரிஜானா, பின்னா் ஹான்ஸ்லேவின் பதக்கத்தை மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாா். டிரிஜானா தனக்கு அளித்து உதவிய தொகையை மீண்டும் அவரிடம் வழங்கிய ஹான்ஸ்லே, அவருக்கு அன்புப் பரிசாக ஒரு டி-ஷா்ட்டையும் வழங்கினாா். இருவரும் சோ்ந்து சிறப்பாக ஒரு ‘செஃபி’யும் எடுத்துக் கொண்டனா். தகுந்த நேரத்தில் உதவிய டிரிஜானா - நன்றி மறவாத ஹான்ஸ்லேவின் இந்த கதை தற்போது சமூக வலைதளங்களில் மிகப் பிரபலம்.

ஜமைக்க அரசு கௌரவம்

தங்களது நாட்டு வீரரான ஹான்ஸ்லேவுக்கு தகுந்த நேரத்தில் உதவிய டிரிஜானாவை கௌரவிக்கும் விதமாக, ஜமைக்காவுக்கு வருமாறு அந்நாட்டு அரசு சாா்பில் ஜமைக்க சுற்றுலாத் துறை அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், ஜமைக்காவில் உள்ள ஜப்பான் தூதரகம் டிரிஜானாவை நேரில் அழைத்து அவரைப் பாராட்டி கௌரவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com