அறிவியல் ஆயிரம்: உலகின் முதல் உயிரி பூஞ்சை கண்டுபிடிப்பு

அமெரிக்க - சீன விஞ்ஞானிகள் இணைந்து இதுவரை கண்டிராத மிகப் பழமையான நிலப்பரப்பு புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது கண்ணுக்குத் தெரியாத  ஒரு சிறிய பூஞ்சை போன்ற ஓர் உயிரினம் என்கின்றனர். 
பூஞ்சை போன்ற இழை மைக்ரோஃபோசிலின் நுண்ணோக்கி படம்
பூஞ்சை போன்ற இழை மைக்ரோஃபோசிலின் நுண்ணோக்கி படம்

நாம் பூஞ்சைகளைப் பற்றி நினைக்கும்போது, முதலில் ​​நினைவுக்கு வருவது காளான், ருசியான ஒரு நல்ல சமையல் என்பதுதான் அல்லது இறந்த கரிமப் பொருள்களை முக்கிய ஊட்டச்சத்துகளாக உடைக்கும் அற்புதமான திறனாளி என்பதே.

வர்ஜீனியா தொழில்நுட்ப அறிவியல் கல்லூரி புவியியல் பேராசிரியர் சுஹாய் சியாவோ மற்றும் தியான் கன் சியாவோ ஆகிய இருவரும், பூமியின் முதல் வரலாறு முழுவதிலும் பூஞ்சைகள் வகித்த முக்கிய பங்கைப் பற்றியும், இவை பனி யுகத்திலிருந்து புவிக்கோளை மீட்ட வரலாற்றையும் விரிவாக கூறுகின்றனர்.

முதல் உயிரின் விதை

அமெரிக்க - சீனா இரு நாட்டு விஞ்ஞானிகளும் இணைந்து மிகுந்த  ஒத்துழைப்புடன், இதுவரை கண்டிராத மிகப் பழமையான நிலப்பரப்பு புதைபடிவத்தை (fossil) கண்டுபிடித்துள்ளனர். இதுதான் பூமியின் மிகமிகப் பழமையான நிலப் புதைபடிவம். இந்த உயிர்தான் உலகை முதன்முதலில் வடிவமைத்திருக்கக்கூடிய ஓர் அமைப்பு. அது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய பூஞ்சை போன்ற ஓர் உயிரினம்தான் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.  பூஞ்சைதான் இன்றைய அனைத்து உயிர்களின் விதையாக இருந்திருக்கிறது. 

உலகின்  வெப்பம் -50 ° C

சுமார் 63 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய  உலகளாவிய சராசரி வெப்பநிலை - 50 ° C ஆக சரிந்தது;  உலகின்  கடல்கள் அனைத்தும்  சுமார்  ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு உறைந்துபோய்விட்டன. பின்னர்  காலப்போக்கில், காலநிலை மீண்டும் திடீரென வெப்பமடைந்தபோது, பூவுலகின் முதல் விலங்கு தன் வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கிப் பரிணமித்தது.

பூமியின் பனிப்பூட்டு

பனியினால் பூட்டப்பட்டு இருந்த பூமியின் உயிர்க்கோளம் பின் எவ்வாறு “இயல்பு நிலைக்கு”த் ​​திரும்பியது என்பதை விஞ்ஞானிகள் நீண்டகாலமாக சிந்தித்து விடை தேடி வருகின்றனர். இப்போது, ​​இந்தப் பூஞ்சைகளின் கண்டுபிடிப்பு, நுண்ணிய, குகைவாழ்  பூஞ்சைகள், பனியால் பூட்டப்பட்ட உயிர்க்கோளத்தைத் திறப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று கூறுகிறது.

தெற்கு சீனாவில் நூல் பூஞ்சை

இதைப் பற்றிய தகவல்கள்/ஆய்வுகள் அனைத்தும், நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.  இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் எதிர்பாராத விதமாக பல நீண்ட, நூல் போன்ற இழைகளை - பூஞ்சைகளின் முக்கிய குணாதிசயங்களை - தெற்கு சீனாவின் குய்ஷோ (Guizho) மாகாணத்தில் உள்ள டௌசாண்டுவோ (Doushantuo) உருவாக்கத்தில், வண்டல் டோலோஸ்டோன் (Dolostone) பாறைகளுக்குள் உள்ள சிறிய துளைகளில் எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.  

எதிர்பாரா கண்டுபிடிப்பு

“இது ஒரு. தற்செயலான கண்டுபிடிப்பு” என்று அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப அறிவியல் கல்லூரியின் இணை ஆய்வாளர் தியான் கன் கூறுகிறார். " இதனைக் கண்டுபிடித்த அந்தநேரத்தில், விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருக்கும் புதைபடிவமாகக்கூட  இது இருக்கலாம் என்பதை நாங்கள்  நன்கு உணர்ந்தோம். எங்கள் அனுமானம் சரியாக இருந்தால், துவக்க கால / ஆதிகால தட்பவெப்ப நிலையையும் இடமாற்றத்தையும் ஆரம்பகால வாழ்க்கைப் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

நிலத்தடி நெடுஞ்சாலை

பூஞ்சைகளில் ஒரு வலிமையான செரிமான அமைப்பு உள்ளது, இது பாறைகள் மற்றும் பிற கடினமான கரிமப் பொருள்களை வேதியியல் ரீதியாக உடைத்துச் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் ஊட்டச்சத்துகளை சுழற்ற முடியும்.  பரந்த பூஞ்சை வலைகள் மண்ணின் வழியாக  ஊடுருவி, தாவரங்களுக்கு இடையில் உணவு, நீர் மற்றும் ரசாயன சமிக்ஞைகளை கொண்டு செல்ல போக்குவரத்துக்காக நிலத்தடி நெடுஞ்சாலைகளை உருவாக்கி வைத்திருக்கின்றன.

உயிர் வேதியியல் சுழற்சிக்கு உதவும் பூஞ்சை

"பூஞ்சை, தாவரங்களின் வேர்களுடன் பரஸ்பர உறவைக் கொண்டுள்ளது; இதனால் பாஸ்பரஸ் போன்ற தாதுகளைத் திரட்ட உதவுகிறது" என தியான் கன் கூறுகிறார்.

இந்த பூஞ்சைகள் நிலப்பரப்பு தாவரங்கள் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்து சுழற்சிகளுடனான தொடர்பு காரணமாக, தரைவாழ் பூஞ்சைகள், உயிர் வேதியியல் வானிலை, உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்புகளில் உந்துதல் செல்வாக்கைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார். 

150 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரிந்த பூஞ்சை

பூஞ்சை இனங்கள் சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மற்ற வாழ் உயிரிகளிலிருந்து விலகிச்சென்றதிலிருந்து உருவாகிப் பரிணமித்து வருகிறது. ஆனால், இது எளிதில் சிதைக்கக்கூடிய தன்மையதாலும் மற்றும் உயிரியக்கமயம் ஆகாததாலும் (எலும்புக்கூடு போன்ற கனிம கட்டமைப்புகளை உருவாக்குவதால்) பூஞ்சைகளின் புதைபடிவ பதிவு என்பது மிகக் குறைவு. இதனால் பூஞ்சைகள் எப்போது நிலத்தில் காலனித்துவப்படுத்தப்பட்டன என்பதை  விஞ்ஞானிகள் அறிவதும் மற்றும் புவிக்கோளின் அமைப்புகளில் எவ்வாறு  முக்கியப் பங்கு வகித்தது என்பதை நிர்ணயிப்பதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுகிறது.

புதைபடிவ வயது 100 கோடி ஆண்டுகள்

பூஞ்சையுடன்  உறவு/தொடர்பு  கொண்ட புதைபடிவங்கள் முன்னர் கனடாவின் ஆர்க்டிக் பகுதிகளில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இவை  சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. மேலும், 81 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பூஞ்சை- போன்ற புதைபடிவங்கள் சமீபத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் நிலப்பரப்பு புதைபடிவ பதிவில் கிடைத்த /உள்ள பழமையான தெளிவற்ற, மறுக்கமுடியாத பூஞ்சைகள் சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முந்தியவை என்று தெரிகிறது.

பூஞ்சைகள் முதல் நிலப்பரப்பு உயிரியா?

புதிதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைபடிவ இழைகள் உண்மையில் பூஞ்சைகளாக இருந்தால், அது பூஞ்சைகளும் தாவரங்களும் முதலில் உருவாக்கிய ஒரு கூட்டுவாழ்வு உறவை, காலவரிசையை மாற்றி, குறைந்தது 63.5 கோடி ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளும்.

இங்கு எழுப்பப்படும்கேள்வி என்னவென்றால், நிலப்பரப்பு தாவரங்கள் தோன்றுவதற்கு முன்பு நிலப்பரப்பில் பூஞ்சைகள் இருந்ததா? என்று கேள்வி எழுப்பும் வர்ஜீனியா டெக்கின் (Virginia Tech) இணை ஆசிரியரும் புவியியலாளருமான சுஹாய் சியாவோ (ShHhuhai Xiaohug) எங்கள் ஆய்வின்படி 'ஆம்' என்பதுதான் பதில் என்று கூறுகிறார். 

இப்போது கிடைத்துள்ள புதைபடிவ இழைகளும்கூட வேறு சில / மற்ற புதைபடிவங்களுடன் காணப்பட்டன. எனவே, ஆராய்ச்சியாளர்களின் அடுத்த கட்டம் என்பது இதில் தொடர்புடைய, இதிலுள்ள  பிற உயிரினங்களைத் சிக்கலின்றி பிரிப்பதாகும்.

சுற்றுச்சூழலில், அதனதன் சூழலில் உயிரினங்களைப் புரிந்துகொள்வது என்பது எப்போதும் அவசியம் மற்றும் முக்கியமும்கூட என்று சியாவோ கூறுகிறார்.

பூஞ்சைகள், டோலோஸ்டோன் பாறைகளின் சிறிய துவாரங்களில் வாழ்ந்தன என்ற பொதுவான கருத்து எங்களுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு காலம்  சரியாக வாழ்ந்தார்கள், அவை எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பது பற்றிய தகவல்கள்  அதிகம் அறியப்படவில்லை.

ஏன் பூஞ்சைகள் புதைபடிவம் ஆகாது?

எலும்புகள் அல்லது மேல் ஓடுகள் இல்லாத பூஞ்சை போன்றவற்றைப் புதைபடிவ பதிவில் ஏன் பாதுகாக்க முடியவில்லை? என்பதே பெரிய வினாவாக உள்ளது. ஆனால்  இந்த இழைகளைக் கண்டுபிடிக்க மேலதிக ஆய்வு கட்டாயம் தேவை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றைப் பற்றிப் புரிந்து சொல்வதில் தங்கள் விளக்கத்தில் சரியாக இருந்தால், இந்த ஆரம்ப பூஞ்சைகள் ஒரு பனியுகத்திலிருந்து வெளியே வந்து நமக்குத் தகவல்களை வழங்கியிருக்கலாம், மேலும் நமக்குத் தெரிந்த வாழ்க்கைக்கான நிலைமைகளை உருவாக்கவும் உதவியிருக்கலாம். இன்னும் புதைபடிவ மற்றும் ஆய்வுகளை நோக்கிக் காத்திருப்போம். காலமும் நவீன தொழில்நுட்ப சாதனங்களும் நம்மை வழிநடத்தும்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com