படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர் டார்வின்

மனிதகுல பரிணாமத்தை உலகிற்கு அளித்த அறிவியலாளர் சார்லஸ் டார்வினின் 212 ஆவது பிறந்த நாள் இன்று. 
சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின்

​பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வினின் 212 வது பிறந்த நாள் இன்று. அவர் 1809, பிப்ரவரி 12 ஆம் நாள் பிறந்தார். அவர் மறைந்து 139 ஆண்டுகளாகிறது. 'இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினத் தோற்றம்' எனும் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலை வெளியிட்டு உலகின் பழமைவாதத்தை தகர்த்து 162 ஆண்டுகளாகிறது.

'மனிதனின் மரபுவழித் தோற்றம்' என்னும் மனிதகுல பரிணாமத்தை விளக்கிய அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த நூலை உலகிற்கு அளித்து 150 ஆண்டுகளாகிறது. உலகம் முழுவதும் அறிவியலாளரும், பகுத்தறிவாளர்களும் இந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். அவரது காலத்தில் டார்வின் ஒரு வித்தியாசமான மனிதராகத் திகழ்ந்தார். அவர் இயற்கையை வெகுவாக நேசித்ததால்தான் அவரால் பரிணாமத்துடன் ஒன்றிணைந்து இயற்கைத் தேடலை மேற்கொள்ள முடிந்தது.

இயற்கை சிந்தனையாளரான சார்லஸ் ராபர்ட் டார்வின் இங்கிலாந்தில்,  ஸ்ரூவ்ஸ்பெரி என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனார் எராஸ்மஸ் டார்வினும் ஒரு மருத்துவர். இருவருமே முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்களைப் போலவே பேரன் சார்லஸூம் எதையும் வித்தியாசமாக யோசிப்பவராக இருந்தார்.​

19 ஆம் நூற்றாண்டில் அவர் பிறந்த அந்த காலகட்டத்தில்தான், சமுதாயத்தில்  ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளும், சில புரட்சிகரமான அறிவியல் மாற்றங்களும் நடைபெற்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் உயிரியலில் நிகழ்ந்தது. மனிதனின் வரலாற்றுப் பாத்திரத்தில், மனிதன் மற்றும் இதர உயிரிகளின் முன்னோடி யார் என்பதுதான் அது. அதனை​த் தேடிக் கண்டறிவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஏனெனில் அதைப்பற்றிய வினாக்கள் எழுப்புவது கூட கடினமாக இருந்த காலகட்டம் அது. அதுதான் பரிணாமம். அந்த பரிணாம அறிவியலில் பிறந்த உண்மைதான், மனித இனம் குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்பது. அதனை அந்தக்  கருத்தைப் பல புதைபடிம சான்றுகளுடனும், உயிர் சான்றுகளுடன் நிரூபணம் செய்த விஞ்ஞானிதான் சார்லஸ் டார்வின். 

இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட டார்வின்

டார்வின் சிறு வயது முதல் விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது மிகுந்த ஆர்வ​ம் கொண்டிருந்தார்.  தந்தையார் ராபர்ட் டார்வின், தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ​அதற்கான முயற்சியும் எடுத்தார். பள்ளிப்படிப்பு முடித்ததும், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ராபர்ட் டார்வின் தன் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில்​ துளி கூட ​ ஆர்வம் ஏற்படவில்லை.

​விலங்குகளை நேசித்த டார்வின்

வரலாற்றில் பல அறிஞர்களின் வாழ்வைப் போலவே சார்லஸ் சிறுவனாக இருந்தபோது பள்ளிக்குச் செல்ல மறுத்தார். பெற்றோரின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார். தட்டான் பூச்சி, மண்புழுக்கள், வண்ணத்துப் பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என எல்லாவற்றையும் அவர் அறையில் வைத்திருந்தார். ஊரில் உள்ள பல பொதுவான விலங்குகளையும் அவர் அன்பாக நடத்துவார்.

அறிவியலை எதிர்த்த மதம்

18  மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் அனைத்து அம்சங்களிலும், மதத்தின் கையே ஓங்கி இருந்தது. மதம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அனைத்து தகவல்களும், பதிவுகளும், கண்டுபிடிப்புகளும், செயல்பாடுகளும், பொது நிகழ்ச்சிகளும், மதத்தைச் சார்ந்தே, அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே  நடைபெற்றன. அரசும்கூட மதவாதிகளின் கைக்குள்தான். அதனால்தான் கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னபோது, மதவாதிகள் அதிர்ச்சியுற்று, ஆத்திரத்தோடு கடவுள் உருவாக்கிய மனிதனைக் கொண்ட பூமி, சூரியனைச் சுற்றுவதா? இருக்கவே இருக்காது என்றனர். அதனடிப்படையில் கலிலியோ அரச நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார்; தண்டிக்கப்பட்டார். கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னது கடவுள் மறுப்புச் செயல், அவதூறு மற்றும் கடவுள் நிந்தனை  என்று குற்றம் சாட்டப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 

பரிணாமச் சான்றுகள்.

கடவுள் படைத்த அற்புத உருவம் மனிதன் மட்டுமே! அவன்தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், மனித இனம், குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவனாது என்றால், மதவாதிகள், தேவாலய மக்கள் எளிதில் ஏற்க மாட்டார்கள். ஆனாலும், கடலில் பல மாதங்கள் பயணம் செய்து, ஆங்காங்கே, பல உயிர்களையும், விலங்குகளையும் சேகரித்து ஒப்பீட்டறிந்து, அவற்றின் உடல் உள்ளுறுப்புகளை  ஆராய்ந்து அதன் பின்னரே, உயிரிகளின் தோற்றம் (Origin of  Species) என்ற நூலை எழுதினார் சார்லஸ் டார்வின். இதனை எழுதுவதற்கு அவர் சுமார் 20 ஆண்டு காலம் அதற்கான தகவல்களை, உண்மைகளை சேகரித்தார்.

டார்வினின் பரிணாமக் கொள்கை 

சார்லஸ் டார்வினுக்கு இயற்கையாக விலங்குகள் மேலுள்ள ஈடுபாட்டால்தான், அவற்றை சேகரித்து, அதன் பின்னணியை அலசி, உயிர்களின் தோற்றம் பற்றிய கணிப்பைக் கொண்டுவர முடிந்தது. இயற்கைத் தேர்வு மூலம் சார்லஸ் டார்வின் உருவாக்கிய பரிணாமக் கொள்கைதான் இன்று நம்மை இந்த உலகத்தில் நமது இடம் என்ன என்ற மறுசிந்தனையைத் தூண்டியது. மனிதன் தனது முன்னோடிகளை மனிதக் குரங்கோடு சேர்ந்து பகிர்ந்து கொள்கிறான் என்ற கருத்தை ஆதாரம் மூலம் விதைத்து, மேற்கத்திய கலாச்சார அடிப்படைக்கு வேட்டுவைத்து தகர்த்தவர் சார்லஸ் டார்வின்.

பரிணாமத்தின் தந்தை டார்வின் ​

சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் தந்தை என்று போற்றப்பட்டாலும்  உண்மையில், டார்வின் அவரது பரிணாமக் கொள்கையை உருவாக்கிய காலகட்டத்திலேயே, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russell Wallace) என்ற மற்றொரு விஞ்ஞானியும் இதே கருத்தை முன்னிறுத்தி எழுதி வெளியிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக, டார்வின் மட்டுமே, இயற்கைத் தேர்வு மூலம் நிகழும் பரிணாமக் கொள்கைக்காக, அவரது புத்தகமான உயிரினங்களின் தோற்றம் (”the Origin of Species) என்ற புத்தகம் வெளியாகும்  முன்னரே, அவரது பல்வேறு  பணிகளுக்காக மதிக்கப்பட்டார்.

மேலும், ஆல்பிரட் வாலஸ் அப்போது பெரிதும் பலரால் அறியப்படாதவராக இருந்ததும் கூட ஒரு காரணம். எனவே, விஞ்ஞானிகளும், மக்களும், சார்லஸின் பரிணாமக் கொள்கை வெளியீட்டில், அவரையே கொண்டாடினர். அவரின் கருத்துகளைக் கேட்டனர். அந்த காலகட்டத்தில் "உயிர்களின் தோற்றம்" புத்தகம் வெளியானபோது, அது ஒரு பரபரப்பான வெற்றியையும் பெற்றுத் தந்தது. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், இவரைப் பலர் எள்ளி நகையாட வழிவகுத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்றைய அறிவியல் உலகிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

​வரலாற்றுச் சிறப்புமிக்க பீகிள் பயணம்

​சார்லஸ் டார்வின்  தமது 22 ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்றார். ஆனால், கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேர மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய பீகிள் (HMS Beagle) என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலைமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால், ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம்தான் 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை' உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

பரிணாம சான்றுகள் சேகரிப்பு ​

ஐந்து ஆண்டுகளில் HMS பீகில் என்ற கப்பல் உலகையே வலம் வந்தது. இன்னல்கள் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பல உயிரினங்களின் எலும்புகளை சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்வது இன்றியமையாததாகும்.

உயிரின மாற்றம் நோக்கிய ஆய்வு ​

“உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?”  என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும் மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றிலுமாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார்.

ஆனால், பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கருதினார்.  கலபோகஸ் (Galapagos Island) தீவுகளில், புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப்பட்டார். அந்த ஆய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” உருவானது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக் கட்டுரையாக எழுதி “பீகிள் கப்பலில் ஒரு பயணம்” (The voyage of the Beagle) என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.

1858 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. 1859 ஆம் ஆண்டு டார்வின், உலகை வியப்பில் ஆழ்த்திய கொள்கையை, ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species by Natural Selection) என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி, உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்.  இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் கண்டறிந்து கூறினார். அந்த புத்தகம் வெளியான அன்றே அதன் 1250 பிரதிகளும் விற்று தீர்ந்தன. பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக் கொண்டனர்.

மனிதனின் மரபுவழித் தோற்றம்

மனிதனின் மரபுவழித் தோற்றம் என்னும் தனது நூலை 150 ஆண்டுகளுக்கு முன்பு டார்வின் வெளியிட்டார். மனித இனம் குரங்கு போன்ற உயிரிலிருந்து உருவானது என்று கூறியதால், மதவாதிகள் ஆத்திரம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த மதவாதிகளும், பழமைவாதிகளும், எப்படியாவது டார்வினை ஒழித்துக் கட்ட விரும்பினர். அது முடியாமல் போகவே, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிய நீ தான் குரங்கு என டார்வினை குரங்காக உருவகப் படுத்தி, உடனே உடல் முழுவதும் குரங்காகவும், முகம் மட்டும் டார்வின் ஆகவும் உள்ள ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்து வெளியிட்டனர். டார்வின் நரகத்துக்குதான் போவார் என்றும் வசை பாடினார்கள். அவரின் பிறந்த நாளை ‘பேய் தினம்’ என்றும் அறிவித்தார்கள். ஆனாலும்கூட, அவர்களுக்கு மனம் சமாதானம் அடையவில்லை. கோபம் குறையவில்லை. காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலான மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பித்தார். டார்வினின் கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றார். 

மதத்தை நொறுக்கிய டார்வின் கோட்பாடு 

ஆண்டவன் உயிர்களை ஒரே நாளில் உருவாக்கினார் என்று உலகின் பெரும்பாலான மதங்கள் போதித்து வந்தன. அந்தக் கருத்தினை டார்வினின் புத்தகம் தவிடு பொடியாக்கியது. அனைத்து மதவாதிகளும் டார்வினுக்கு எதிராக கொதித்து எழுந்தனர். ஆனால், டார்வின் அமைதியாக தனது உயிரின சேகரிப்புக்களைக் கொண்டு விளக்கமளித்தார்.  உயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாற, ஒவ்வொரு விலங்கினமாக மாறி மாறி, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதை தெளிவாக ஆதாரத்துடன்  விளக்கினார். எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. நிகழ்வு

கி.பி. 1860 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. பொதுமக்களும், விஞ்ஞானிகளும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். அனைவரும் நடைபெற இருக்கும் மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். டார்வின் 'இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்' என்ற 230 பக்கம் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு பெரும் சூறாவளியைக் உருவாக்கினார். அவரின் சின்ன புத்தகம் உலக உருண்டையையே மிரட்டியது; உண்மை கசந்தது; மதவாதிகளுக்குக்கும், கடவுள் தாசர்களுக்கும் இந்த குட்டிப் புத்தகம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். 

விவாதம் தொடங்கியது. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப். 'மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா' என்று கேலி செய்தார். இறுதியில் டார்வினின் ஆராய்ச்சி சத்திய மறைநூலின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது என்று கூறினர்.

டார்வின் ஆதரவாளரின் பதிலுரை

புனிதக் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் ஆதரவாளர் ஹக்ஸ்லி. வெறியூட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு ஏராளமான துணிவு தேவை. மதமெனும் இருட்டுக் குகைக்குள் இருக்கும் மக்களை அறிவியல் உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்காவே அனைத்து அவலங்களையும் சகித்துக் கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியைப் பற்றி  விரிவாகப் பேசினார். அங்கு இருந்த மக்களில் ஒரு பகுதியினரையாவது உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தில் பேசினார் ஹக்ஸ்லி. பின்னர் பொது விவாதம் முடிந்தது. ஆனால், டார்வின் எழுப்பிய அறிவியல் அலை மட்டும் ஓயவே இல்லை.

மத பழமைவாதிகளும் அறிவியல் உண்மையும் 

கண்ட இடமெல்லாம் குரங்குகளை கல்லாலடித்து துரத்தினார்கள் மதவெறியர்கள். இங்கிலாந்தின் தேவாலயங்களில், கருப்பு உடை தரித்த மதவாதிகள் தங்களின் கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள். இதுதான் அன்றைய உலகில் நடந்தது. ஆனால் இன்று மனித இனம் குரங்கின அமைப்பிலிருந்துதான் உருவானது என்றும், மனிதனுக்கும், டால்பினுக்குக்கும்கூட பொது முன்னோடிகள் உண்டு என்ற உண்மைகளும் வெளிவந்து, அறிவியலின் தலை நிமிர்ந்த உண்மை கம்பீரமாக எழுந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

டார்வினின் சமூக உணர்வு  

இது தவிர டார்வினுக்கு ஏராளமான விசித்திர குணங்களும், பழக்க வழக்கங்களும் உண்டு. ஆனால், பொதுவாக பரிணாமம் பற்றி பேசும் மக்கள் இவற்றைக் கையில் எடுப்பதில்லை. டார்வின் பொதுவாகவே, விலங்குகள் மீதும் மற்ற உயிரிகள் மேலும் பச்சாதாபமும், பரிவும் ஏராளமாய் உள்ளவர். அவரின் இந்த குணம் மனித இனம் வரை கூட நீட்டிற்று. அவர் HMS பீகிள் என்ற கப்பலில் பயணிக்கும்போது, அவரின் மனம் அடிமைகளுக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி சிந்தித்தது. அவர் அந்த கப்பலை தென் அமெரிக்காவில் நிறுத்தினார். அங்கு நடைபெற்ற கொடுமைகளையும்கூட உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தில் அடிமை ஒழிப்பு பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். 

தனித் தீவிற்கும், மலைச் சிகரத்திற்கும் டார்வினின் பெயர்

டார்வினும் கப்பலில் அவருடன் பயணித்தவர்களும் 1833 ஆம் ஆண்டு, டியாரா டெல் பியூகோ அருகில் சென்றபோது, ஒரு பெரிய பனிப்பாறை கடலில் வீழ்ந்து பெரிய அலையை உண்டு பண்ணியது. அப்போது டார்வின் விரைந்து கடற்கரைக்கு ஓடிச் சென்று கப்பலின் படகுகள் கடலுக்குள் சென்றுவிடாமல் காப்பாற்றினார். அக்கப்பலில் இருந்த அனைவரும் அவரால் காப்பாற்றப்பட்டனர். டார்வினை பாரட்டும் வகையில் கப்பலின் மாலுமி பிட்ஸ்ராய் அந்த இடத்துக்கு டார்வின் பெயரையே 'டார்வின் ஒலி' என்று சூட்டினார். 

டார்வின் HMS பீகிள் கப்பலில் பயணிக்கும்போது, 1834, பிப்ரவரி 12ல், அவரின் 25 ஆவது பிறந்த நாள் வந்தது. அங்கே கடலில் ஒரு தீவு போன்ற மலை தென்பட்டது. அதனைப் பார்த்த பீகிளின் மாலுமி பிட்ஸ்ராய், அந்த குன்றிற்கும் டார்வின் பெயரைச் சூட்டினார். அந்த பகுதியில் இருந்த பெரிய சிகரத்திற்கும் டார்வின் சிகரம் (Mount Darwin) என்றே பெயர் சூட்டப்பட்டது.

டார்வின் விரும்பிய உணவு

டார்வின் அனைத்து உணவையும் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர் எல்லா விலங்குகளையும் சாப்பிட்டு ருசித்துப் பார்க்க டார்வின் விரும்புவார். அதனால், கேம்பிரிட்ஜில் உள்ள குளூட்டன் கிளப் ("Glutton Club")ல் இணைந்து வாரம் ஒரு முறை கண்ட விலங்குகளையும் உண்டு சுவை பார்ப்பார். அதுபோலவே, அவர் HMS பீகிள் கப்பலில் பயணிக்கும்போதும், வழியில் கிடைத்ததை சாப்பிட்டு ருசி பார்த்தார். டார்வின் பீகிளில் செல்லும்போது கலபோகஸ் தீவுகளில் உள்ள இகுவன (Iguana) என்ற பல்லியையும், அங்கிருந்த பெரிய ஆமைகளையும் உண்டு சுவைத்து ரசித்துள்ளார். கலபோகஸ் தீவில் உள்ள ஆமையின் சிறுநீர்ப் பையில் உள்ள நீரையும் கூட அவர் சுவைத்துப் பார்த்தார்.  தான் கண்டுபிடித்த புதுவகை கோழியையும் உண்டு பார்த்தார். அந்த கோழிக்கு டார்வின் பெயரே சூட்டப்பட்டு ரியா டார்வினி (Rhea darwinii)  என்று அழைக்கப்பட்டது. 

டார்வினின் மற்ற கண்டுபிடிப்புகள் 

டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம் பெயர்த்திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான "தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு" என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.

பகுத்தறிவாளர் டார்வின்

மதத்துக்கும் ​அறிவியலுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கும், பரிணாமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும், விவாதங்களிலும் ஈடுபடவில்லை. "உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்" எனச் சொன்ன டார்வின், அவர் இறக்கிற பொழுது மனைவியிடம் 'நீ என்னைக் கவனித்துக் கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்' என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது.

சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் (Westminster Abbey) அவரது உடல் அடக்கம், ஜான் ஹெர்ஸ்ஷல் மற்றும் சர் ஐசக் நியூட்டன் (John Herschel and Isaac Newton) ஆகிய இரண்டு பெரிய விஞ்ஞானிகளுக்கு அருகில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

​அறிவியலிடம் மன்னிப்பு கேட்ட தேவாலயம்.

சார்லஸ் டார்வின் இறந்து ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர், அவரின் கோட்பாட்டை தவறென்று சொன்ன லண்டனின் தேவாலயம் அப்படிச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. ​ இன்றும் படைப்புக் கோட்பாட்டையும், மறுபிறவியையும், மோட்சத்தையும், நரபலியையும் நம்புகிறவர்கள் படித்தவர்கள் மத்தியிலும் அதிகம் இருக்கவே செய்கிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உச்சானிக் கொம்பில் நிற்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் முதல் வளரும் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் வரை பெரும்பாலானவர்கள் இன்றும் மூட நம்பிக்கையில் திளைப்பதை கரோனா காலத்தில் கண்கூடாக பார்க்க நேர்ந்தது. அறிவியல் என்பது உண்மை காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், புதியனவற்றை கண்டுபிடிப்பதற்கும், சுயச்சார்புக்கும், அறிவியலை மக்களுக்கானதாக்குவதற்கும், அறிவியல் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சியை உத்திரவாதப்படுத்துவதற்கும் அவசியமானதாகும். அறிவியல் உண்மை என்றைக்கும் உலகில் நிலைத்து வாழும் இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளால் தான், இந்த உலகம் புனரமைக்கப்பட்டு இருக்கிறது. அறிவியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும். ஆய்வுகளின் மூலம் உண்மைகளை உலகுக்கு எடுத்து உரைக்கும் ​

[கட்டுரையாளர்- பேராசிரியர், குந்தவை நாச்சியார்

அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com