காங்கிரஸூக்கு கடிவாளம்; திமுகவின் புது(வை) வியூகம்

திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக தொடருமா? ஒற்றை இலக்க அல்லது பத்தோ பதினைந்தோ இடங்கள்தான் வழங்கப்படும் என்றால், காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
காங்கிரஸூக்கு கடிவாளம்; திமுகவின் புது(வை) வியூகம்



"எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குத் தெரியும்' என்பது வழக்கமாகத் திரைப்படங்களில் வில்லன்கள் சொல்லும் வசனம். அதிக இடங்கள் கேட்டு தொந்தரவு செய்யும் காங்கிரஸ் கட்சியை வழிக்கு கொண்டுவர, திமுக இப்போது அந்த அஸ்திரத்தைத்தான் கையிலெடுத்திருக்கிறது. 

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகனை நியமித்திருப்பதன் நோக்கம் அதுதான் என்று திமுக வட்டாரங்களில் வெளிப்படையாகவே பேசப்படுகிறது. 

புதுவை மாநில திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெகத்ரட்சகனை வரவேற்க புதுச்சேரியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. "மண்ணின் மைந்தரே வருக, மக்களாட்சி தருக' என்று சுவரொட்டிகளும் பதாகைகளும் வழிநெடுகக் காணப்படுகின்றன. முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காத குறை. 

திமுகவின் தேர்தல் பிரசார ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும், இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினும் திமுக மிக அதிகமான இடங்களில் போட்டியிட்டாக வேண்டும் என்றும், அதன்மூலம் தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியில் அமர முடியும் என்றும் கருதுவதாகத் தெரிகிறது. அவர்கள் கொடுக்கும் அழுத்தம்தான் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமல்லாமல், ஏனைய கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள திமுக தலைமை முடிவெடுத்திருக்கிறது என்கிறார்கள்.

தமிழகத்தில் குறைந்தது 45 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும்கூட, அவர்கள் 30 இடங்கள் கிடைத்தாலும் போதும் என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர். அதிலும் குறைக்கப்பட்டு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வது என்பதுதான் தினேஷ் குண்டுராவின் நிலைப்பாடும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மனநிலையும். ஆனால் அதற்குக்கூட திமுக தலைமை தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலை.

ஏற்கெனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இப்போது காங்கிரஸ் கட்சியும் அதேபோல ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. புதுவையில் தனது ஆட்சி தொடர்வதற்காக, தமிழகத்தில் திமுக தரும் சில இடங்களைப் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக இருக்கும் என்பது திமுக தலைமை தெரிந்து வைத்திருக்கும் காங்கிரஸின் பலவீனம். அதனால் சாதுர்யமாக நடத்தப்படும் நாடகம்தான் புதுவை திமுக தேர்தல் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டிருப்பது. 

இப்போதைய நிலையில், புதுவை மாநில சட்டப்பேரவையில் 30 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், பாஜகவைச் சேர்ந்த 3 நியமன உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இதில் நியமன எம்எல்ஏ சங்கர் திடீர் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.  ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் இருப்பதால் அந்தக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் செயல்பட்டு வருகிறது. 

காங்கிரஸ் தனது வழிக்கு வராவிட்டால் எதிர்வரும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸூடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடவும் திமுக இன்னொருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. 

ஏற்கெனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடன் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் தொடர்பில் இருந்து வருவதாகவும், திமுக கூட்டணிக்கு அவரைக் கொண்டு வருவதில் முனைப்பாக செயல்படுவதாகவும் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லாமல் இல்லை. 

புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பதால்தான் திமுகவும் பாமகவும் ஒன்றியப் பிரதேசமான புதுவையில் பலம்பெற முடியவில்லை. இப்போது என்.ரங்கசாமி - ஜெகத்ரட்சகன் - மருத்துவர் ராமதாஸ் என்கிற வன்னியர் கூட்டணி அமையுமானால் பெரும்பான்மை வன்னியர்களின் பேராதரவுடன் ஆட்சி அமைத்துவிட முடியும் என்கிற தேர்தல் கணக்கு முன்வைக்கப்படுகிறது. 

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் - திமுக - பாமக கூட்டணி அமையுமானால் அதுவே தமிழகத்திலும் திமுகவுடன் பாமக கூட்டணியில் இணைவதற்கான வாசல் கதவை திறந்துவிடக்கூடும். திமுக வழங்கும் இடங்களைப் பெற்றுக்கொண்டு,  கூட்டணியில் தொடர காங்கிரஸ் முரண்டு பிடித்தால், காங்கிரஸூக்குப் பதிலாக பாமகவுக்கு அதிக இடங்களை வழங்கி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திமுக முன்வரக்கூடும். 

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் போட்டியிட 60 இடங்களும் துணை முதல்வர் பதவியும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கும் பாமகவை சமரசப்படுத்த, புதுவை கூட்டணி வழிகோலக்கூடும்.  தேர்தலைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை புதுவை சட்டப்பேரவையில் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் புதுவை முதல்வராவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று பாமக கணக்கு போடக்கூடும். 

திமுகவைப் பொருத்தவரை காங்கிரஸ் தேவையற்ற சுமையாக கருதப்படுவதற்கு பின்னணி இருக்கிறது. 2006-இல் திமுக அணியில் 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களை வென்றதற்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எண்ணிக்கை கடுமையாக குறையத் தொடங்கிவிட்டது. 2011-இல் 63 இடங்களில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களிலும், 2016-இல் 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களிலும்தான் காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது. அதனால் இந்த முறை காங்கிரஸூக்கு ஒற்றை இலக்க இடங்களை ஒதுக்கி அந்த இடங்களில் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த நினைக்கிறது திமுக தலைமை.

குறைந்தது 25 இடங்களிலாவது காங்கிரஸ் போட்டியிடாவிட்டால் மரியாதையாக இருக்காது என்பது தமிழக காங்கிரஸ் மட்டுமல்ல, ராகுல் காந்தி உள்பட அனைவரின் கருத்து. ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து பலர் பாஜகவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், மிகக் குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டால் அது கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்பது அவர்களின் வாதம். 

காங்கிரஸிலேயே சிலர், திமுக தரும் இடங்களைப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் தொடர்வதுதான் புத்திசாலித்தனம் என்றும் கருதுகிறார்கள். "காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறது என்பதல்ல முக்கியம். நாம் தேர்தலில் நிற்காமலே போனாலும் பரவாயில்லை; நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் திமுகவின் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் போதும், அதுதான் முக்கியம்' என்று காங்கிரஸ் தலைமையிடம் கருத்துத் தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள். 

காங்கிரஸ் மட்டுமல்ல, திமுகவின் ஏனைய கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விசிக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவையும்கூட திமுகவின் பெரியண்ணன் மனநிலை கூட்டணி தொகுதிப் பங்கீட்டில், அதிருப்தியாகத்தான் இருக்கின்றன. 

குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது மட்டுமல்லாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி அந்தக் கட்சிகள் வற்புறுத்தப்படுவதும் அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. 

"இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். தேர்தல் வெற்றியில் பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. அதனால் கட்சிக்காரர்களுக்கு கூட தங்களது தொகுதியில் குறைந்தது ரூ.10 கோடி செலவு செய்யத் தயாராக இருந்தால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்' என்று பரவலாகவே திமுகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறது. அப்படியிருக்கும்போது, அதிகப் பணமும் செலவழிக்காமல், திமுகவின் செல்வாக்கில் குளிர்காயும் கூட்டணிக் கட்சிகளை எதற்காகச் சுமக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் கேள்வி என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக தொடருமா? ஒற்றை இலக்க அல்லது பத்தோ பதினைந்தோ இடங்கள்தான் வழங்கப்படும் என்றால், காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது? இரண்டு மூன்று இடங்களுடன் மதிமுக தனது சின்னத்தில் போட்டியிடுமா, இல்லை மக்களவைத் தேர்தலில் திமுகவின் சின்னத்தில்  போட்டியிட்டதைப்போல ஐந்தாறு இடங்களில் போட்டியிடுமா? 

புதுவையைக் காட்டி, காங்கிரஸை வழிக்கு கொண்டுவருவதன் மூலம், ஏனைய கூட்டணிக் கட்சிகளையும் ஒற்றை இலக்க இடங்களுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ள திமுக தலைமை நினைக்கிறதோ என்னவோ? 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா, இல்லை, "கை'யில் டார்ச் லைட்டை ஏந்திக்கொண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து மூன்றாவது அணி  அமைக்க முயலுமா? யூகம்தான். ஆனால், சிலவேளை யூகங்கள் நிஜமாகிவிடக்  கூடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com