Enable Javscript for better performance
Sri Lanka thinks of us as idiots: when will India realize?- Dinamani

சுடச்சுட

  

  நம்மை ஏமாளியாக நினைக்கும் இலங்கை: இந்தியா எப்போது உணரும்?

  By கே.எஸ். இராதாகிருஷ்ணன்  |   Published on : 19th January 2021 08:05 AM  |   அ+அ அ-   |    |  

  sri-lanka-thinks-of-us-as-idiots-when-will-india-realize

  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா

  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவரிடம் பல விஷயங்களை விவாதித்தார்.

  யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு உடைப்பு, மாகாண கவுன்சில் ஒழிப்பு விஷயங்கள் அங்கு இருந்தது.

  அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபயவையும் சந்தித்துப் பேசினார். தமிழர்கள் பிரச்னையில் 13-வது திருத்தம், மாகாண சபை முறையின் மாற்றம், தமிழர்களின் அரசியல் தீர்வு, ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் தமிழினம் அழிப்பு தொடர்பான நீதிகேட்ட தீர்ப்பாணைகள், இந்தியாவின் கரானா தடுப்பூசி இலங்கைக்கு வழங்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

  இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

  அப்போது, "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழ் சமுதாயத்தின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கெளரவத்திற்கு இந்திய அரசு துணை நிற்கும்" என்று இலங்கைப் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

  இப்படித்தான் இந்திரா காந்தி மறைவுக்குப் பின் மத்திய அரசில் இருப்பவர்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள், ஈழத் தமிழர்களுக்கோ 40 ஆண்டுகளாக எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருக்கிறது.

  இலங்கை இந்தியாவிற்கு எவ்வளவு தான் விரோதமாக நடந்துகொண்டாலும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியா ஆதரவளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது, அது மேலும் இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

  ஜெய்சங்கர் உறுதியளித்தவாறு இலங்கைக்கு தடுப்பூசி தருவது ஒரு மனிதாபிமான செயல் தான், இருப்பினும் இந்தியாவின் பங்களிப்புகளையும் உதவிகளையும் பெற்று இலங்கையில் பலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

  அவை:

  1.   யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் (தற்போது மூடப்படும் நிலை எனத் தகவல்)

  2.   காங்கேஸன் துறையில் தாது மண் திட்டம்

  3.   கொழும்பு யாழ்ப்பாணம் ரயில் பாதையை சீர் அமைத்து தந்தது

  4.   வவுனியாவில் புது பெரும் மருத்துவமனை

  5.   சம்பூர் மின் உற்பத்தி திட்டம்

  6.   இந்திய இலங்கை சுற்றுலாத் திட்டத்தை விரிவுபடுத்துவது

  7.   சூரிய வெப்பத்தைக்கொண்டு இந்தியா உதவியால் மின் சக்தி ஒப்பந்தம் செய்வது

  8.   இலங்கையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் பயிற்சியும் இந்தியா அளிப்பது

  9.   கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை

  10. எல்.என்.ஜி திரவ, இயற்கை எரிவாயு திட்டம்

  11. ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல்

  12. நகர்புறத்தில் வீதிகளைச் சீர்படுத்தி தருதல்

  13. விவசாய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி, இலங்கைத் தமிழர்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வழங்குதல்

  14. ஈழத் தமிழ் பிள்ளைகளுக்கு பாடசாலை செல்ல சைக்கிள் வழங்கல்

  15. திரிகோணமலை துறைமுகத் தளம் மற்றும் எண்ணெய் உற்பத்தி தொழில் ரீதியான ஒப்பந்தம்

  16. இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதில் உள்ள சிக்கல்கள். இந்தப் பயிற்சி யாருக்காக, இங்கிலாந்தில் சுமார் இரண்டு லட்சம் ராணுவ வீர்ரகள் தான் இருக்கிறார்கள், இலங்கையில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இது எதற்கு..? இந்தியர்களை அழிப்பதற்காகவா..? என்று இந்தியா உணர வேண்டும்.

  17. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 400 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் ஒப்பந்தம்

  18. பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் குறித்தான ஒப்பந்தங்கள்

  19. இந்திய ரயில் மற்றும் பேருந்துகள் விற்பனை ஒப்பந்தங்கள்

  என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இலங்கைக்கு பல வகைகளில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் இலங்கை அரசு சண்டித்தனமும் செய்கிறது.

  இலங்கை இந்தியாவிடம் தொடர்ந்து உதவிகள் பெற்றுக்கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் புணர் வாழ்வுக்கு இந்தியா நிதி வழங்கியும் அது சரியாக அங்குள்ள தமிழர்களுக்கு சேரவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கிடைத்த தகவலின்படி ராஜபட்ச தொகுதியின் பக்கத்தில் இலங்கையின் தென்முனையின் சிங்கள பகுதியில் காலேவில் ரயில்வே சந்திப்பு ரயில் நிலையம் இந்தியா கொடுத்த பணத்தில் கட்டினார்கள். அதையும் மன்மோகன் சிங் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா துவக்கி வைத்தார். இப்படியெல்லாம் பல குளறுபடிகள் இந்தியா கொடுத்த நிதியில் நடந்தன. மன்மோகன் சிங் அரசும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

  சமீபத்தில் ஓராண்டுக்குள்ளே இந்தியாவிடமிருந்து இலங்கை இருமுறை நிதி உதவி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் உதவிகளை பெறுகிறது. இந்தியாவிடம் ஒப்புக்கு உறவு வைத்துக்கொண்டு இலங்கை தன்னுடைய முழுமையான ஆதரவை சீனாவிற்கு கொடுப்பதை நாம் எப்போது சிந்திப்பது.

  இந்த நிலையில் அங்குள்ள தமிழர்களை இந்தியா அரவணைத்தால்தான் இலங்கை இந்தியாவைக் கண்டு அச்சப்படலாம். இந்தியா மீது இலங்கைக்கு பயமில்லாமல் போனதற்கு காரணம் ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு தான் பிரச்னை செய்தாலும், இந்தியா நம்மைக் கண்டிக்காது, ஒப்புக்கு அதிகாரம் வழங்கு என்று சொல்லும், அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளும் மனபாங்கில் இலங்கை அரசு இருக்கின்றது.

  இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு இந்திரா காந்தி அணுகுமுறையின் படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை ஓரளவு தமிழர்கள் பிரச்னைகளுக்கு நியாயத்தை வழங்கும். இப்படித்தான் இந்திரா காந்தி அணுகுமுறையைப் பார்த்து அச்சம் கொண்டார் ஜெயவர்தனா.

  பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் அமைதிப் படையாக இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971ல் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்குவதாகக் கூறி அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள். அடுத்து 1987ல் அமைதிப் படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப் படை வந்தபோது தெற்கு இலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெற்கு இலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப் படை என்றால் தெற்கு இலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் ராணுவ வீரர்களில் ஒரு வீரர்கூட தெற்கு இலங்கையில் நிறுத்தப்படவில்லை. அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடகிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டனர்.

  அதுமட்டுமல்ல, 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப் படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபாய் வீதம் 5,400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

  இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப் படை 5400 கோடி ரூபாய் செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப் படையினரால் 10,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.

  இப்போது அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணரவேண்டும். அதிகாரப்பூர்வமான பயணங்கள், பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்டப் பிரச்னையில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்,

  1.   வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 முள்ளிவாய்க்கால் போர் முடிந்து 10 ஆண்டுகள் மேல் ஆகியும், சிங்கள ராணுவம் தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குத் தமிழர்களை மிரட்டக் கூடிய வகையில் இருப்பதை ராணுவத்தினர் உடனே திரும்ப வேண்டும்.

  2.   மேலே குறிப்பிட்ட ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலங்கள், விவசாய காணி நிலங்கள், வீடுகளை திரும்பவும் தமிழர்களின் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும், இதுகுறித்தான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  3.   முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்ட தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

  4.   கடந்த 2009 போரின் போது காணாமல் போனவர்களை அறிந்து அதுகுறித்தான வெள்ளை அறிக்கையும், அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

  5.   ஈழத்தில் தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கும் சரியான நடவடிக்கைகள் இல்லை.

  6.   இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் குறித்தும் தெளிவானப் பார்வை சிங்கள அரசுக்கு இல்லை. இந்தியாவிலுள்ள அகதிகளை ஈழத்திற்கு திருப்பி அனுப்பி அந்நாட்டு மக்களாக வாழ செயல் திட்டங்களையும் இந்தியா இலங்கையிடம் பேசவேண்டும். சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் போல ஈழத் தமிழ் அகதிகள் பிரச்னைகள் ஆகிவிடக் கூடாது.

  இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு இங்கு தங்கிய கட்டணத்தை ரத்து செய்து, எந்தவித பயணக் கட்டணமும் இன்றி அவர்களை கப்பலில் அனுப்பிவைக்க வேண்டும். இலங்கை சென்றபின் இந்த அகதிகளின் வாழ்வாதாரத்தையும் பெற அனைத்து நடவடிக்கைகளும் செய்ய வேண்டும்.

  7.   மாகாண கவுன்சிலை ஒழிப்பதற்காக சிங்கள அரசு இறங்கியுள்ளது, அது மேலும் சிக்கலை உருவாக்கும். மாகாண அரசுக்கு உரிய அதிகாரம் இந்தியா மாநிலங்களுக்கு வழங்கியது போல வழங்கப்பட்டால்தான் அங்குள்ளத் தமிழர்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடனும் வாழ முடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண முதல்வர்களோ, மாகாண சபைக்கோ உறுதியளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

  8.   ஜெனிவா, ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள ஈழத் தமிழர்கள் இன அழிப்பு குறித்தான நியாயம் தமிழர்களுக்கு தீர்ப்பாணை மூலம் கிடைக்க வேண்டும்.

  9.   தமிழர்களுக்கு அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு அயலக பொறிமுறை கண்கானிப்பில் நடத்தவேண்டும்.

  10. இன அழிப்புக்கான நியாயம் கிடைக்க சர்வதேச சுதந்திரமான நம்பிக்கையான புலனாய்வும், நீதி விசாரணையும் நடத்தவேண்டும்.

  11. வடக்கு கிழக்கு மாநிலம் சைவ மதத்தின் கேந்திரப் பகுதிகளாகும். அங்குள்ளத் தமிழர்கள் வணங்கும் இந்து மத கோவில்கள் படிப்படியாக அழிக்கப்படுகிறது. தமிழர் கலாசாரத்தைப் பாதுகாத்து முறைப்படுத்த வேண்டும். இப்படி அழிக்கப்படும் இந்து மத கோவில்கள் என நீண்ட பட்டியலே உள்ளது. 

  12. இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாகவும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அங்கே இன்றைக்கு உள்ள சூழல் என்னவென்றால் சீனா இலங்கையை தன் கையில் வைத்துக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் தன் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, நாடுகளுக்கு வணிகம் செய்ய இந்து மகா சமுத்திரத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமல்ல ஹம்பன்தொட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது. சீனாவின் போர்கப்பல்களுக்கு இந்து மகா கடலில் என்ன வேலை, கடல் மார்க்கமாக எரிவாயு பாதைகளை அமைக்கவும், எண்ணெய் ஆராய்ச்சி செய்யவும் திரிகோணமலை, கச்சத் தீவுகள் வரை சீனாவின் ஆதிக்கம் எட்டிவிட்டது. அதுமட்டுமல்லாமல் திரும்பவும் டிகோகர்சியா அமெரிக்க ஏவுதளத்தை அமைத்துவிட்டது. ஜப்பான் இலங்கையின் ஆதரவோடு இந்தியப் பெருங்கடல் எண்ணெய் வள ஆய்வை நடத்துகிறது. பிரான்ஸும் இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது.

  இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் அமைதி மண்டலமாக இருந்த இந்தியப் பெருங்கடலை மாற்றியதற்கு காரணமாக இருந்தது இலங்கை தான். இது எதிர்காலத்தில் பாதுகாப்பிற்கான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.

  இந்து மகா சமுத்திரம் குறித்த குறிப்புகள் வருமாறு:

  1.   இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின் தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்திற்கு சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது.

  இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது.

  இப்படியான சிக்கலில், ஏதாவதொரு போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம்; குறிப்பாக குமரி முனையிலிருந்து ராமேஸ்வரம், நாகை வரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும்.

  இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்னை. இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா அமர்விற்கு தள்ளிப்போட்டுள்ளது. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நாவில் கொடுத்ததாகத் தகவல்கள் உள்ளன. சிங்கள தேசம் கைப்பற்ற துடிப்பது குமரிக் கண்டத்தின் இந்தியப் பெருங்கடலின் பெரும் நீர் பரப்பையே.

  2.   இலங்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆடிய ஆட்டங்களுக்கு அளவில்லை. அதை கண்டித்த உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அந்த பிரச்னைகளை கவனித்து வருவதாக கூறியது அதிர்ச்சியைத் தந்தாலும் இந்த விஷயத்தில் இந்தியா கமுக்கமாகவே உள்ளது.

  ஏற்கனவே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்து மகா சமுத்திரத்தில் தனது ஆளுமையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க வேண்டி முறையிட்டுள்ளது. வழக்கமாக சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுமையானது 200 மைல் தொலைவுக்கு தான் இயங்க முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இந்த நிலை எதற்கு என்றால் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையை பகடைக் காயாக பயன்படுத்துகிறது.

  3.   அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

  4.   ஒரு பக்கத்தில் சீசல்ஸின் டீகோகார்சியா பிரிட்டன் மூலமாக குத்தகைக்கு எடுத்து அமெரிக்க ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்ஸும், ரஷியாவும் இந்த கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பெயருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும், சீனாவும் வியாபாரத்திற்காகவும், தனது போர் கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்தவும் மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. கச்சத் தீவு வரை சீனாவின் தேசியக் கொடிகள் பறந்தன. தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்து கொள்கிறது.

  5.   இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

  6.   அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

  7.   நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்திற்குபின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான  நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்படுகின்றது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம். எனவே இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மை காக்கக் கூடிய நிலையில் அயல்நாட்டுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.

  8.   பண்டித நேரு தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென்மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்னை ஏற்படும் என்று எண்ணினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா சமுத்திரத்தால் இந்தியாவிற்கு கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் கண்ணில்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும், அவசியமான பணியாகும். டீகோகார்சியா தீவில் பிரிட்டன், அமெரிக்காவும் ராணுவத் தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா, சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் ராணுவத் தளங்கள் அமைக்க முடியவில்லை.

  9.   அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீசியஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்கு மொரீசியஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம், சமீபத்தில் காலாவதியானது.

  எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீசியஸ் அரசு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இதனால் அரபிக் கடலிலும், வங்கக் கடலிலும் பாதுகாப்பற்ற, மோசமான புவி அரசியல் நிலை ஏற்படும். இந்தியப் பெருங்கடல் பிரச்னையில் இயற்கை துறைமுகமான திரிகோணமலை துறைமுக சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும்.

  10. திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுக்த்தில் இடம்பெறத் துடிக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்க, இந்த துறைமுகத்தை கைப்பற்ற கழுகுப்  பார்வையில் இருந்தது. ஜப்பானும் இந்த துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. இதற்கான நிலஅமைப்பை கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நிலஅமைப்பு ரீதியாக கவனித்தும் வருகிறது. இந்த துறைமுகத்துடன் இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.

  11. இத்தோடு இலங்கையில் உள்ள ஹம்பன்தொட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டியுள்ளது. தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுக 85% பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகள் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது. ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு ஹம்பான்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (6,500 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது. ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டு கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது.

  12. “HSBC World in Forecast 2050” நடத்திய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price Water House Coopers (PWC) அறிக்கையில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. உலகமயமாக்கல் என்ற நிலையில் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும் பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம்.

  13. அமெரிக்காவும், இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றி இந்தியப் பெருங்கடலை அதோடு 2018இல் இணைத்து இந்தியாவை தன் வலைக்குள் போட்டுக்கொண்டது. இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிக போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்த கடலில் போட்டிகள் உள்ளன.

  14. தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை என யாருடனும் சுமூகமான நட்புறவு இல்லை. இத்தகைய நிலையில் மாலத்தீவில் மட்டும் சுமூகமான உறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம்.இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய?

  வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும் என்று நினைக்கும் நாம் நம் நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?

  இதை எல்லாம் இந்திய அரசு கவனத்தில் கொண்டு இலங்கையில் பேசவும் மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்களின் உரிமை, இந்தியாவின் பாதுகாப்பை, இந்து மகா கடலில் இந்தியாவின் உரிமையை நிலை நாட்டவேண்டும். வெறும் பயணங்கள், பேச்சுவார்த்தை சம்பிரதாயங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடப்பதில் எந்தப் பயனும் இல்லை.

  கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் பிரச்னை 1:

  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பி நான்கு நாட்கள் தான் ஆகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்புக்கு பின், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சந்தித்தப்போது கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப்படுவதை தெளிவில்லாமல் குழப்பமான பதிலைச் சொல்லியுள்ளார். இதற்கு காரணம் சீனா.

  கடந்த 10 வருடங்களாக கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. இப்பொழுது அதிபர் கோத்தபயவின் நிலைப்பாடு சந்தேகமாக உள்ளது.

  இந்த கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை அடைய சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளும் போட்டியில் நிற்கின்றனர். இந்தியாவிடமிருந்து நிதி உதவியும் பெற்றுக்கொண்டு, இலங்கையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டும் நம்மை எளிதாக இலங்கை நினைப்பது வேதனையான விஷயம்.

  இந்தியாவைக் காட்டி சீனாவிடம் பணம் மட்டுமல்ல, பல உதவிகளையும் இலங்கை பெறுகின்றது. உளப்பூர்வமாக சீனாவிடம் நட்பு கொண்டு நம்மை ஏமாற்றுகின்றது. இதுதான் இலங்கையின் நிலைப்பாடு. இதை இந்திய அரசு உணரவேண்டும்.

  கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் பிரச்னை 2:

  இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் கப்பல் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் லாப வருமானம் பெறுகிறது.

  பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான்.

  பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது.

  இந்நிலையில் தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகை கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றை பின்னர் சிறிய இந்திய கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு செல்கின்றன.

  இதுதான் பல ஆண்டுளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்பு துறைமுகமே இயங்கிறது. கொழும்பு துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், ஹம்பந்தோட்டை, திருகோணமலை) செயல்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

  இந்நிலையில் இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஒரு ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு இந்தியா நேரு காலத்திலிருந்து விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறது.

  இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால “இலவு காத்த கிளி இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை” ஆகி விட்டது.

  புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா, இலங்கையை சந்தோஷப்படுத்தும் ஒரே காரணத்துக்காக இணங்கியது.

  இது இலங்கை வாழ் மலையக தமிழருக்கு இந்திய அரசு செய்த பெரும் வரலாற்று துரோகமாகும். இதனால், இலங்கையில் தமிழர், மலையக தமிழர் என இரு தமிழ் பிரிவினிரின் அரசியல் பலம் குன்றியது. அதை தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.

  விஷயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.      

  இப்போதும், இந்தியாவின் “இலங்கை கொள்கை” காரணமாக, ஒரு பிராந்திய துறைமுகமாக, இந்திய பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்பு துறைமுகம், இந்திய துறைமுகங்களை விட சிறப்பாக செயல்படுகிறது.

  இந்நிலையில் இப்படி பொருளாதரத்தில் பலமடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், “பிராந்திய களஞ்சிய துறைமுகம்” என்பதை விட, கொழும்பை “உலக களஞ்சிய துறைமுகமாக” மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்க திட்டம் போடுகிறார்கள். இதுகுறித்து, இந்திய அரசுக்கு இப்பவும் புரிதல் இல்லை.

  இலங்கையை தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிக கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும், இலங்கை-சீனா கூட்டு கனவு திட்டம் இதுவாகும்.

  அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவை புறக்கணித்து விட்டு, இந்த கனவு திட்டத்திற்காக சீனா ஆதரவுடன் கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். (இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.)     

  இதற்காக, கொழும்பு துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான South Asian Gateway Terminal (எஸ்ஏஜிடி) என்பதை முழுமையாக சீனாவுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்கு கீழ் கட்டுகிறார்கள். எதிர்காலத்தில் எஸ்ஏஜிடி முனையத்தில் இருந்து துறைமுக நகருக்கு கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட எதிர்காலத்தில் அவசியமானால் ஏற்படலாம்.

  எஸ்ஏஜிடி முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51%, ஜப்பான் நிறுவனத்துக்கு 29%, இந்திய நிறுவனத்துக்கு 20% என்ற கிழக்கு முனைய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்கின்றன.

  முதல் எஸ்ஏஜிடி முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கபட்ட போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது "இந்தியாவுக்கு  கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுகிறது" என கூச்சல் எழுப்புகிறார்கள்.

  ஆகவே இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்புதான்  தெரியுது. இந்நிலையில், இன்று இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கிறது.

  இதனை பத்தாண்டுகளாக கொழும்பு துறைமுகத்துக்கு லாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய தென் கோடி எல்லைக்கு அருகே, கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவது இந்தியாவிற்க்கு நல்லது அல்ல.

  தமிழகத்தின் தென்கோடியில் குளச்சலில் புது துறைமுகம் ஒன்றை கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கிறது. மேலும் கேரளத்திலும், அந்தமானிலும் புது துறைமுகங்கள் கட்டவும் முனைகிறது.

  இவை உருவாகிவிட்டால் இந்திய கப்பல் -கொள்கலன்கள் கொழும்பு வர தேவையில்லை. இது இலங்கைக்கு பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தும்.

  அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய  பெரிய கப்பல்களையும் இந்த இந்திய துறைமுகம் இறக்கி வைத்து, அவ்வந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையே விரும்பும்.     

  தூரத்து உறவுகாரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனை பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான நடக்கிறது.

  இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-லிருந்து நேரு காலம் முதல் இன்று வரை நாம் இப்பிரச்னையில் இலங்கைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

  நம்மிடமிருந்து வளங்களை, பல திட்டங்களை, நிதி என பெற்றுக்கொண்டு இலங்கை நம்மை ஏமாளியாக நினைக்கிறது.

  இந்தியா எப்போது இதை உணரும்..?

  கட்டுரையாளர்: வழக்கறிஞர், அரசியல் செயற்பாட்டாளர்

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  BOOK_FAIR
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp