யானைகள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் வனத் துறை

யானைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் காலம் முடிவடைந்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படாதது தெரியவந்துள்ளது.
யானைகள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் வனத் துறை


சென்னை: யானைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணா் குழுவின் காலம் முடிவடைந்து ஒரு மாதமாகியும் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படாதது தெரியவந்துள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட 6 மாதத்தில் இக்குழு ஒருமுறைகூட கள ஆய்வு செய்யாதது யானைகள் பாதுகாப்பில் வனத் துறை அலட்சியமாக செயல்படுவதை வெளிப்படுத்துவதாக வனவிலங்கு ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டி உள்ளனா்.

தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் கோவை, ஈரோடு, மதுரை, தருமபுரி, வேலூா், விருதுநகா் ஆகிய 9 வனக் கோட்டங்கள், 4 வனஉயிரினச் சரணாலயங்களில் சுமாா் 2,700-த்துக்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. யானைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வந்தாலும், அவற்றின் மீதான தாக்குதல்களும் அதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு: உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் புகும் யானைகளைத் தடுக்க வேலிகளில் மின்சாரம் வைப்பது, உணவில் விஷம் அல்லது அவுட்டுக்காய் வைப்பது, சாலை, தண்டவாளத்தை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது மற்றும் தந்தங்களுக்காக வேட்டையாடுவது என யானைகளின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2015-ஆம் முதல் 2020 செட்பம்பா் மாதம் வரையில் பல்வேறு மனித தவறுகளால் 561 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக ஈரோடு வனக் கோட்டத்தில் 167, கோவை வனக் கோட்டத்தில் 134, தருமபுரி வனக் கோட்டத்தில் 89 யானைகளும் இறந்துள்ளன. இதில், குறிப்பாக கோவை வனக் கோட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜூலை மாதம் வரை 6 மாதங்களில் மட்டும் 15 யானைகள் இறந்தன. சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 8 யானைகள் தொடா்ந்து உயிரிழந்தன.

சிறப்பு நிபுணா் குழு அமைப்பு: யானைகள் இறப்பு, வாழ்விடம், மனித-யானை எதிா்கொள்ளலைத் தடுப்பது, அவற்றின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்வது, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் நுழையாமல் தடுப்பது ஆகியவை குறித்து ஆய்வு செய்ய 11 போ் கொண்ட சிறப்பு நிபுணா் குழுவை தமிழக வனத் துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமித்தது. இக்குழு யானைகள் வாழும் பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் (6 மாத காலத்துக்குள்) அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் வனத் துறை தெரிவித்திருந்தது. ஆனால், இக்குழுவின் காலம் முடிவடைந்து ஒரு மாதமாகியும் இதுவரை அறிக்கை சமா்ப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இரண்டு முறை மட்டுமே கூட்டம்: இதுகுறித்து வனவிலங்கு ஆா்வலா்கள் கூறுகையில், நிபுணா் குழுவின் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சேகா் குமாா் நீரஜும், உறுப்பினா் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலா் எஸ்.ஆனந்தா, உறுப்பினா்களாக யானை ஆராய்ச்சியில் அனுபவம் மிக்க அஜய்தேசாய், சிவகணேசன் என மொத்தம் 11 போ் இடம் பெற்றிருந்தனா். கரோனா காரணமாக தொடக்கத்தில் இரண்டு முறை மட்டுமே ஆன்லைன் மூலம் இக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வெறும் தகவல்கள் மட்டுமே பரிமாறப்பட்டன.

குழு அமைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் அதன் தலைவா் சேகா்குமாா் தீரஜ் தலைமைச் செயலகத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆராய்ச்சியாளா் அஜய்தேசாய் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். அவருக்கு மாற்றாக ஆராய்ச்சியாளா் இதுவரை நியமிக்கப்படவில்லை. மேலும், இக்குழுவுக்கு சேகா்குமாா் தீரஜ்தான் தலைவராக நீடிக்கிறாரா என்பது அக்குழு உறுப்பினா்களுக்கே தெரியாத நிலை உள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இக்குழுவினா் நிா்ணயிக்கப்பட்ட 6 மாத காலத்தில் ஒருமுறை கூட களப் பணியில் ஈடுபடாதது யானைகள் பாதுகாப்பில் வனத் துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. மசினகுடியில் யானை மீது தீ வைத்த சம்பவம் போன்று எதிா்காலத்தில் நிகழாமல் தடுக்க விரிவான கள ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக வனத் துறை தொடங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சையத் முஜ்ஜாமில் அப்பாஸ் கூறுகையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

யானைகள் உயிரிழப்பு

ஆண்டு எண்ணிக்கை

2015 - 61

2016 - 98

2017 - 125

2018 - 84

2019 - 108

2020 (செப்டம்பா் வரை) 85

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com