அறிவியல் ஆயிரம்: மரபியல் கோட்பாட்டின் பிதாமகன் கிரிகோர் மெண்டல்

மெண்டல் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறும் இந்த ஆண்டில் அவரின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உலகத்துக்கான பங்களிப்பை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம். 
கிரிகோர் மெண்டல்
கிரிகோர் மெண்டல்

1980களில் விலங்கியல் பிரிவு மாணவராக திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தபோது மரபியல் கோட்பாடு குறித்தும், பரிணாமக் கோட்பாட்டில் மரபியலின் தாக்கம் குறித்தும் ஒரு சேர அறிந்து அதையே எனது உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியாகத் தேர்வு செய்வதென தீர்மானித்தேன்.

மரபியல் ஆய்வுகள் இந்தியாவில் பெரிதும் வளர்ச்சி அடைந்திடாத காலம் அது. இலங்கைத் தமிழருக்கான போராட்டங்கள், உள் நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கான கிளர்ச்சிகள், ராமச்சந்திரா உள்ளிட்ட தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லுரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான பெரும் மாணவர் எழுச்சி என அவற்றில் தீவிர பங்காற்றி வந்த நேரம். சமூக அவலங்களைப் போக்க போராட்டங்களோடு கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்னும் இடதுசாரி தலைவர்களின் வழிகாட்டலுக்கிணங்க, கல்வியையும் சமூகப் பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திய நேரம்.

வளரும் நாடுகளின் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வியளிப்பதை அந்நாளைய சோஷலிச அரசுகள் தங்களுடைய சர்வதேச ஒருமைப்பாட்டுத் திட்டமாகச் செயல்படுத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புக்கள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உயர் கல்விக்கு அந்நாட்டு அரசுகளின் ஊக்கத் தொகையோடு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில் கிடைத்த அரிதினும் அரிதான வாய்ப்பாக செக்கொஸ்லோவக்யா (தற்போதைய செக்) குடியரசிற்கு ஆராய்ச்சி மாணவராக சென்றேன்.

மரபியல் மீது ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியாளராகச் சென்ற எனக்கு மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிகோர் ஜோனஸ் மெண்டல் ஆய்வு செய்த அதே ஆய்வகத்தில் மூலக்கூறு மரபியல் துறையில் ஆய்வினை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

மெண்டல் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவு பெறும் இந்த ஆண்டில் அவரது பிறந்த நாளில் அவரின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உலகத்துக்கான பங்களிப்பை அனைவரிடமும் பகிர்வதே எம் போன்ற மரபியலாளர் கடமை. 

உயிரினங்களின் மரபுவழி பற்றிய அடிப்படை தத்துவங்களைக் கண்டறிந்தவர் அவர். அப்போதைய ஆஸ்திரிய பேரரசிலும், தற்போதைய செக் குடியரசிலும் உள்ள மொராவா பிரதேசத்தின் அழகிய தொழில் நகரான பிர்னோவில் உள்ள ஒரு மடாலயத்தில் முதலில் உதவியாளராகவும் பின்னர் அதன் தலைமை குருவாகவும் இருந்துகொண்டே, அங்குள்ள தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில் பொழுதுபோக்காக ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1850ல் ஆசிரியப் பணிக்கான தேர்வில் உயிரியல் மற்றும் புவியியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற இவர், 1851 முதல் 1853 வரை வியன்னா பல்கலைக் கழகத்தில் கணிதமும் அறிவியலும் பயின்று, 1854 முதல், 1868 வரை பிர்னோவில் இருந்த ஒரு பள்ளியில் இயற்கை அறிவியல் பாடத்தின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியப் பணியில் இருந்து கொண்டே 1856 முதல் தாவர இனப்பெருக்கம் குறித்த ஆய்வினை மேற்கொண்டு 1865-ஆம் ஆண்டில், இன்றைய உயிரி தொழில்நுட்பத்தின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ள மரபியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தார். பிர்னோ அறிவியல் கழகத்தில் ”நிலைய வெளியீடுகள்” என்னும் இதழில் 1866-இல் தன்னுடைய முதல் கட்டுரையை “தாவரக் கலப்பினங்கள் குறித்த பரிசோதனைகள்” என்னும் தலைப்பில் வெளியிட்டார். மூன்றாண்டுகள் கழித்து பெரிதும் அங்கீகாரம் இல்லாத அதே ”நிலைய இதழில்” தனது இரண்டாவது கட்டுரையை வெளியிட்டார். அதனை அப்போது மரபியலில் சிறந்து விளங்கிய அறிஞர் கார்ல் நாகெலி என்பவருக்கு அனுப்பி வைத்தார். மெண்டல் கட்டுரையின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அதனை அலட்சியப்படுத்தி, ஒரு விமர்சனக் கடிதத்தை நாகெலி மெண்டலுக்கு அனுப்பினார். எளிதில் விடைகளைப் பெற்றிட இயலாத வேறு சில தாவரங்களில் அவரது ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவற்றில் மெண்டலின் காலம் வீணானது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் மெண்டலின் ஆரய்ச்சிகள் புறக்கணிக்கப்பட்டதாக இருந்தது.

கிரிகோர் மெண்டலின் ஆராய்ச்சி:

1856-இல் பல வகையான பட்டாணிச் செடிகளில் இனக்கலப்பு செய்து மெண்டல் தனது ஆராய்ச்சியை தொடங்கினார். அதன் பாரம்பரியப் பண்புகளைக் கண்டறிந்து அதனடிப்படையில் மனிதனின் பாரம்பரியப் பண்பியல்புகளை விளக்குவதே அவரது நோக்கம். அவர் 34 வகையான வித்தியாசமான பட்டாணிச் செடிகளை இரண்டாண்டுகள் ஆய்வு செய்து அவற்றில் தூய்மையான பண்புகளைக் கொண்ட 22 பட்டாணிச் செடிகளை ஆராய்ச்சிக்கு உகந்தவைகளாக தேர்வு செய்தார்.

தோட்டத்தின் தனி இடத்தில் பாதுகாப்பான முறையில் அவைகளை வளர்த்தெடுத்து நுணுக்கமாக ஆய்வு செய்தார்.

அந்தப் பட்டாணிச் செடிகளில் சில உயரமானதாகவும், சில குள்ளமானதாகவும் இருந்தன. அச்செடிகளில் பூத்திருந்த செடிகளின் நிறங்கள், அவை செடிகளில் பூத்திருந்த இடங்கள், காய்த்திருந்த விதைகளின் வடிவங்கள், விதைகளின் நிறங்கள் முதலியவை குறித்தும் நுணுக்கமாகக் கண்டறிந்தார். அவைகளில் 7 விதமான இணைப் (ஜோடி) பண்புகளை தம்முடைய பரிசோதனைக்குத் தேர்வு செய்தார். அவை:

உருண்டு திறண்ட அல்லது சுருங்கி மெலிந்த விதைகள்,

மஞ்சள் அல்லது பச்சை விதையிலைகள்,

வெள்ளை அல்லது மங்களான நிறம் கொண்ட விதைகள்,

உப்பியோ அல்லது சுருங்கியோ இருந்த விதையுறைகள்,

பச்சை அல்லது மஞ்சள் நிறத்திலான முதிராத விதையுறைகள்,

பூக்கள் இலைக் கக்கத்தில் அல்லது உச்சியில் பூத்தல்,

குள்ளமான தண்டை விட 5 மடங்கு உயரமான தண்டுடைய செடி

இந்த 7 பண்புகளை அடிப்படையாகக் கொண்டே அவரது ஆராய்ச்சி இருந்தது. அவர் தம்முடைய தோட்டத்தில் பாதுகாப்பாகப் பயிரிடப்பட்ட பட்டாணிச் செடிகளை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். வெளியில் வளரும் பட்டாணிச் செடிகளிலுள்ள மகரந்தத் துகள்கள், பூச்சிகள் மூலமாகத் தனது ஆய்வுச் செடிகள் மீது விழுந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கச் செய்தார்.

உயரமாக உள்ள செடி வகைகள் தலைமுறை தலைமுறையாய் உயரமான செடிகளை பிறப்பிக்கிறதென்றால், உயரமான பண்பைப் பொருத்தவரை அது தூய்மையானது. அதேபோல ஒரு குள்ளமான செடி வகை தலைமுறை தலைமுறையாய் குள்ளமான செடிகளைப் பிறப்பிக்கிறதென்றால், குள்ளமாய் இருக்கும் பண்பைப் பொருத்தவரை அது தூய்மையானதாகும். இதுவே மெண்டல் மேற்கொண்ட ஆராய்ச்சி அணுகுமுறை.

அடுத்ததாக அந்த பட்டாணிச் செடிகள் தமக்குத் தாமே மகரந்தச் சேர்க்கையுறாமல் தடுத்தார். அவற்றில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுமாறு செய்தார். அப்படிச் செய்தபோது ஒவ்வொரு செடியின் மூலச் செடிகள் தூய்மையானதாக இருந்தாலும், வேற்றுமைப் பண்புகளைக் கொண்டவைகளாக இருக்குமாறு பார்த்து அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படச் செய்தார்.

உதாரணமாக உயரமான செடியையும், குள்ளமான செடியையும் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தினார். இவ்வகையில் நூற்றுக்கணக்கான செடிகளை வளர்த்தார். அப்போது அந்த அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பிறந்த குழந்தைகள், அதாவது செடிகள் எல்லாமே உயரமாக இருந்ததைக் கண்டு வியப்புக்குள்ளானார். இதனை “முதல் தலைமுறை செடிகள்” என்று அழைத்தார்.

பின்னர் அவற்றை அந்தச் செடிகளிலேயே இணை சேர்த்து நன்கு பயரிட்டு வளர்த்தார். அவ்வாறு வளர்த்தபோது 4-இல் மூன்று பங்கு செடிகள் உயரமானதாகவும், ஒரு பங்கு குள்ளமாகவும் வளர்ந்தது. அதாவது உயரமான செடியும், குள்ளமான செடியும் 3க்கு 1 என்ற விகிதத்தில் இருந்தது. இதனை ”இரண்டாம் தலைமுறை” செடிகள் என்றார்.

இதன் மூலம் தூய குள்ளமான செடிகளும் சந்ததிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கிற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் அந்தப் பண்பு முதல் தலைமுறையில் அடங்கியிருந்து (மறைந்திருந்து) இரண்டாம் தலைமுறையில் வெளிபடுத்தப்படுகிறது. அதாவது மனிதனை வைத்துச் சொல்வதானால், ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறையில் பிறக்கும் குழந்தை தந்தையைப்போல் இல்லாமல் ஏறத்தாழ தாத்தாவைப் போல் இருக்கிறது.

உயரமானப் பண்பு வெளிப்படுவதையும், குள்ளமான பண்பு அடங்கி இருப்பதையும் கொண்டு, உயரமாக வளரும் பண்பை “ஆதிக்க விதி” என்று குறிப்பிடுகிறார். மெண்டல் பட்டாணிச் செடிகளை மட்டுமல்லாமல் வேறு சில செடிகளிலும் ஆய்வு செய்து தனது முடிவை உறுதிப்படுத்தினார்.

பிர்னோவில் தற்போதைய மெண்டல் சதுக்கம் அருகிலுள்ள தேவாலயத்தில் மடாலயத் தலைவராகப் பொறுப்பில் இருந்த மெண்டல் போதிய அவகாசம் கிடைக்காமலும், உகந்த ஊக்குவிப்புக்கள் இல்லாமலும் தனது ஆரய்ச்சியைத் தொடர வாய்ப்புக்கள் இல்லாதிருந்தார். அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக அவர் நடத்திய நிர்வாக ரீதியிலானப் போராட்டம் மற்றும் ஆட்சியாளர்களின் தொடர் நெருக்கடி காரணமாக அவர் உடல் நிலை மிகவும் மோசமானது. 1884-ஆம் ஆண்டில் அவர் காலமானபோது, அவரது ஆராய்ச்சி அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது. அவரது கண்டுபிடிப்புக்களுக்கான பாராட்டையோ அங்கீகாரத்தையோ அவர் பெறவில்லை.

மெண்டலின் ஆய்வுகள் உலகறிந்த விதம்

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் நாடுகளில் தொடர்பே இல்லாமல் உயிரியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டச்சு நாட்டைச் சேர்ந்த ஹியுகோ டி விரிஸ், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்ல் கோரன்ஸ், ஆஸ்திரியாவைச் சேர்ந்த எரிக் வான் ஷெர்மாக் ஆகியோர் கிரிகோர் மெண்டலின் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்திருக்கிறது. அவர்களின் ஆய்வுகள், கிரிகோர் மெண்டலின் மூலக் கட்டுரையில் இருந்த கண்டுபிடிப்புக்களை உறுதிப்படுத்துவதாக இருந்துள்ளன. இந்த மூவரின் ஆய்வுகளும் ஒரே தருணத்தில் தனித் தனியே நிகழ்ந்ததும், அது மெண்டலின் மரபியல் கோட்பாட்டுடன் ஒத்து இருந்ததும் வியப்புக்கு உரியதாக இருந்தது. அதேகாலத்தில் வில்லியம் பேட்டிசன் என்னும் ஆங்கிலேய அறிஞர் மெண்டலின் மூலக் கட்டுரையை மற்ற ஆய்வாளர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.

கிரிகோர் மெண்டல் ஆய்வின் முக்கியத்துவம்

வாழும் உயிரினங்கள் அனைத்திலும் வழிவழியாக மரபுப் பண்புகள் தொடரும் என்றும், அதுதான் மரபுப் பண்புகளின் கூறுகள் என்றும் மெண்டல் தனது ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் மரபு வழி பண்பியல்புகள் பெற்றோரிடம் இருந்து சந்ததிகளுக்கு வந்தவையே என்றார்.

மெண்டல் ஆய்வு செய்த பட்டாணிச் செடிகளில் விதையின் நிறம், அதன் வடிவமைப்புப் போன்ற தனி பண்பியல்புகள் ஒவ்வொன்றும், ஒரு இணை (ஜோடி) மரபுக் கூறுகளின் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒரு தனி தாவரம், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூற்றினைப் பெற்றோர் ஒவ்வொருவரிடம் இருந்தும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட பண்புத் திறத்திற்காக மரபு வழியாகப் பெற்ற இரண்டு மரபுப் பண்பு கூறுகளும், வெவ்வேறாக இருக்குமானால், அப்போது பொதுவாக மேம்பட்டு நிற்கும் மரபுப் பண்புக் கூறின் செயல் விளைவு மட்டுமே அந்தத் தனித் தாவரத்தில் வெளிப்படையாகப் புலப்படும். ஆயினும் அடங்கியிருக்கும் அல்லது மறைந்திருக்கும் மரபுப் பண்புக் கூறு அழிந்து விடுவதில்லை. அந்தத் தாவரத்தின் சந்ததிகளுக்கு அந்தப் பண்புக் கூறு சென்றடைகிறது.

இனப்பெருக்க உயிரணு அல்லது பாலணு, மனிதர்களிடமுள்ள நேரிணையான விந்து அல்லது கரு உயிரணுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூறினை மட்டுமே கொண்டிருந்தது என்பதை மெண்டல் கண்டறிந்தார்.

ஒரு தனி பாலணுவில், ஒவ்வொரு இணையின் எந்த மரபுப் பண்புக் கூறும் காணப்படுவதும், அது ஒரு தனி சந்ததிக்கு சென்றடைவதும் முற்றிலும் தற்செயல் நிகழ்வே என்றும் மெண்டல் விளக்கினார். படைப்புக் கோட்பாட்டின் கூறுகளை அசைத்த முக்கியமான கண்டறிதல் இது.

மெண்டலின் கோட்பாடுகள் மரபு வழி பண்பியல்புகள் பற்றிய தற்கால அறிவியலுக்குத் தொடக்கமாக அமைந்தது. அவர் தனது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்த முக்கிய பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் ஒரு தனி தொகுதி மூலமாகத் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்தது. ஆனால் அவர் ஆராய்ச்சி செய்த பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் பல தொகுதிகளால் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்திருந்தால், அவரது ஆய்வு கடினமான ஒன்றாகவே இருந்திருக்கும்.

மெண்டல் மிகுந்த பொறுமையும், நுணுக்கமும், ஆழ்ந்த கவனமும் மிக்க ஆராய்ச்சியாளராக இல்லாது இருந்திருந்தாலோ அல்லது புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் செய்வதை உணராது இருந்திருந்தாலோ அவரது முயற்சிகள் முழு வெற்றி கண்டிருக்கவோ, நினைவு கூறப்படவோ இயலாத ஒன்றாகியிருக்கும். அவர் 21,000-க்கும் மேற்பட்ட தனித் தாவரங்களை ஆய்வு செய்து, முடிவுகளைப் புள்ளியியல் பகுப்பாய்வு செய்ததன் மூலம் அவர் மரபியல் கோட்பாடுகளை வகுத்தளித்தார்.

மற்ற பல அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைப் போலவே, மெண்டலின் கண்டுபிடிப்புகளும் அவரது வாழ்நாளின்போது அடியோடு புறக்கணிக்கப்பட்டன. அவரது கோட்பாடுகளைப் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் தனித்தனியே கண்டறிந்து விளக்கியபோது அவரது கண்டுபிடிப்புகளின் உண்மைகளைக் குறிப்பிட்டு விளக்கினர். மரபுவழி பண்பியல்புகள் குறித்த அவரது கண்டுபிடிப்புகள் பலராலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது மரபுவழிக் கோட்பாடுகள் மனிதகுல கருவூலத்திற்குக் கிடைத்த பொக்கிஷம். அவரது கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளின் ஆராய்ச்சியை துரிதப்படுத்த உதவி வருகிறது.  

சுயமரியாதை, தற்சார்பு, எளியோருக்கு உதவிடும் பாங்கு, எடுத்துக் கொண்ட முயற்சியில் உறுதி முதலியவற்றால் ஆட்சியாளர்கள் மற்றும் ஏனைய மடாலயங்களின் தலைவர்களின் நெருக்கடிக்குள்ளானதும், அன்றைய முன்னணி மரபியலாளர் அவரது ஆய்வுகளை உதாசீனப்படுத்தியதும், மதிப்பு மிக்க அவரது ஆய்வு முடிவுகள் வெளி உலகுக்கு தெரியாமல் உள் நிறுவன இதழ்களில் மட்டுமே வெளியானதும் அவரது ஆய்வுகளின் பயன் அனைவருக்கும் கிடைக்க காலதாமதமானது. இருப்பினும் அவரது கண்டுபிடிப்புகள் பலரது ஆய்விற்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. வாழும் காலத்தில் அனைவராலும் அறியப்படாமல் இருந்த கிரிகோர் மெண்டல் மறைவுக்குப் பிறகு அவரது உன்னத கோட்பாடுகளால் பிறவியெடுத்து, மரபியல் தந்தையாக மலர்ந்தார் என்பது வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகும்.

கரோனா வைரஸ் தொற்று, உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் உலக அறிவியலாளர் மிக விரைவாக தடுப்புசிகளைக் கண்டறிந்து சாதனை நிகழ்த்த இத்தகைய அறிஞர்களின் உழைப்பும், ஆய்வுகளும் காரணமாக இருந்தன. இன்றும் முன்னாளைய சோசலிஷ நாடுகளும், வளர்ந்த நாடுகளும் கரோனாவுக்கு எதிரான ஆராய்ச்சியை, ஓய்வின்றி செய்து சாதனை நிகழ்த்தி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் எண்ணற்ற அறிஞர்களை அவர்களின் ஆராய்ச்சியை தொய்வின்றி தொடற உதவிகளும் ஊக்கமும் இன்னும் போதுமானதாக இல்லை என்பதே நாம் காணும் உண்மை.

சமூகத்தின் தேவைகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்கமளிக்க வேண்டிய அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை விருதுகளைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை செய்யுமாறு தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்து இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க அறிவியல்பூர்வ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பதிலாக தனக்குகந்த நம்பிக்கையை வளர்தெடுப்பதற்கான செயல்முறைகளைப் பின்பற்ற வைப்பதன் மூலம் ஒரு நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மிகுந்த பின்னடைவையே சந்திக்கும். அடுத்த தலைமுறையையும் உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கச் செய்யும்.

இன்றைய தலைமுறை மெண்டலிடம் காணப்பட்ட விடா முயற்சியையும், ஆய்வு மனப்பான்மையையும், கற்கும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், பொறுமையையும், கூர்ந்து நோக்கும் தன்மையையும், அறிந்தவற்றை பதிவு செய்து பராமரித்தலையும் உள்வாங்கி, மனிதகுலத்திற்கு பயன்தரத்தக்க ஆய்வுகளை மேற்கொள்வதே அவரின் வாழ்வு நமக்கு விட்டுச் சென்றுள்ள செய்தி.

[20.07.2021 -கிரிகோர் மெண்டலின் 200-ஆவது பிறந்த நாள்]

(கட்டுரையாளர்-குந்தவை நாச்சியார் அரசு மகளிர் 
கலைக் கல்லூரி, தஞ்சாவூர்
மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com