கூவம் ஆற்றங்கரையோரம் பாரபட்சம் ஏன்? குடிசைகளுக்கு எதிரான அரசியல்!

சென்னை அரும்பாக்கம் அருகே ராதாகிருஷ்ணன் நகரில் குடியிருந்த மக்கள், கடந்த 29-ம் தேதி நகர வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கூவம் கரையோரம் பாரபட்சம் ஏன்?: குடிசைகளுக்கு எதிரான அரசியல்!
கூவம் கரையோரம் பாரபட்சம் ஏன்?: குடிசைகளுக்கு எதிரான அரசியல்!

பறந்து திரிந்து களைத்த பிறகு ஓய்வெடுக்கப் பறவைகளுக்கும் ஒரு கூடு  தேவைப்படுகிறது. தன் இரைக்கும் வசதிக்கும் ஏற்ற இடத்திலேயே அதனை  அவை அமைத்துக்கொள்கின்றன. மனிதர்களும் அப்படித்தான்.

தனது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் இடத்திற்கு அருகிலேயே தனது  குடியிருப்பை அமைத்துக்கொள்கிறார்கள். அப்படி இல்லையெனில்,  தேவையான வசதிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு தமது ஓய்வுக்கான இடத்தைத் தேர்வுசெய்துகொள்கிறார்கள்.

இவ்வாறு  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை அரும்பாக்கம்  ராதாகிருஷ்ணன் நகரில் குடியிருந்த மக்கள், கடந்த 29-ம் தேதி நகர வளர்ச்சித் திட்டத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் கூவம் ஆற்றின் கரையோரங்களில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்ட மக்கள் அப்புறப்படுத்தப்படுவது, கட்டி வைத்த வீடுகள் இடிக்கப்படுவது இன்று நேற்று அரங்கேறும் கதைகளல்ல. நகரமயமாக்கலின் ஆரம்பம் முதலே இவை நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கலின் ஆரம்ப அழிவுகளாக ஆற்றங்கரையோர குடிசைகள்  அகற்றத்தைக் கூறலாம். ஆற்றங்கரையோரங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே நகரமயமாக்கல்தான் என்று சிலருக்குத் தோன்றலாம்.

ஆனால், கூவம் ஆற்றின் கரையோரம் குடிசைகளை அமைத்து எந்தவித எதிர்பார்ப்புகளின்றியும், எதிர்காலத் திட்டங்களின்றியும் வாழ்நாள்களை கழித்துக்கொண்டிருக்கும் சாமானிய மக்கள் மீது மட்டுமே அவை வருவதுதான் உறுத்துகிறது.

தற்போதைய நகர்மயமாக்கல் வரலாறு என்பது முற்றிலும் வேறு. புதிய புதிய மக்கள் பொருளாதார அடிப்படையிலான வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்து  தங்களது வசதிகளுக்கு ஏற்ப நகரில் வாழ்விடங்களைக் கட்டமைத்துக்கொள்வது.

சென்னையில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட குடிசைகளைவிட,  சென்னையின் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்தான் ஆபத்தானவை. எண்ணிக்கையில் அதிகமும்கூட. அவை இயற்கைக்கு மாறான வாழ்வை ஏந்தியவை. மனித குலத்திற்கு எப்போதுமே அவை ஆபத்தைத்தான் விளைவிக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் அமைக்கப்பட்ட அத்தனை வலுவான அடித்தளங்களும் இயற்கையின் முன்பு வீழ்ந்து தோல்வியடைந்ததை நகரம் நமக்கு அவ்வபோது காட்டிக்கொண்டுதான் உள்ளது. நகரமயமாக்கலின் நோய் அந்த சமயத்தில் சமூகத்தின் அனைத்துத் தட்டு மக்களையும்தான் பாதிக்கச் செய்கிறது.

இவற்றையெல்லாம் உணராத அரசு - அரசு அதிகாரிகளின் கவனம் எல்லாம் கூவம் ஆற்றங்கரையோரக் குடிசைகள் மீது மட்டுமே குறியாக உள்ளது. சென்னையின் வளர்ச்சிக்கு எதிரானவை அல்ல குடிசைகள். கிராமமாக இருந்த சென்னையைத் தொழில் நகரமாக மாற்றியதில் இந்தக் குடிசைகளின் பங்கு மிகப் பெரியது.

தலைமுறை தலைமுறையாக ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களை  அப்புறப்படுத்துவது சரி என்றால், பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு ஏரி, குளங்கள் மீது கட்டுமானம் எழுப்ப அனுமதிப்பது எந்தவகையில் சரி? இதுவே பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் கேள்வி.

சிங்காரச் சென்னை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பறக்கும் சாலைத் திட்டம் என பலவாறான நகர வளர்ச்சித் திட்டங்களில் பெரும்பாலும் அகற்றப்பட்டவை அனைத்தும் குடிசைகளே. நகரை  உருவாக்கியவர்களே நகரின் வளர்ச்சி என்ற பெயரில் துடைத்தெறியப்படுகிறார்கள்.  

பெரும் இரைச்சலுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் குடிசைகள்  அகற்றப்படும் அதே கூவம் ஆற்றங்கரையோரம் வானுயர்ந்த கட்டடங்களும், வணிக வளாகங்களும் எவ்வித அச்சுறுத்தலுமின்றி இருந்துகொண்டுதான் உள்ளன.

பருவ மழை வெள்ளத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகவே குடிசைகள் அகற்றப்படுகிறதெனில், அதே கூவம் கரையை ஆக்கிரமித்து கல்லூரிகள், பல்கலைக் கழகம், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் போன்றவை குடிசைப் பகுதிகளைவிடப் பெரிய பரப்பளவை விழுங்கியுள்ளனவே, அவற்றை அரசு என்ன செய்யப் போகிறது?

அரசின் இந்த நடவடிக்கைகளில் சென்னையைப் பராமரிக்கும் பணியில் குடிசைகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன. எந்த அரசாக இருந்தாலும் இந்தப் பாரபட்சம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இரண்டு மூன்று தலைமுறைகளாக ஓரிடத்தில் இருந்துவிட்ட மக்கள், வேறு ஒரு இடத்தில் எப்படி தங்களது வாழ்க்கையை எந்தவித இழப்புமின்றி மீண்டும் தொடங்க இயலும்? அதுவும் அன்றாடங்காய்ச்சிகளாகிவிட்ட மக்கள் அதனை  எப்படி எதிர்கொள்வார்கள்?

கல்வி, தொழில் என அனைத்தும் அவர்கள் புழங்கிய இடத்திலிருந்து வேறு ஓர்   இடத்திற்கு மாற்றப்படுவது ஒரு தலைமுறை  வளர்ச்சியின் வேகத்தையே குறைத்துவிடும். அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது புலம்பெயர்தலில் சிக்கலையே ஏற்படுத்தும்.

வாழ்விட ரீதியாக பலதரப்பட்ட மக்களை ஒருங்கமைப்பது கலாசார சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்கிறது உச்ச நீதிமன்றம். 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் குடியிருந்தால் இருப்பிடப் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது அப்போதைய அதிமுக அரசு.

வாழ்வாதாரம் தேடி அலைவதே வாடிக்கையாகிவிட்ட மனிதர்களுக்காக அரசு அவ்வபோது சட்டங்களை இயற்றிக்கொண்டுதான் வருகிறது. ஆனால், அவர்களுக்கான சட்டங்கள் செயல்படுத்தப்படும் வேகத்தைவிட, அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன.

குடிசை அகற்றத்திற்கு மாற்று இடங்களாக அறிவிக்கப்படுபவை பெரும்பாலும் சென்னையிலிருந்து 40 - 60 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு முத்துமாரியம்மன் நகரில் 380 குடிசைகள் அகற்றப்பட்டன.  அவர்களுக்கு படப்பை, நாவலூரில் மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. சிலருக்கு மட்டுமே திருவொற்றியூரில்.

2018-ம் ஆண்டு என்.எஸ்.கே. நகரில் 50-க்கும் அதிகமான குடிசைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்குப் பெரும்பாக்கத்தில் மாற்றுக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

படப்பை, பெரும்பாக்கத்திலிருந்து அன்றாடம் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்ல இயலாது என்பதால் அருகேவுள்ள புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடியில் இடம் ஒதுக்க வைக்கப்பட்ட கோரிக்கை, அரசின் காதுகளுக்கு எட்டவேயில்லை.

சாமானியர்களை ரட்சிக்க வேண்டிய அரசு, நகர வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் லாப நோக்கு அடிப்படையில் வணிக வளாகங்களுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும், உற்பத்தி ஆலைகளுக்கும் தூதுவனாக இருக்க முடியுமா, நகரத்தை உருவாக்கியவர்கள் இவர்கள் என்பது என்றுதான் உணரப்படுமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com