காங்கிரஸை கரையேற்றுவாரா பிரசாந்த் கிஷோர்?

காங்கிரசுக்கு எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸை கரையேற்றுவாரா பிரசாந்த் கிஷோர்?

மத்தியில் தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சியை இழந்ததுடன், பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து நிற்கும் காங்கிரசுக்கு எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசிய அளவில் தேர்தல் வியூகம் அமைப்பதில் பிரசாந்த் கிஷோர் வல்லவராக இருந்து வருகிறார். 2012-இல் 4-ஆவது முறையாக குஜராத் முதல்வராகவும், 2014-இல் பிரதமராகவும் மோடிக்கு வியூகம் வகுத்தார், 2017-இல் உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கும், 2019-இல் ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2020-இல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், 2021-இல் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வியூகம் அமைத்துக் கொடுத்தார். இதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே இவரது வியூகம் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை.

கடந்த ஜூன் 22-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் தில்லி இல்லத்தில் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற பெயரில் தேசிய அளவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சந்தித்தனர். இவர்களது நோக்கம் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்வது. இதற்குப் பின்புலமாகச் செயல்படுபவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். இது மக்களவைத் தேர்தலின்போது காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுக்கக்கூடும் என்ற யூகத்தை எழுப்பியுள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்துள்ள பணி பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சி என்பதுதான். காங்கிரஸ் இன்றி பாஜகவை வீழ்த்துவது கடினம் என்பதை பிரசாந்த் கிஷோர் உணர்ந்து கொண்டதால்தான் ராகுல் காந்தியுடன் இப்போது நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது பாஜக தனித்து 37% வாக்குகளையும், கூட்டணியாக 45% வாக்குகளையும், பெற்றிருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தனித்து 19% வாக்குகளையும் கூட்டணியாக 25% வாக்குகளையும் பெற்றிருந்தது. 20 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது.

தேர்தலுக்குப் பிறகு சிரோமணி அகாலிதளம், சிவசேனை போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறின. அதேபோல பாஜக தனித்து 303 இடங்களையும், காங்கிரஸ் தனித்து 52 இடங்களையும் பெற்றன. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடியாக சுமார் 171 தொகுதிகளில் போட்டி உள்ளது.

பிகாரிலுள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி மிக முக்கியமாக உள்ளது. அங்கு யாதவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்று திரண்டால் மட்டுமே பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு போட்டியை கொடுக்க முடியும்.

மகாராஷ்டிரத்திலுள்ள 48 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மராத்தா, கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை முழுமையாக பெற்றால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலம் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பழங்குடியினர், இஸ்லாமியர் வாக்குகளை மொத்தமாக பெற்றால் மட்டுமே பாஜகவுக்கு போட்டி கொடுக்க முடியும்.

இதுபோன்று 142 தொகுதிகளில் காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. காங்கிரசும் மூன்றாவது அணி கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பாஜகவுக்கு போட்டியைக் கொடுக்க முடியும். 

மூன்றாவது அணி கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ராகுல் காந்தி மூன்றாவது அணி கட்சிகளில் யாராவது ஒருவரை தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்தமுறை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தபோது அடுத்தநாளே அகிலேஷ் யாதவ் மறுத்தார். இந்த முறை ராகுல் காந்தியை, அகிலேஷ் யாதவ் முன்மொழிந்தால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தற்போதைய நிலையில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான் எனும் அந்தஸ்து மட்டும் எஞ்சியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக கை காட்டினால் அதுவும் போய்விடும். 

மேலும், மூன்றாவது கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமையை கொண்டுவருவது கடினம். காரணம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிஸô முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போன்ற தலைவர்கள் காங்கிரஸ்-பாஜக ஆகியவற்றை சம  எதிரியாகவே கருதுவதால் அவர்களை மோடிக்கு எதிராக அணிதிரட்டுவது கொஞ்சம் கடினம்.

அதேபோன்று பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. கேரளத்தில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. மேலும், கேரளத்தைத் தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கினாலும் கூட மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக பினராயி விஜயன் ஒப்புக்கொள்ள மாட்டார். இவ்வாறாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மையும் ஏழு நாள்களுக்கு ஏழு பிரதமர் என கேலி செய்யும் அளவுக்கு செயல் திட்டமும் இருப்பதால் மோடிக்கு போட்டியைக் கொடுப்பது கடினம்.

வடமாநிலங்களில் மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல் ஆகியவற்றை ஒப்பிட்டால் பேரவைத் தேர்தலைவிட மக்களவைத் தேர்தலில் மோடி தலைமைக்கு கூடுதலாக 10 முதல் 15 சதவீத வாக்குகள் கிடைத்து வருவதை காணலாம். குறிப்பாக, 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஹரியாணாவில் மக்களவைத் தேர்தலில் 58 சதவீதமும், பேரவைத் தேர்தலில் 36.5 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 58 சதவீதமும், பேரவைத் தேர்தலில் 41 சதவீதமும், ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் 58.5 சதவீதமும், பேரவைத் தேர்தலில் 38.8 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 49.98 சதவீதமும், பேரவைத் தேர்தலில் 39.6 சதவீதமும், பிகாரில் மக்களவைத் தேர்தலில் 53.2 சதவீதமும், பேரவைத் தேர்தலில் 40.5 சதவீதமும் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. 

காங்கிரசுக்கு வியூகம் வகுக்க காத்திருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு இவையெல்லாம் மிகப் பெரிய சவால்கள் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com