அழியாத தொற்று வரதட்சணை!

திருமணத்திற்கு வரதட்சணை தர மாட்டோம் என்பதை ஓர் இயக்கமாக கேரள பெண்கள் முன்னெடுத்துள்ளது பாராட்டத் தக்கது.
அழியாத தொற்று வரதட்சணை!


பூப்போன்று பெண்களை வளர்த்துக் "குரங்குகளின்" கைகளில் பிடித்துக் கொடுக்கும் விதமான திருமணங்கள் எல்லா காலகட்டங்களிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த பூக்கள் விலைக்கு வாங்கப்படுவதில்லை. மாறாக, விலை கொடுத்து விற்கப்படுகின்றன. சந்தைகளில் கால் மிதிகளில் கசங்கும் பூக்களைப் போன்று இந்த திருமணச் சந்தையிலும் ஏராளமான பூக்கள் கசங்கி வாடுவது வாடிக்கையாகவே உள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வரதட்சணைக்காக நடந்துவரும்  தற்கொலைகள் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஒரு  வாரத்தில் மட்டும் மூன்று இளம்பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தச் செய்தி அந்த மாநிலத்தை மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. இளம் பெண்களை வைத்துள்ள பெற்றோர்கள்  மடியில் நெருப்பைக் கட்டிக் காத்து வருவதாக பொதுவாக சொல்வது உண்டு. 

அதற்காக அவசர அவசரமாக அப்பெண்ணின் முழு விருப்பத்திற்கு அவகாசம்  கொடுக்காமல், திருமணச் சந்தைக்கு கொண்டுவந்து பூக்களோடு பூக்கள் கொட்டுவதைப் போல கொட்டுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், திருமணமான பின்பும் அவர்கள் மடியில் நெருப்பின் கங்குகள்  கனன்றுகொண்டுதானிருக்கின்றன.

பிறகு ஏன் இந்த அவசரத் திருமணங்கள் என்ற கேள்வியை ஒவ்வொரு பெண் வீட்டாரிடையேயும் எழுப்ப வேண்டும் என்றே தோன்றுகிறது. பெண்ணின் திருமணத்தைப் பெண்ணே முடிவு செய்ய எத்தனை வீடுகள் அவகாசம் கொடுக்கின்றன என்று தெரியவில்லை.

ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டிய கால நிர்ணயத்தை எத்தனை காலத்திற்கு கெளரவமாக இந்த குடும்பங்கள் கொண்டாடும் என்று தெரியவில்லை. பெண்களைக் குடும்பத்தின் மதிப்பாக கருதாமல் பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் குடும்பங்கள் இங்கு எத்தனை இருக்கின்றன?

பெண்ணின் திருமணம் குறித்து ஒரு ஆணுக்கே இத்தனை கேள்விகள்  இருக்கும்போது, ஒரு பெண்ணின் மனதில் எத்தனை கேள்விகள் இருக்கின்றனவோ? இதனை எத்தனை பெண்கள் தங்களது வீடுகளில்  திருமணப் பேச்சுகளின்போது வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர் என்று தெரியவில்லை.
 
உண்மையில் சமூகம் கட்டமைத்துள்ள குடும்ப அமைப்புகள் பெண்களின் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பு அளிப்பதே இல்லை  என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால் கேரளத்தில் மருத்துவம் படித்த,  பொருளாதாரம் படித்த பெண்களே திருமண வாழ்வின் கொடுமைகளை வெளிப்படையாக சொல்லி பிரச்னைக்கு மாற்று வழி தேடாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்களா?

நாடு எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவந்தாலும், பெண்கள் எத்தனை படித்திருந்தாலும் அவள் எப்போதும் ஒரு ஆணுக்கு கீழானவளாகவே பார்க்கப்படுகிறாள். நகர்ப்புறங்களில் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன. இருப்பினும் திருமணம் என்று  வரும்போது ஆண்களுக்கு வழங்கப்படும் அதே சுதந்திரத்தோடு பெண்கள் நடத்தப்படுகிறார்களா என்பது  கேள்விக்குறியே. இந்தக் கட்டமைப்பு மாற இன்னும் எத்தனை கல்வியாண்டுகள் ஆகுமோ?

பிறந்த வீட்டில் தந்தைக்குப் பின்னாலும், சிறிது காலத்தில் சகோதரன்களுக்குப்  பின்னாலும் வாழ அனுமதிக்கப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு கணவனுக்குப் பின்னால் வாழ பெண் அனுமதிக்கப்படுகிறாள். திருமணத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாடு  நிலைநாட்டப்பட்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகான கொடுமைகள் இப்படி உடலில் காயங்களாக மறைந்திருக்காது.

ஆண் பிள்ளையையும், பெண் பிள்ளையையும் சமமாகப் பாவித்து வளர்க்கும் பெற்றோர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதே குடும்பத்தில் திருமணம் என்று வரும்போது ஆணுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு சுதந்திரம் பெண்ணுக்கு வழங்கப்படுகிறதா? மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றோ, சிறிது காலம் பணிபுரிந்து தற்சார்பை எட்ட  வேண்டுமென்றோ பெண்கள் வைக்கும் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யும் குடும்பங்கள் இங்கு எத்தனை உள்ளன?
 
வரதட்சணை கொடுத்து பெண்களை மற்றொரு ஆணுடன் வாழ அனுப்பிவைக்கும் வீடுகள் திருமணத்தை வியாபாரமாக்கின. கொடுத்த வரதட்சணை போதவில்லை என்று மனைவியைக் காயப்படுத்தும் கணவன்கள் அந்த வியாபாரத்தில் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். இந்த வியாபாரத்திலும் கொள்ளையிலும் பலியாவது என்னவோ பெரும்பாலும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்.

மைலேஜ் இல்லாத காரை சீதனமாக கொடுத்ததற்காகவும், அதற்காகக்  கூடுதல் பணத்தைக் கேட்டும் 8 மாதங்களாகத் தமது மனைவியைக்  கொடுமைப்படுத்தியுள்ளார் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கிரண் குமார். 100 சவரன் நகை போட்டு, ஒரு ஏக்கர் நிலம் கொடுத்து, காரையும் சீதனமாக கொடுத்தனுப்பிய தனது 22 மகள் விஸ்மயாவைத் தற்போது இழந்து தவிக்கிறது அந்த பெண் வீட்டார் குடும்பம்.

கணவன் ஆணியை வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், தலையை சுவரில் முட்டி காயப்படுத்தியதாகவும் அப்பெண் தனது சகோதரனுக்கு  அனுப்பிய புகைப்படங்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன. பெண்களைப் பெற்றுக் கட்டிக்கொடுத்தவர்களால் மட்டுமே இதன் கொடூரத்தை உணர முடியும்.

திருமண சம்பிரதாயத்தைக் காப்பதற்காகவும், குடும்ப கெளரவத்தைக் காப்பதற்காகவும் 8 மாதங்களாகப் பொறுத்துப் பொறுத்துத் தற்போது தமது  உயிரை நீத்துள்ளார் அந்த அப்பாவி இளம்பெண். வரதட்சணைக் கொடுமையால் கணவனோடு வாழ முடியாது என்று பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களை அரவணைப்பதில் என்ன கெளரவம் கெட்டுப்போகப்போகிறது.  அப்படி செய்திருந்தால் வாழாவிட்டாலும் அவள் உயிரோடு இருந்திருப்பாள்  அல்லவா?

திருவனந்தபுரம் விஷின்ஜத் பகுதியில் அர்ச்சனா என்ற 24 வயது பெண்ணோ   கணவனது வீட்டில் இறந்துகிடந்துள்ளார். கணவன் வீட்டில் கூடுதலாக கேட்ட ரூ. 3 லட்சம் வரதட்சணை அப்பெண்ணின் உயிரைப் பதம்பார்த்துள்ளது.

இதேபோன்று ஆலப்புழையில் கடந்த 23-ம் தேதி சுசித்ரா என்ற 19 வயது இளம்பெண் இறந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

சுசித்ரா
சுசித்ரா

இது குறித்து வரதட்சணைக் கொடுமை என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரதட்சணைக் கொடுமையால் ஆயிஷா என்ற 24 வயது இளம்பெண் கடந்த பிப்ரவரி மாதம் ஆற்றில் குதித்துத்  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்திய நாட்டில் இதுபோன்று நடக்கும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் ஏராளம்.

கரோனாவுக்கு முந்தைய கணக்கீட்டின்படி 2019-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் 7 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வரதட்சணைக் கொடுமைகள் வழக்குகளாக பதியப்பட்டன.

2010-ம் ஆண்டு இது 8,391-ஆக இருந்தது. வரதட்சணைக் கொடுமையால் அதிகம் இறந்த பெண்கள் பட்டியலில் இந்தியா அப்போது முதலிடத்தையும் பிடித்திருந்தது.

தேசிய குற்றப்பதிவு ஆணையகம் அளித்துள்ள தகவலின்படி நாட்டில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் பலியாகின்றனர். ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.

கேரளத்தில் அடுத்தடுத்து நடந்த வரதட்சணைக் கொடுமை மரணங்கள் புதிதாய் நடப்பதில்லை என்றாலும், அவை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மக்களிடையே பொது விவாதத்தை மீண்டும் அது ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக வரதட்சணைக் கொடுமைகள் குறித்த புகார்களைத்  தெரிவிக்க 94979 96992 என்ற உதவி எண்ணை  அறிவித்து உடனடி விசாரணை நடத்த பெண் உதவி ஆய்வாளரை முதன்மை அதிகாரியாகவும் கேரள அரசு நியமித்துள்ளது. aparajitha.pol@kerala.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் பள்ளிக் கல்வியில் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

இத்தகைய நடவடிக்கைகள் பெண்கள் மீதான கற்பிதங்களைப் பள்ளிப் பருவத்திலிருந்தே தகர்த்தெறியும் முயற்சியாக இருக்கும் என நம்பலாம். ஆனால் பெண்கள் மீது கெளரவம் காக்கும் குடும்பங்களுக்கு எந்தத் திட்டத்தில் பாடங்களை நடத்துவது என்று தெரியவில்லை.

திருமணத்திற்கு வரதட்சணை தர மாட்டோம் என்பதை ஓர் இயக்கமாக கேரள பெண்கள் முன்னெடுத்துள்ளது பாராட்டத் தக்கது. மேலும் திருமணங்களை மண்டபங்களில் ஆடம்பரமாக நடத்துவதற்கு மாற்றாகப் பதிவாளர் அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்றும் பலதரப்பட்ட பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமணத்தில் பெண்களின் விருப்பங்களுக்கு எல்லா வகையிலும் சம உரிமையை வழங்காதவரை பெண் வீட்டாரைத் தாக்கும் தொற்றாக இந்த வரதட்சணை இருந்துகொண்டேதான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com