டிராக்டர் ஓட்டும் பெண்

பெண் விடுதலை குறித்த அவரது கனவு பல்வேறு இடையூறுகள், தடைக்கற்களைத் தாண்டி நனவாகி வருகிறது.
டிராக்டர் ஓட்டும் பெண்
டிராக்டர் ஓட்டும் பெண்


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
இளைப்பில்லை காண்... என்றான் மகாகவி பாரதி.

பெண் விடுதலை குறித்த அவரது கனவு பல்வேறு இடையூறுகள், தடைக்கற்களைத் தாண்டி நனவாகி வருகிறது. என்றாலும், சில கடினமான துறைகளில் பெண்களிடம் இன்னும் தயக்கமும் நிலவுகிறது. உடல், மன ரீதியாக செய்ய முடியும் என பெண்கள் நினைத்தாலும், சமூகம் என்ன நினைக்குமோ என்ற அச்சம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், திறமைகள் இருந்தும் பெண்களால் சாதனை படைக்க முடியாமல் வெறும் கனவாகவே தொடர்கிறது.

இரு சக்கர வாகனம், கார் ஓட்டுவதில் பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வம் மேலோங்கி, அதன் மீது இருந்த அச்சம் தணிந்துள்ளது. என்றாலும், டிராக்டர் ஓட்டுவதில் மிகச் சில பெண்களே முன் வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள ஆண்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஏ. எஸ்தர் லீமா (48). திருமணமாகாதவர். இவர் தஞ்சாவூரில் 2020, டிசம்பர் மாதம் தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டிராக்டரில் தனது ஊர் மக்களையும் ஏற்றிக் கொண்டு, ஏறத்தாழ 80 கி.மீ. தொலைவுக்கு தானே ஓட்டிக் கொண்டு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இடையிடையே சில இடங்களில் காவல் துறையினரின் கெடுபிடி இருந்தும், அதையெல்லாம் கடந்து வந்து பாராட்டையும் பெற்றார்.

டிராக்டர் ஓட்ட கற்றுக் கொண்டது குறித்து எஸ்தர் லீமா தெரிவித்தது:

சில சூழல்கள் காரணமாகக் குடும்பத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை எனக்கு ஏற்பட்டது. எனவே, விவசாயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தினேன். ஒரு முறை வயலில் உழவு செய்வதற்கு டிராக்டர் தேவைப்பட்டது. இதற்காக ஒருவரிடம் டிராக்டர் கேட்டுச் சென்றேன். அவர் வாடகைக்குத்தான் டிராக்டர் தருவேன் எனக் கூறினார். அதை வாங்கி வந்து வயலில் உழவு செய்தேன்.

அப்போது நாமே டிராக்டர் வாங்கி இயக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. 2006 ஆம் ஆண்டில் என்னிடம் இருந்த ரூ. 1 லட்சத்துடன் வங்கிக் கடனுதவி பெற்று ரூ. 4 லட்சத்துக்கு டிராக்டர் வாங்கினேன். முதலில் டிராக்டர் ஓட்டுவதற்கு ஆள் போட்டிருந்தேன். ஆனால், அவர் சரியாக வேலைக்கு வரவில்லை.

எனக்கு ஏற்கெனவே கார் ஓட்டத் தெரியும். எனவே, நாமே டிராக்டரை ஓட்டலாம் என துணிந்து ஓட்டத் தொடங்கினேன். முதலில் எங்களது தோப்பில் டிராக்டர் ஓட்டிக் கற்றுக் கொண்டேன். பின்னர், படிப்படியாக வயலில் உழவு செய்தல், டிப்பரில் நெல் ஏற்றி, இறக்குதல், கோடைகாலத்தில் மண் அடித்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக டிராக்டர் ஓட்டி வருகிறேன். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடும்பச் செலவு உள்ளிட்ட செலவுகள் செய்வதற்கு இந்த வருமானம் பெரிய உதவியாக இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு மீண்டும் வங்கி நிதியுதவியுடன் ரூ. 7 லட்சத்துக்கு புதிய டிராக்டர் வாங்கி ஓட்டி வருகிறேன்.

பொதுவாக டிராக்டர் ஓட்டுவது ரொம்பவும் சிரமம். சாலையில் ஓட்டுவது எளிதாக இருந்தாலும், வயலில் ஓட்டுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக சேற்றில் ஓட்டும்போது ஒரு புறமாக இழுத்துக் கொண்டு செல்லும். மழைகாலத்தில் ரொம்பவும் சிரமமாக இருக்கும். மண் சாலையில் ஓட்டும்போது சேற்றில் இறங்கினால் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு கவிழ்த்துவிட்டு விடும். இதைவிட டிப்பரை இணைத்து ஓட்டும்போது இன்னும் சிரமமாக இருக்கும். பின்புறமாக நகர்த்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், எதற்கும் பயப்படாமல், துணிச்சலாக ஓட்டினால் சமாளித்துவிடலாம்.

அதற்கு முதலில் ஆர்வம் வேண்டும். பெரும்பாலான பெண்கள் கார் ஓட்டுவதற்கு ஆசைப்படுகின்றனர். அதை கெளரவமாக நினைக்கின்றனர். ஆனால், டிராக்டர் ஓட்ட முன் வரத் தயங்குகின்றனர். இதுவே, டிராக்டர் ஓட்டும் பெண்கள் அரிதாகவே இருக்கின்றனர் என்றார் எஸ்தர் லீமா.

இவர் மேலும் பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது துணிச்சலான சேவையைப் பாராட்டி தஞ்சாவூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் இவர் கெளரவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com