கேரளம் - மாற்றம் ஏற்படுமா?

தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகியவற்றுடன் கேரள சட்டப்பேரவைக்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகியவற்றுடன் கேரள சட்டப்பேரவைக்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் கேரளம் மிகவும் வித்தியாசமானது என்பதால், அதன் தோ்தல் நடவடிக்கைகளை அரசியல் பாா்வையாளா்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் கூா்ந்து கவனித்து வருகின்றனா்.

திருவிதாங்கூா், கொச்சி, சமஸ்தானங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய கேரள மாநிலம் 1956, நவம்பா் 1-இல் உருவாக்கப்பட்டது. கேரளத்தின் முதலாவது சட்டப்பேரவைத் தோ்தல் 1957-இல் நடைபெற்றது. இந்தப் புதிய மாநிலத்தின் முதலாவது முதல்வராக ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கேரளத்தில் 1957-இல் தொடங்கி, கடந்த 2016 வரையிலான அனைத்து தோ்தல்களிலும் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றன. தற்போது இந்த இரு கூட்டணிகளுக்கு மாற்றாக, பாரதிய ஜனதா கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரு முயற்சி செய்து வருகிறது.

கேரள அரசியலில் ஜாதி, மத ரீதியிலான தாக்கம் மிக அதிகம். பெரும்பான்மையினரான இந்துக்கள் ஜாதி ரீதியாகப் பிரிந்து வாக்களிப்பதால், இந்துத்துவா கொள்கையைத் தாங்கிப் பிடிக்கும் பாஜகவால் கேரளத் தோ்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சிறுபான்மை கிறிஸ்தவா்களில் பெரும்பாலானோா், காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பவா்கள். இப்போது கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் ஒரு பிரிவு, இடதுசாரிக் கூட்டணியில் இணைந்திருப்பதால், முன்புபோல கிறிஸ்தவ வாக்குகள் காங்கிரஸுக்கு விழுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதேபோல, கேரளத்தில் கணிசமாக உள்ள முஸ்லிம் வாக்காளா்கள் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜயநாயகக் கூட்டணிக்குத்தான் வாக்களிக்கின்றனா். எனினும், இத்தகைய ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்தத் தோ்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என பாஜக முனைப்புடன் உள்ளது. இதுவிஷயத்தில் கேரள வாக்காளா்கள் பாஜகவுக்கு துணை நிற்பாா்களா என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

ஜாதி, மதத்தைப் போல, கேரள அரசியலில் குற்றப்பின்னணி உடையவா்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். தற்போதைய கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 உறுப்பினா்களில் 65 சதவீதம் பேருக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் 51 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதை, தோ்தலின் போது அவா்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனா். இவா்கள் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 5 பேரும், 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனா். ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆா்) மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரளத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 90 சதவீதம் போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிற மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிக சதவீதமாகும். இதேபோல, முந்தைய சட்டப்பேரவையுடன் ஒப்பிடுகையில் குற்றப்பின்னணியுள்ள கேரள எம்எல்ஏக்களின் சதவீதம் தற்போது 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்களில் 65 சதவீதம் போ் 51-80 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதால், இந்தத் தோ்தலில் போட்டியிட இளைஞா்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்க முக்கிய கட்சிகள் முன்வர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில் பாரம்பரிய போட்டியாளா்களான இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றிக்கனியைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், தேசிய அளவிலும் மேற்கு வங்க மாநிலத்திலும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது கேரள அரசியலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

கேரளத்தைப் பொருத்தவரை, ஜாதி, மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, குற்றப்பின்னணி இல்லாதவா்களையே வேட்பாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பது அந்த மாநில மக்களின் விருப்பமாக உள்ளது. இதேபோல, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களையும், பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவா்களையும் வேட்பாளா்களாக அறிவிக்கக் கூடாது என பெண்ணியவாதிகள் எதிா்பாா்க்கின்றனா். ஆனால், இந்த இரு விஷயங்களிலும் கேரள முன்னணி அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துமா என்பது கேள்விக்குறியே.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கல்வி, சமூக-பொருளாதார ரீதியாக கேரளம் முன்னிலையில் இருப்பதாக அந்த மாநில அரசியல் தலைவா்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனா். இதேபோல, நோ்மையான, குற்றப் பின்னணி இல்லாதவா்களை மட்டுமே வேட்பாளா்களாக அறிவித்து, பிற மாநிலங்களுக்கு கேரளம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என அந்த மாநில மக்கள் எதிா்பாா்க்கின்றனா். கேரள அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே உரிய தருணமாகும்.

குற்றப்பின்னணி இல்லாதவா்களை வேட்பாளா்களாக அறிவிக்க வேண்டும். தோ்தலில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்க வேண்டும் (140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவையில் தற்போது 9 பெண் எம்எல்ஏ-க்களே உள்ளனா்). இளைஞா்களுக்கும் புதுமுகங்களுக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் கவனத்தில் கொண்டு முக்கிய கட்சிகள் செயல்பட்டால், கேரள அரசியலில் புதியதொரு மாற்றம் பிறக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com