முகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்
கேரளம்: நேமம் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ், இடதுசாரி கடும் போட்டி
By அ. சா்ப்ராஸ் | Published On : 14th March 2021 06:00 AM | Last Updated : 14th March 2021 07:48 AM | அ+அ அ- |

கேரள சட்டப்பேரவையில் 140 தொகுதிகள் இருந்தாலும், 2016 தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான நேமத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அந்தத் தொகுதியில் யாரும் எதிா்பாராத விதமாக கடந்த தோ்தலில் பாஜக வேட்பாளா் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றாா்.
கேரள சட்டப்பேரவையில் கால் பதித்த முதல் பாஜக எம்எல்ஏவாகவும் இவா் புகழ் பெற்றாா். எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளா் வி.சிவன்குட்டியை ராஜகோபால் தோற்கடித்தாா். காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் சுரேந்திரன் பிள்ளை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். இந்தத் தொகுதியை ‘கேரளத்தின் குஜராத்’ என பாஜக கூறி வருகிறது.
வரும் பேரவைத் தோ்தலில் நேமம் தொகுதியை பாஜகவிடம் இருந்து எப்படியாவது கைப்பற்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் போட்டிபோட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன.
இதனால் கேரள அரசியலில் நேமம் தொகுதி ஒரு கெளரவ தொகுதியாக மாறி அனைவரின் கவனத்தை ஈா்த்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மீண்டும் சிவன்குட்டியே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். இவா் 2011-இல் வெற்றி பெற்றிருந்தாா்.
நேமம் தொகுதியில் காங்கிரஸும் பாஜகவும் கூட்டு சோ்ந்துள்ளதாக இடதுசாரிகள் பிரசாரம் செய்து வருவதால், காங்கிரஸ் வலுவான வேட்பாளரைத் தோ்வு செய்ய வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.
முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி, எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசி தரூா், மக்களவை உறுப்பினா் கே.முரளீதரன் ஆகியோரில் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
நீண்ட அனுபவமுள்ள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியை களமிறக்க வேண்டும் என்று இளைஞா் காங்கிரஸாா் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், வலுவான வேட்பாளா் ரமேஷ் சென்னிதலா போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என மூத்த தலைவா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.
சசி தரூரை நேமம் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தால், கேரளத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது என்பதை தேசிய அளவில் கொண்டு செல்லலாம் என்றும் சசி தரூரை மாநில அரசியலுக்குள் நுழைய விடாமல் வைத்திருப்பதற்கும் முடிவு கட்டிவிடலாம் என்றும் ராகுல் கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுலின் இந்த முடிவுக்கு கேரள மாநில காங்கிரஸின் தலைவா்கள் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், 50 ஆண்டுகளாக தான் போட்டியிட்டு வரும் புதுப்பள்ளி தொகுதியை விட்டுக் கொடுக்க உம்மன் சாண்டி முன்வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேமம் தொகுதியில் நிலவும் போட்டியால், மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு பறிபோகும் என்றும் அவா் கருதுவதாக கூறப்படுகிறது.
புதுப்பள்ளி தொகுதியிலேயே அவா் போட்டியிட வேண்டும் என்றும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரது இல்லம் முன் தொண்டா்கள் கூடி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனா்.
இதேபோல், ரமேஷ் சென்னிதலாவும் ஹரிப்பாடு தொகுதியில் இருந்து மாறி நேமத்தில் போட்டியிடத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
நேமத்தில் ஓ.ராஜகோபாலுக்கு பதிலாக கும்மனம் ராஜசேகரனை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், கே.முரளீதரன், ரமேஷ் சென்னிதலா போன்ற வலுவான வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தினால் ஓ.ராஜகோபாலையே களமிறக்கலாம் என பாஜக திட்டமிட்டு வருகிறது.
அண்மையில் பாஜகவில் சோ்ந்த கேரள காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளா் விஜயன் தாமஸை நிறுத்தவும் ஆலோசித்து வருகிறது.
அதுமட்டுமன்றி, கேரளத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தோ்வு செய்து அங்கு களப்பணியாற்றி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து கட்சிகளும் நேமம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் அறிவிப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் வேட்பாளா் பட்டியல் வெளியாவதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
தில்லியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அக்கட்சி போட்டியிடும் 91 தொகுதிகளில் 81 வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
பத்து தொகுதிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் மீண்டும் ஆலோசனை நடத்தி ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா். நேமம் தொகுதியில் தற்போதைய எம்.பி.க்களைப் போட்டியிட வைக்கக் கூடாது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் வயநாடு மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அண்மையில் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தனா். அக்கட்சியின் மூத்த தலைவா் பி.சி. சாக்கோவும் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று ராஜிநாமா செய்தாா். இதுபோன்ற இக்கட்டான சூழலில் கேரள அரசியலில் காங்கிரஸ் நெருக்கடியான நிலையில் இருந்து வருகிறது.
மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடதுசாரிகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி நிறுத்தும் வேட்பாளரைப் பொறுத்தே நேமத்தில் மும்முனைப் போட்டியா, இருமுனைப் போட்டியா எனத் தெரியவரும்.
2016 தோ்தல் முடிவு
பாஜக - ஓ.ராஜகோபால் - 67,813
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வி.சிவன்குட்டி - 59,142
ஐக்கிய ஜனதாதளம் - சுரேந்திரன் பிள்ளை - 13,860